Last Updated : 12 Mar, 2015 08:30 AM

 

Published : 12 Mar 2015 08:30 AM
Last Updated : 12 Mar 2015 08:30 AM

நெல்லை, தூத்துக்குடியில் 10 மாதங்களில் 75 கொலைகள்: ஜாதி வெறிக்கு 25 பேர் பலி

இயலாமையில் போலீஸார்: சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

தாமிரவருணியின் பாசன பூமியான திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள், ஜாதிய மோதல் களால் ரத்தக் கறை தோய்ந்திருக் கின்றன.

கடந்த 10 மாதங்களில் சுமார் 100 பேர் கொலை செய்யப்பட்டிருப் பதும், அதில் 25 பேர் வரை ஜாதி வெறிக்குப் பலியாகி இருப் பதும் தென்பாண்டி சீமைக்கு தலைக் குனிவை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் எங்கு கொலை நிகழ்ந்தாலும் அதில் ஈடுபட்டவர்களில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்தவரும் இருக்கிறார் என்ற அவப்பெயர் பல ஆண்டுகளாகவே நிலவுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் தமிழக காவல் துறை சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், தமிழகம் முழுவதும் போலீஸ் நிலையங்களில் பராமரிக்கப்படும் ரவுடிகள் பட்டியலின்படி 16,502 ரவுடிகள் இருப்பதாக தெரிவிக்கப் பட்டிருந்தது. அதில், முதலிடம் சென்னைக்கு (3,175 ரவுடிகள்), 2-வது இடம் திருநெல்வேலி மாவட்டத்துக்கு. திருநெல்வேலி மாநகரில் மட்டும் 334 ரவுடிகளும், புறநகர் பகுதிகளில் 1,214 ரவுடிகளும் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2007-ம் ஆண்டில் 90 கொலைகள், 2008-ல் 89, 2009-ல் 95, 2010-ல் 83, 2011-ல் 97, 2012-ல் 93, 2013-ல் 98 கொலைகள் நடைபெற்றதாக காவல் துறை தெரிவிக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை கூலிப் படையினராலும், 25 சதவீத கொலைகள் ஜாதிய மோதல் பின்னணியிலும் நிகழ்ந்தவை.

கடந்த 10 மாதங்களில் திருநெல் வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 100 கொலைகள் நடைபெற்றுள்ளன. சொத்துத் தகராறு, குடும்பத் தகராறு, முறைகேடான உறவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 70 சதவீத கொலைகள் நடை பெற்றுள்ளன. மீதமுள்ளவை இந்த மாவட்டங்களில் புரையோடி யிருக்கும் ஜாதி மோதலின் வெளிப்பாடுகள். அந்த வகையில் 2 மாதங்களாக தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் தொடர் கொலைகள் அரங்கேறி வருகின்றன.

தயங்கும் போலீஸார்

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் 20 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை குறிவைக்கும் சமூகவிரோத கும்பல், அவர்களை கூலிப்படையாக பயன்படுத்துகிறது. அந்த கூலிப் படையினரை ஏவும் முக்கிய புள்ளிகளை கைது செய்ய போலீஸார் தயங்குவதாலேயே பிரச்சினை முடிவுறாமல் தொடர் கிறது. ஜாதி மோதல்களை முளையிலேயே கிள்ளி எறியும் அளவுக்கு இந்த மாவட்டங்களில் உளவுப் பிரிவு போலீஸார் செயல்படவில்லை.

`ஜாதி மோதல்களை தூண்டி விடும் அளவுக்கு முக்கிய ஜாதிகளை சேர்ந்த சாதாரண போலீஸார் முதல் உயர் அதிகாரிகள் வரை செயல்படுவதும் பிரச்சினைக்கு தூபம்போடுவதாக இருக்கிறது’ என்று இப்பகுதியில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே தெற்கு கரந்தானேரியில் ஆயுதங்களை தாங்கிய கும்பலால் இரு அப்பாவிகள் கொலை செய்யப் பட்டனர். அந்தக் கொலை யாளிகளுக்கு முக்கிய ஜாதி தலைவர் ஒருவர் அடைக்கலம் கொடுத்திருந்தார். இதனால், கொலையாளிகளைப் பிடிக்க முடியாமல் போலீஸார் திணறினர். கடைசியில் அந்த ஜாதி தலைவரிடம் போலீஸார் கெஞ்சி- கூத்தாடி ஒரு சிலரை ஒப்படைக்க கேட்டுக் கொண்டதாக போலீஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

`குற்றவாளிகளையும், அதற்கு தூண்டுகோலாக இருப்பவர் களையும், அவர்களுக்கு அடைக்கலம் தருவோரையும் பாரபட்சமின்றி சட்டத்தின் முன் நிறுத்தும் பொறுப்பு போலீஸாருக்கு இருக்கிறது.

ஆனால், அதிலிருந்து அவர்கள் விலகிச் சென்றுவிட்டதால் ஜாதி மோதல் கொலைகள் தொடர்கதையாகி வருகின்றன’ என்றார் ஓய்வு பெற்ற அந்த போலீஸ் அதிகாரி.

ஜாதிய பின்னணி போலீஸார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏவும், கட்சியின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவின் உறுப்பினருமான ஆர்.கிருஷ்ணன் கூறும்போது, ‘திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் காவல் துறை அதிகாரிகள் நியமனத்தில் குறிப்பிட்ட பெரிய ஜாதிகளை சேர்ந்தவர்களை நியமிக்கக் கூடாது. நேர்மையான இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பிக்களை நியமிக்க வேண்டும்’ என்றார் அவர்.

‘குண்டர் சட்டத்தை அதிகளவில் பிரயோகம் செய்வதன்மூலம் போலீஸார் தங்கள் தரப்பு இயலாமையை மறைக்கிறார்கள். சந்தேகப்படும் வகையில் கைது செய்யப்படுவோர் முழுநேர குற்றவாளிகளாக மாறுவது போலீஸாரின் நடவடிக்கை களால்தான். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆயுத வன்முறையாளர்கள் குறித்த கணக்கெடுப்பும், குற்றவாளிகளின் ஜாதி சார்ந்த கணக்கெடுப்பும், இளங்குற்றவாளிகள் குறித்த ஆய்வும் அவசியம். அதன் தொடர்ச்சியாக ரவுடிகள் ராஜ்யத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x