Published : 11 Feb 2015 10:01 AM
Last Updated : 11 Feb 2015 10:01 AM

குருதி ஆட்டம் 22 - கண்ணுல நெறிக் கட்டுது!

வாசலில் வந்திறங்கிய பெருநாழி முதலாளியைக் கண்டதும் மைய மண்டபத்தில் அமர்ந்திருந்த உடையப்பன், எழுந்து ஓடிப் போய் “வாங்க முதலாளி” எனக் கைகூப்பி வணங்கினான்.

தலை வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்த கணக்குப்பிள்ளை ரத்னாபிஷேகத்துக்கு, தன் கண்களையே நம்ப முடியவில்லை.

உடையப்பனைக் கண்டு ஆப்ப நாடே கை கட்டி நிக்குது. தான் அரண்மனைக் கணக்குப்பிள்ளையாகக் கடத்திய இத்தனை ஆண்டுகளில், யாரையும் உடையப்பன் வணங்கியே பார்த்தது இல்லை. கூனிக் குறுகி, கும்பிடு போடும் குடியான சனங்களுக்கு பதில் மரியாதையாக, உடையப்பன் தலையைக் கூட ஆட்டுவது இல்லை. பெருநாழி முதலாளியைக் கண்டதும் குழைகிறானே! இந்தப் பெருநாழி முதலாளி யாரு? எப்படிப்பட்ட ஆளு?

பெருநாழி முதலாளி, ஐந்தடி உயரக் குள்ளன். வழுக்கைத் தலை. முகத்திலும் உடம்பிலும் முடி முளைத்ததற்கு அடையாளமே இல்லாதவன். மழு மழுத்த திரேகம். ஆப்ப நாட்டுக்கு ஒவ்வாத நிறம். ஆளும் வர்க்கக் கைக் கூலி. ஊருத் தாலியை அறுத்து, உலையில் ஏத்துற வியாபாரி. உடையப்பனையும் மிஞ்சின பணக்காரன்.

உடையப்பன் அடிக்கடி பெருநாழி போவான். ஆனால், பெருநாழி முதலாளி இங்கே வர்றது, இதுதான் முதல் முறை. அதுவும் நாளை, பத்தாம் நாள் திருவிழாவை முன் வைத்து வந்திருக்கிறான். 17 வருஷமா ரத்தப் பலி காணாமல் இருந்த இருளப்பசாமி, எல்லாரையும் ஒண்ணுச் சேர்த்து இழுக்கிறாரே!

என்ன காரணம்? நினைச்சாலே கண் ணுலே நெறிக் கட்டுது. தலையை உலுப்பிக் கொண்டார் ரத்னாபிஷேகம் பிள்ளை.

மைய மண்டபத்தின் நாயகமாக பெருநாழி முதலாளியை அமர வைத்து, எதிர் இருக்கையில் அமர்ந்தான் உடையப்பன்.

அரண்மனை உள் விதானங்களின் ஆடம்பரமான அலங்காரங்களை, உட்கார்ந்தவாக்கில் ஒரு சுற்றுப் பார்த்த பெருநாழி முதலாளி, “உடையப்பா… உன் ஜாதகத்தை இருபது வருஷத்துக்கு முன்னாடியே, சரியா கணிச்சவன் நான்தான்!” பலக்க சிரித்தபடி பேச ஆரம்பித்ததும் உடையப்பன் நெளிந்தான்.

திரும்பி, கணக்குப்பிள்ளையைப் பார்த்தான். “கணக்கு… நீங்க போயி, கோயில் காரியங்களைப் பாருங்க” என்றான்.

“உத்தரவு அரண்மனை.” கணக்குப் பிள்ளை ரத்னாபிஷேகம் குனிந்தவாறே பின் நகர்ந்தார்.

மைய மண்டபத்தில் இருந்து பிரியும் எல்லா அறை வாசல்களையும் ஒரு சுற்றுப் பார்த்தான் உடையப்பன். சாப்பாட்டு அறை யின் நுழைவிடத்தில் ‘கூழு’ நின்றிருந்தான்.

“டேய்… கூழு!” என அழைத்தான்.

“ஹ்ம்… இந்தா வர்றேன்” இடை நெளித்து நடந்து வந்தான் ‘கூழு’.

“எல்லாம் ஆயிருச்சா?”

“மானு, மயிலு, காடை, கவுதாரி, ஆடு, கோழி அத்தனையும் பல்லுக்கும் நாக்குக்கும் பதமா… ஆக்கி வெச்சிருக்கேன். அரண்மனை வந்து கை வைக்க வேண்டியதுதான் பாக்கி.” வெற்றிலை வாயோடு, பெருநாழி முதலாளியைக் கண் சுழற்றிப் பார்த்தான் ‘கூழு’. பெருநாழி முதலாளிக்கு, தன் வீட்டு சமையல்காரன் பச்சையப்பனின் நினைவு வந்தது.

“போ… போ. உள்ளே போ” ‘கூழு’வைத் துரத்தினான் உடையப்பன். ‘கூழு’ நகர்ந்தான்.

“உடையப்பா… நீ செய்த ஒத்தச் செய்கை. உன்னை எம்புட்டு உயரத்தில உட்கார வெச்சிருச்சு பார்த்தியா?” வலது கையை நீட்டி, அரண்மனையை ஒரு சுற்று சுற்றிக் காட்டினான்.

“எல்லாம் உங்க யோசனையும் ஒத்துழைப்பும்தான் முதலாளி!”

“சொன்ன சொல்லைக் காப்பாத்துறதுல வெள்ளக்காரன், வெள்ளக்காரன்தான்! ‘இந்தக் காரியத்தை முடி. ஆப்ப நாட்டுல பாதி உனக்குத்தான்’ன்னு, சொன்ன மாதிரியே வெள்ளக்காரன் உனக்குக் கொடுத்துட்டுப் போயிட்டானே!”

பெருநாழி முதலாளி பேசப் பேச… கவிழ்ந்தவாறு சிரித்துக் கொண்டிருந்தான் உடையப்பன்.

“ஆமா…‘அதுக’ என்னாச்சு?”

“ ‘எதுக’ முதலாளி?”

“கப்பலேத்தி நாடு கடத்திவிட்டோமே… மேற்படியான் வாரிசுகள். அந்த ரெண்டும்?”

கவிழ்ந்த தலை நிமிர்ந்து, “ ‘அதுக’ ரெண்டும் மலேசியக் காட்டிலேயே மண்ணோடு மண்ணா மக்கிப் போயிருக்குங்க முதலாளி. போனதோடு சரி. ஒரு தகவலும் இல்லை” சிரித்தான் உடையப்பன்.

ஆழ்ந்த யோசனைக்குப் பின், “இருபது வருஷமாச்சு உடையப்பா. இன்னைக்கு அவன் உயிரோடு இல்லை. அவனை நெனைச்சா… இப்பவும் நெஞ்சு, பதபதங்குது! நமக்கெல்லாம் எதிரிதான் அவன். ஆனாலும் பெரிய சூரப் புலி. எதிர்த்து வந்த துப்பாக்கி, பீரங்கியை எல்லாம், சோளத் தட்டையை முறிக்கிற மாதிரி முறிச்சு எறிஞ்சானே!” வாய் நிறையப் பேசினான் பெருநாழி முதலாளி.

மறுபடியும் தலையைச் சுழற்றி ஒரு பார்வை பார்த்தவன், “என் வீடும் இந்த மாதிரி அரண்மனைதான். அந்தப் பாவிப் பயல், குண்டு வெச்சுத் தகர்த்து தரைமட்டமாக்கிட்டான். வீடு போனால் போகுது. நான் உயிரோடு தப்பிச்சேனே… அதுதான் பெரிய காரியம்!” சந்தோஷப்பட்டுக் கொண்டான்.

“பழசை விடுங்க முதலாளி” என்றவன், சிறு யோசனையில் ஆழ்ந்தான்.

“உடையப்பா… என்ன யோசனை?”

“ஒண்ணுமில்லை. அன்னைக்கு நடந்த சம்பவத் துக்கு, ஒரே ஒரு சாட்சி, உயி ரோடு இருக்கு” என உடை யப்பன் சொல்லி முடிக்க வில்லை.

“என்னது… உயிரோடு ஒரு சாட்சி இருக்கா?” பதறி, இருக்கையின் நுனிக்கு வந்தான் பெருநாழி முதலாளி.

“ஆமாம். இந்தக் கோயில் கொடையை நான் ஏற்பாடு பண்ணியதே, அந்தச் சாட்சியை அழிக்கத்தான்!”

“ஏய்… உடையப்பா! என்ன சொல்ற நீ? யார் அந்தச் சாட்சி?”

“அட, விடுங்க முதலாளி! யானையையே கொன்னு, நடு வீட்டில பொதைச்சிருக்கோம். இது, பூனை! ஆடு, கோழியை அறுக்கிற மாதிரி, அறுத்து எறிஞ்சிருவோம். எந்திரிங்க. விருந்து காத்திருக்கு” என்றவன் எழுந்தான்.

குடிசை

வாசலில் நின்ற செவ்வந்தியைக் கண்டதும் அரியநாச்சி கேட்டாள். “தவசி… யாரு இது. உன் மகளா?”

“ஆமாம் தாயி.”

செவ்வந்தியை அணைத்துக் கொண்ட அரியநாச்சி, “பேரு என்னம்மா?” தலை கோதினாள்.

“செவ்வந்தி” அரியநாச்சிக்கு பதில் சொல்லிக்கொண்டே, துரைசிங்கத்தைப் பார்த்தாள் செவ்வந்தி.

குருதி பெருகும்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள:

irulappasamy21@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x