Published : 21 Feb 2015 13:12 pm

Updated : 21 Feb 2015 13:12 pm

 

Published : 21 Feb 2015 01:12 PM
Last Updated : 21 Feb 2015 01:12 PM

கீன்வா, சியா மாற்றுப் பயிர் சாகுபடி - வழிகாட்டும் மத்திய நிறுவனம்

புதிதாகப் பிரபலமடைந்துவரும் கீன்வா (quinoa) மற்றும் சியா (chia) தானியச் சாகுபடிக்கு வழிகாட்டுகிறது கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் (சி.எஃப்.டி.ஆர்.ஐ).

வழக்கமான பயிர்களைச் சாகுபடி செய்வதிலிருந்து மாற்று சாகுபடி பயிர்களை ஊக்குவிப்பதன் மூலம் விவசாயிகள் கூடுதல் வருமானம் ஈட்ட முடியும் என்ற அடிப்படையில் இந்தத் தானியச் சாகுபடிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கீன்வா, சியா சாகுபடி தொடர்பாக, சி.எஃப்.டி.ஆர்.ஐ. இயக்குநர் ராம் ராஜசேகரன் கூறியதாவது:

கீன்வா, சியா விதைகள் அதிக ஊட்டச்சத்து கொண்ட தானியங்கள். இரு தானியங்களும் ‘சூப்பர் உணவு’ எனக் கருதப்படுகின்றன. கீன்வா தானியத்தில் 14 சதவீதம் புரதம் செறிந்திருக்கிறது. ஐ.நா. சபை கடந்த 2013-ம் ஆண்டை கீன்வாவை பிரபலப்படுத்தும் ஆண்டாக அனுசரித்தது.

கீன்வா, தென் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டது. அங்கிருந்து, ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆசியா, அமெரிக்காவுக்குப் பரவியது. சியா தானியம் மெக்ஸிகோ, தென் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டது. இதில், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் 60 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளன. நார்ச்சத்து 40 சதவீதத்துக்கும் அதிகம்.

இந்த இரு தானியங்களையும் மாலதி ஸ்ரீநிவாசன், ரமேஷ்குமார், ஸ்ரீதர் ரெட்டி ஆகியோர் அடங்கிய சி.எஃப்.டி.ஆர்.ஐ. விஞ்ஞானிகள் குழு இந்தியச் சாகுபடிக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தியுள்ளது. இந்தியச் சியா விதைகள் வெள்ளை நிறம் கொண்டவை. ஏற்கெனவே இருப்பதைவிட கூடுதல் மகசூல் தரும் உயர் ரகக் கீன்வா விதைகளை அறிமுகப்படுத்த இருக்கிறோம்.

கீன்வா சாகுபடி

கீன்வா முன்பட்டம் (காரிஃப்: ஜூன்-ஜூலை), குளிர்காலம் (ராபி: அக்டோபர்-நவம்பர்) என இரு பருவங்களிலும் நடவு செய்ய ஏற்றது. இப்பயிர் வறட்சியைத் தாங்கி வளரும். மிக வறட்சியான ராமநாதபுரம் மாவட்டத்திலேயே நன்கு வளரக்கூடியது என்பதால், அனைத்து வகை மண்ணிலும் சாகுபடி செய்ய முடியும். குறைந்த அளவு நீர் இருந்தால் (சுமார் 250 மி.மீ. மழைப் பொழிவு) போதுமானது. அதாவது, நெல் சாகுபடிக்குத் தேவைப்படும் நீரில் (1,200 மி.மீ.) 5-ல் ஒரு பங்கும், கோதுமைக்குத் தேவைப்படும் நீரில் (500 மி.மீ.) இரண்டில் ஒரு பங்கும் இருந்தாலே போதும்.

இரு முறை நன்கு உழவு செய்து, சமன்படுத்தப்பட்ட நிலத்தில் பயிரிடலாம். ஏக்கருக்கு 4 டன் சாண உரம் அல்லது 2 டன் மண்புழு உரம் பயன்படுத்தினால் கூடுதல் மகசூல் கிடைக்கும். மாற்றாக, ஏக்கருக்கு என்.பி.கே 15 கிலோ அடியுரமாகவும் பயன்படுத்தலாம். ஏக்கருக்கு அரை கிலோ விதை தேவைப்படும். போதுமான ஈரப்பதம் இருந்தால் 24 மணி நேரத்தில் முளைவிட்டு, ஒரு வாரத்துக்குள் இலைகள் துளிர்க்கும். இதுவரை பெரிய அளவில் பூச்சி தாக்குதல் இல்லை. பூச்சிகள் தென்பட்டால், வேப்ப எண்ணெய், சோப்பு நீர் கலந்து தெளித்தால் போதுமானது.

ஆரம்பக் கட்டத்தில் களை நீக்கம் வேண்டியிருக்கும். விதைக்கப்பட்ட 90 நாள் முதல் 120 நாட்களுக்குள் அறுவடைக்குத் தயாராகிவிடும். அறுவடை நேரத்தில் மழை இல்லாமல் இருப்பது நல்லது. தானியம் முற்றிய பின் மழை பெய்தால் ஈரம் பட்ட 24 மணி நேரத்தில் முளைத்து விடும் ஆபத்து உண்டு. ஏக்கருக்கு 500 முதல் 700 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.

சியா சாகுபடி

சியா முன்பட்டம், குளிர்காலச் சாகுபடிக்கு ஏற்றது. அரை அடி உயரத்துக்குப் பாத்திகள் அமைத்து நாற்றங்கால் தயார் செய்ய வேண்டும். 100 கிராம் விதையை அதே அளவு மணலுடன் கலந்து சீராக விதைக்க வேண்டும். விதைகளை மணல், மண்புழு உரம் கலந்த கலவையைக் கொண்டு மூட வேண்டும்.

உடனடியாக நீர் பாய்ச்சி ஈரப்பதத்தைத் தொடர்ந்து பேண வேண்டும். 21 நாட்களில் நாற்று தயாராகிவிடும். நன்கு உழவு செய்யப்பட்ட நிலத்தில், ஏக்கருக்கு 4 டன் சாண உரம், 100 கிலோ சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் (எஸ்.எஸ்.பி.), 16 கிலோ முரியேட் ஆப் பொட்டாஷ் (எம்.ஓ.பி.) கலவையை இட வேண்டும். இரண்டு அடிக்கு ஓர் அடி என்ற இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். 7-10 நாட்கள் இடைவெளியில் நீர்ப்பாய்ச்சி ஈரப்பதத்தைப் பேண வேண்டும். பயிர் வளர்ந்த பிறகு, நாற்று இடைவெளியில் 50 கிலோ யூரியா இட வேண்டும்.

பூச்சி தாக்குதல் இருக்காது. பூச்சிகள் தென்பட்டால், வேப்ப எண்ணெய், சோப்பு நீர் கலந்து தெளித்தால் போதும். களையின் அளவை, பொறுத்து, 2-3 மூன்று முறை களையெடுக்க வேண்டும். நடவுக்குப் பிறகு 40 முதல் 55 நாட்களில் அறுவடைக்குப் பின் பூ எடுக்கும். அதன்பின் 25-30 நாட்களில் கதிர் முற்றிவிடும். ஏக்கருக்கு 350 முதல் 400 கிலோவரை மகசூல் கிடைக்கும்.

சந்தை வாய்ப்பு

இந்த இரு தானியங்களுக்கும் சந்தையில் அதிகத் தேவை உள்ளது. ஒரு கிலோ கீன்வா ரூ. 2,000-க்கும், சியா ரூ. 1,800 என்ற அளவிலும் விற்பனையாகின்றன. இந்தத் தானியங்களை வாங்கும் நிறுவனங்களின் பட்டியலை விவசாயிகளுக்குக் கொடுத்து விடுவோம். அவர்களைத் தொடர்பு கொண்டால், வந்து வாங்கிச் சென்று விடுவார்கள்.

ஒவ்வொரு முறையும் விதை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. அறுவடை செய்த தானியத்தை எடுத்து வைத்து, மறுமுறை பயன்படுத்தலாம். இதனால் சக விவசாயிகளிடம் இருந்தே விதை கிடைக்கும். நெல்லைப் போல, அரவை செய்து பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. நேரடியாக உணவாகப் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் அம்சம். குழந்தைகளுக்குப் பயன்படுத்துவதன் மூலம் நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளையும் தவிர்க்க முடியும்.

இவ்வாறு ராம் ராஜசேகரன் தெரிவித்தார்.

ராம் ராஜசேகரனைத் தொடர்புகொள்ள: 082125 15910

கீன்வாசியாதானிய சாகுபடிமத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம்சி.எஃப்.டி.ஆர்.ஐசூப்பர் உணவு

You May Like

More From This Category

More From this Author

பால்கனிகள் பலவிதம்

இணைப்பிதழ்கள்