Published : 03 Feb 2015 10:40 AM
Last Updated : 03 Feb 2015 10:40 AM

உலக மசாலா- சிரிக்காமல் இருந்தால் அழகாகலாம்!

பிரிட்டனில் வசிக்கிறார் டெஸ் கிறிஸ்டியன். 50 வயதைக் கடந்த டெஸ், கடந்த 40 ஆண்டுகளாகச் சிரிப்பதே இல்லை. சிரித்தால் முகத்தில் சுருக்கம் வரும் என்பதால் சிரிப்பதில்லை என்கிறார் டெஸ். ‘பத்து வயதிலேயே நான் இந்த உண்மையைக் கண்டுகொண்டேன்.

நான் படித்த பள்ளியில் முகத்துக்கு க்ரீம்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை. அழகைப் பாதுகாக்க என்ன செய்யலாம் என்று யோசித்தேன். சிரிப்பதால்தான் முகத்தில் சுருக்கம் தோன்றி வயதான தோற்றம் வருகிறது. அதனால் சிரிப்பதை விட்டுவிட்டேன்’ என்கிறார் டெஸ்.

எந்தச் சூழ்நிலையிலும் சிரிக்காமல் இருக்க பயிற்சி பெற்றிருக்கிறார். காலப்போக்கில் சிரிப்பு என்ற ஒன்றே அவரிடம் இல்லாமல் போய்விட்டது. 50 வயதிலும் இளமையாகத் தெரிவதற்கு, சிரிக்காததுதான் காரணம் என்கிறார். இவரைப் பார்த்து சில பிரபலங்களும் சிரிப்பதைக் குறைத்து வருகிறார்கள்.

வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்னு சொல்வாங்களே… இது விநோதமா இருக்கு!

ஸ்காட்லாந்தில் வசிக்கும் 15 வயது ஜாக் ட்ரூமன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்தார். ஆனால் உடல் முழுவதும் புற்றுநோய் பரவிவிட்டது. இனி பிழைக்க வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

ட்ரூமனை சந்தோஷமாக வழியனுப்பி வைக்க வேண்டும் என்று நினைத்தார் அவரது தோழி ஹன்னா பாய்ட். பள்ளியில் ஓர் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். ட்ரூமன் பங்கேற்கும் இறுதி நிகழ்ச்சி என்பதால் பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தனர். மருத்துவர்கள் ட்ரூமனை அழைத்துச் செல்ல வேண்டாம் என்று கூறினார்கள்.

ஆனால் ஹன்னா தன் தோழன் சந்தோஷமாக இறுதி நிமிடங்களைக் கழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். கால்பந்து வீரரான ட்ரூமனை கோட், சூட் அணிவித்து அழைத்துச் சென்றார். முகம் முழுவதும் மகிழ்ச்சியோடு சென்றார் ட்ரூமன்.

நிகழ்ச்சி முடிந்தவுடன் மாணவர்களும் ஆசிரியர்களும் ட்ரூமனை சூழ்ந்துகொண்டு உற்சாகப்படுத்தினார்கள். பள்ளியில் இருந்த பத்து நிமிடங்களையும் சந்தோஷமாகக் கழித்த ட்ரூமன், அன்று இரவு இறந்து போனார். புற்றுநோயைத் தைரியமாக எதிர்கொள்ள வைத்து, கடைசி நிமிடங்கள் வரை சந்தோஷமாகக் கழிக்க வைத்த ஹன்னாவுக்கு நன்றியைத் தெரிவித்திருக்கிறார் ட்ரூமனின் அம்மா.

அருமையான தோழி!

ஷாங்காய் நகரில் வசிக்கிறார் ஃபேங். ஒருநாள் தெருவில் ஆதரவற்ற நாயைக் கண்டார். அதை எடுத்து வந்து வளர்க்க ஆரம்பித்தார். மனிதர்களைப் போல இரண்டு கால்களால் நடக்க பயிற்சியளித்தார். விரைவிலேயே பின்னங்கால்களால் மட்டும் நடக்க ஆரம்பித்தது நாய்.

பெண்கள் அணியும் ஆடை, கழுத்துக்கு செயின், தொப்பி, கூலிங்கிளாஸ், முதுகில் பை எல்லாவற்றையும் அணிவித்து, தினமும் மார்கெட்டுக்கு அழைத்துச் செல்கிறார் ஃபேங். ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்பவர்களுக்கு, ‘இதுவும் என் குடும்பத்தில் ஒருத்தி. எங்களைப் போலவே நாயையும் பார்த்துக்கொள்கிறோம்’ என்கிறார் ஃபேங்.

ம்ம்… கொடுத்து வைத்த நாய்!

பிரிட்டனில் உள்ள மெக்ஸிகன் ஸ்ட்ரீன் உணவகங்களில் ஜனவரி மாதம் முதல் ஓர் உணவு அமோக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மொறுமொறுப்பான காரம் நிறைந்த வெட்டுக்கிளி வறுவலை வாரத்துக்கு 1,500 பேர் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.

2013-ம் ஆண்டில் மிகக் குறைந்த அளவில் வெட்டுக்கிளி உணவுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இன்று மிகப் பெரிய அளவில் மக்கள் ஆதரவு அளிக்கிறார்கள். உலகின் பல நாடுகளில் பூச்சிகள் உணவாக உட்கொள்ளப்படுகின்றன. ஐரோப்பிய நாடுகளிலும் பூச்சிகள் உண்ணும் கலாசாரம் வந்துவிட்டது. பூச்சிகளில் இருந்து ஏராளமான புரோட்டீன்கள் கிடைக்கின்றன என்கிறார்கள்.

இனி, பூச்சியா என்று யாரும் அதிர்ச்சி காட்ட மாட்டார்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x