Published : 08 May 2014 12:30 PM
Last Updated : 08 May 2014 12:30 PM

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தாமதமின்றி நடவடிக்கை: கருணாநிதி வலியுறுத்தல்

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தாமதமின்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ள திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "முல்லைப் பெரியாறு பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த உடன், அதுகுறித்து மகிழ்ச்சியடைந்தேன்.

ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தனக்கே உரிய பாணியில் அபாண்டமான சில செய்திகளைக் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழக அரசும், கேரள அரசும் முல்லைப் பெரியாறு அணை குறித்து தனித்தனியாக இரு மாநில உயர் நீதி மன்றங்களில் வழக்கு தொடுத்திருந்த நிலையில்,கடந்த 1998-ம் ஆண்டு திமுக ஆட்சியிலேதான், இரண்டு மாநில வழக்குகளையும் ஒரே வழக்காக விசாரிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது, அந்த மனுவின் மீதுதான் உச்ச நீதிமன்றம் 142 அடி வரை நீரைத் தேக்கிக்கொள்ளலாம் என்றும், அணையைப் பலப்படுத்துவதற்கு எஞ்சியுள்ள பணிகள் முடிவுற்றவுடன், படிப்படியாக 152 அடி வரை நீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்றும் 2006-ல் உத்தரவிட்டதை ஜெயலலிதா தன்னுடைய அறிக்கையில் முழுப்பூசணிக்காயை இலைச் சோற்றிலே மறைப்பதைப் போல மறைத்து திசை திருப்பிட முயற்சித்திருக்கிறார்.

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு, ஆய்வு, வாதம் என வழக்கு இழுத்தடிக்கப்பட்டு, இறுதியாக 2006இல் வழங்கிய அதே தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மீண்டும் வழங்கியுள்ளது. தாமதமாகக் கிடைத்த இந்த நீதிக்கு, பாராட்டு விழா நடத்துவது முக்கியமல்ல. தீர்ப்பு நகலைப் பெற்று, அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அ.தி.மு.க. அரசு உடனே செயல்படுத்த வேண்டும்.

அணையில் 142 அடிக்குத் தண்ணீர் தேங்காத அளவுக்கு மதகுகள், 152 அடிக்கு மேல் உயர்த்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த மதகுகளை உடனே 136 அடிக்கு இறக்க வேண்டும்” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ள பெரியாறு - வைகை விவசாயிகளின் அவசர அவசியத்தையும்;“அணையைப் பலப்படுத்துவதற்கு எஞ்சியுள்ள பணிகள் முடிவுற்றவுடன், படிப்படியாக 152 அடி வரை நீரைத் தேக்கிக் கொள்ளலாம்” என்று 27-2-2006 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருப்பதையும்; ஆழ்ந்து கவனித்து அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளை ஜெயலலிதா முனைப்போடு மேற்கொள்ள வேண்டுமேயல்லாமல், தேவையற்ற அறிக்கைகளை வெளியிட்டு, பயனற்ற முறையில் காலத்தைக் கடத்தி,நீண்டகாலமாகக் காத்திருக்கும் விவசாயிகளுக்குப் பாசன நீரையும், பொதுமக்களுக்கு குடிநீரையும் வழங்குவதைத் தாமதப்படுத்திவிடக் கூடாது என்றே தேனி, திண்டுக்கல்,மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலே உள்ள மக்கள் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும்". இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x