Published : 01 Feb 2015 12:21 PM
Last Updated : 01 Feb 2015 12:21 PM

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கல்வி அமைப்பு இல்லை: நாஸ்காம் இயக்குநர் கருத்து

வளர்ந்து வரும் தொழில் நுட்பத்துக்கு ஏற்றவாறு கல்வி முறை வளரவில்லை என்று மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய அமைப் பின் (நாஸ்காம்) மூத்த இயக்குநர் கே.புருஷோத்தமன் கூறியுள்ளார்.

டிஜிட்டல் தொழில்நுட்பத் துறைக்கான இரண்டு நாள் இலவச வேலை வாய்ப்பு முகாம் சென்னை சாந்தோமில் நேற்று தொடங்கியது. இமேஜ் இன்போடெயின்மென்ட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இந்த முகாமில் 21 நிறுவனங்கள் பங்கேற்றன. ஐஏஎஸ் அதிகாரி அதுல் ஆனந்த் இதைத் தொடங்கிவைத்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நாஸ்காம் அமைப்பின் மூத்த இயக்குநர் புருஷோத்தமன் செய்தியாளர்களை சந்தித்தார். ஐடி நிறுவனங்களில் வேலை இழப்பு ஏற்படுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது:

ஐடி துறையில் 30 சதவீதம் வளர்ச்சி இருந்தபோது, மாணவர்களை மொத்தமாக பணிக்கு அமர்த்தினார்கள். ஆனால், கடந்த மூன்று ஆண்டு களாக சராசரியாக 15 சதவீதம் வளர்ச்சிதான் உள்ளது. அதற்கேற்ற பணியாளர்கள்தான் வேலைக்கு எடுக்கப்படுவார்கள். இந்தியாவில் இப்போது 31 லட்சம் பேர் ஐடி துறையில் பணியில் இருக்கிறார்கள். தமிழகத்தில் சுமார் 3.5 லட்சம் பேர் இந்த துறையில் பணியாற்றுகிறார்கள். குறிப்பிட்ட நிறுவனத்தில் ஏற்படும் வேலை இழப்பு என்பது அந்த நிறுவனத்தின் பிரச்சினை.

தொழில்நுட்பம் ஒவ்வொரு நாளும் வேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள 600 பொறியியல் கல்லூரி களிலும் அதற்கேற்ற பாடமுறை கிடையாது. குறிப்பாக இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் உள்ள கல்லூரிகளை தொழில்நுட்ப வளர்ச்சி சென்றடைவதில்லை. ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் பணியாளர்களுள் குறிப்பிட்ட சதவீதத்தினர் செயல்படாதவர் களாக உள்ளனர்.

ஐடி துறையில் ஒவ்வொரு ஆண்டும் 30ஆயிரம் மாணவர்கள் புதிதாக வேலைக்கு எடுக்கப் படுகிறார்கள். இந்த ஆண்டு இது வரை 18ஆயிரம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப் பட்டுள்ளது. இந்த துறையின் 60 சதவீத செயல்பாடுகள் அமெரிக் காவை நம்பியும் 40 சதவீத செயல்பாடுகள் மற்ற நாடுகளை நம்பியும் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இமேஜ் இன்போடெயின் மெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே. குமார் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

வேலை வாய்ப்புகள் அதிகமுள்ள டிஜிட்டல் தொழில்நுட்பத் துறை பற்றி மாணவர்களிடையே விழிப்புணர்வு இல்லை. அதனால் இத்துறைக்கு தேவையான ஆட்கள் கிடைப்பதில்லை. அமேசான் நிறுவனத்துக்கு இந்த ஆண்டு 150 பேர் தேவைப்படுகிறார்கள். ஆனால் 50 மாணவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்து ஒரு சில குறிப்பிட்ட பயிற்சிகள் எடுத்துக் கொண்டால், இந்த துறையில் யார் வேண்டுமானாலும் பணியாற்றலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x