Published : 05 Feb 2015 10:35 am

Updated : 05 Feb 2015 10:35 am

 

Published : 05 Feb 2015 10:35 AM
Last Updated : 05 Feb 2015 10:35 AM

உருக்குலையுமா உக்ரைன்?- 4

4

1991 கிறிஸ்துமஸ் தினம் அன்று கோர்பஷேவ் ராஜினாமா செய்தார். ‘‘சோவியத் யூனியன் பிளவுபடுவது ஒரு மிகப் பெரும் துயர நிகழ்வு’’ என்றார்.

ஜனவரி 1992ல் சோவியத் குடியரசு பதினைந்து நாடுகளா கியது. உக்ரைன் அதில் ஒன்று.

தற்போதைய ரஷ்ய அதிபரான விளாதிமிர் புதின் ரஷ்யாவை நன்கு அறிந்தவர். அதன் குறிக்கோள்களை வடிவமைத்ததில் அவருக்கும் பங்கு உண்டு. (சோவியத் யூனியனின் அதிபராக 2000லிருந்து 2008 வரை இருந்தவர்தான் அவர்).

அவரால் சோவியத் யூனியன் சிதறுண்டதை ஏற்க முடியவில்லை. பிரிந்த நாடுகளை எல்லாம் ஒன்று சேர்ப்பது இப்போதைக்கு நடைமுறை சாத்தியமில்லை. என்றாலும் முடிந்த வரை முயற்சிக்கிறார் புதின். முடிந்தவரை என்றால்? பிரிந்த நாடுகளின் கொஞ்சூண்டு பகுதியை ரஷ்யாவுடன் இணைக்கும் வாய்ப்பு உண்டு என்று தெரிந்தாலே அதில் முழு மூச்சுடன் இறங்கிவிடுகிறார். உக்ரைன் ஒரு வெளிப்படையான எடுத்துக்காட்டு.

உக்ரைனில் ரஷ்யாவுக்குக் கிடைத்த ஒரு வெற்றி என்று கிரிமியாவைச் சொல்லலாம். கிரிமியா உக்ரைனின் ஒரு பகுதிதான். டாரிக் தீபகற்பம் என்றும் அழைக்கப்படுகிறது. கருங்கடலின் வடக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. சோவியத் யூனியனிலிருந்து பிரிந்தபோது கிரிமியா உக்ரைனின் பகுதிதான் என்பதை ரஷ்யாவும் ஒப்புக் கொண்டிருந்தது.

கிரிமியா என்பது ஒரு தன்னாட்சி பெற்ற குடியரசு. அதற்கென்று தனிப்பட்ட நாடாளுமன்றம் உண்டு. உக்ரைனில் இருந்தாலும் கிரிமியா தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்பது ரஷ்யாவின் எண்ணம்.

1991க்குப் பிறகு ரஷ்யாவின் எல்லைக்கோடுகள் குறித்து பலவித விமர்சனங்கள் அந்த நாட்டில் கிளம் பின. அவற்றில் மிக வலுவானது கிரிமியா தொடர்பானவைதான்.

உக்ரைன் தனி நாடாக ரஷ்யா அனுமதித்திருக்கக் கூடாது என்றனர் பலர். காரணம் நவீன ரஷ்யாவின் பிறப்பிடம் கீவ் பகுதிதான். (அதாவது உக்ரைனின் தலைநகர்). அதைவிட முக்கியமாக கிரிமியாவை ரஷ்யா விட்டுக் கொடுத்தது (அதாவது இழந்தது) அவர்களுக்கு மேலும் அதிர்ச்சி.

பல ரஷ்யர்களின் மனதில் உணர்வுபூர்வமாக இடம் பிடித்த ஒரு பகுதி கிரிமியா. கிரிமியப் போர் இங்குதான் நடந்தது. தவிர கிரிமியாவில் மிக அதிகம் வசிப்பவர்கள் ரஷ்யர்கள்தான், உக்ரைனியர்கள் அல்ல.

கிரிமியாவை தங்கள் மணிமகுடமாகவே நினைத்த ரஷ்யர்கள் உண்டு. அவர்கள் உக்ரைனின் பகுதியாக கிரிமியா மாறியதில் மிகவும் விசனப்பட்டார்கள்.

கிரிமியாவுக்கு தனி நாடாளுமன்றம் மட்டுமல்ல, ஒரு தனிப் பிரதமரும் உண்டு. ஆனால் இந்தப் பிரதமரை நியமிப்பதில் உக்ரைன் அரசின் அனுமதி அவசியம். ஆனால் கிரிமிய எம்.பி.க்கள் இணைந்து செர்ஜி அக்சயனோவ் என்பவரைப் பிரதமராகத் தேர்ந்தெடுத்தனர். இவர் ரஷ்ய ஆதரவாளர். கிரிமியா ரஷ்யாவுடன் சேர வேண்டும் என நினைப்பவர். இவர்தான் கிரிமியாவில் இது குறித்து பொது வாக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று அறிவித்தார்.

மார்ச் 16, 2014 அன்று ஒரு பொது வாக்கெடுப்பு கிரிமியாவில் நடைபெற்றது. வாக்குச் சீட்டில் இரண்டே கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்க வேண்டுமா? அல்லது அது உக்ரைனின் ஒரு பகுதியாகவே இருக்க வேண்டுமா?

வாக்களித்தவர்களில் 95 சதவிகி தத்தினர் ரஷ்யாவுடன் சேருவதற்கு ஆதரவளித்திருந்தனர். கிரிமியா மக்களின் எண்ணத்தை மதிப்பதாக புதின் அறிவித்தார். ஐரோப்பிய யூனியனும் அமெரிக்காவும் இந்தப் பொது வாக்கெடுப்பு சட்டமீறல் என்றன.

கிரிமியா மக்களில் பெரும்பாலானோர் ரஷ்யாவுடன் தங்களை இணைத்துக் கொள்ள சம்மதம் தெரிவித்ததோடு அதே வேகத்தில் ரஷ்யாவுடன் மார்ச், 2014-ல் இணைந்தும் விட்டார்கள். ரஷ்யா நாடாளுமன்றத்தில் கிரிமியா தன் நாட்டோடு சேர்ந்து விட்டதாக தீர்மானம் கொண்டு வந்துவிட்டது.

போதாக்குறைக்கு உக்ரைனி லுள்ள டோன்பாஸ் என்ற பகுதியும் ‘இனி நாங்கள் உக்ரைனின் பகுதியல்ல. சுயாட்சி பெற்று விட்டோம்’ என்று கூறிவிட்டது. தங்களுக்கென்று ஒரு தனிக் கொடியையும் உருவாக்கிக் கொண்டு விட்டது. இங்கும் பெரும்பாலானவர்கள் ரஷ்யாவுக்கு ஆதரவளிப்பவர்கள் என்பது முக்கியமான தகவல்.

இதற்குள் ரஷ்ய ஆதரவு கிரிமியா பிரதமரை உக்ரைன் பதவியிறக்கம் செய்தது. உடனே துப்பாக்கி வீரர்கள் பலரும் கிரிமியாவை ஆக்ரமிக்கக் தொடங்கினர்.

ஆயிரக்கணக்கான ராணுவத் தினர் கிரிமியாவைத் தன் கட்டுப் பாடில் வைத்துக் கொண்டிருக் கிறார்கள். அவர்கள் எங்கள் ராணுவத்தினர் அல்ல என்கிறது ரஷ்யா. ஆனால் அவர்களால் நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட கிரிமிய ராணுவத்தினர் அவர்கள். தவிர ரஷ்ய ராணுவத்தினரும் அங்கு ஊடுருவத் தொடங்கி விட்டனர்.

சர்வதேச சட்டப்படி கிரிமிய மக்களின் முடிவு சரியானதுதான் என்கிறார் புதின்.

புதினுக்கு ரஷ்ய நாடாளுமன்றம் அனுமதி அளித்துவிட்டது. எதற்கு? தேவைப்பட்டால் ரஷ்ய ராணுவத்தை கிரிமியாவுக்கு மட்டுமல்ல, மொத்த உக்ரைனுக்குமே அனுப்பலாம் என்பதற்கான அனுமதி.

ஐரோப்பிய யூனியனும் அமெரிக்காவும் கிரிமியாவை ரஷ்யா தன் வசம் கொண்டுவந்ததை எதிர்த்து ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

(இன்னும் வரும்)

உக்ரைன்ரஷ்யாமோதல்உலகம்ஜி.எஸ்.எஸ். தொடர்

You May Like

More From This Category

More From this Author