Published : 29 Jan 2015 10:59 AM
Last Updated : 29 Jan 2015 10:59 AM

சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?- கால்நடை பராமரிப்புத்துறை ருசிகரத் தகவல்

பொழுது விடிவதை காலம் காலமாக மனிதர்களுக்கு உணர்த்தும் சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும் என்பதை பழநி கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் ஒன்று, மற்றொன்றை சார்ந்துள்ளது. இதில் கடந்த காலத்தில் கிராமப்புறங்களில் சாமக்கோழி கூவும்போது பொழுது விடிவதாக நினைத்து, காலையில் எழுவதை மனிதர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். நகர்ப்புறத்தில் உள்ளவர்களுக்கு ஆலைகளின் குறிப்பிட்ட சங்கொலி, தேவாலயத்தில் அதிகாலை பிரார்த்தனைக்கான அழைப்பு ஒலி, துயில் எழ உதவியாக இருக்கிறது. காலப்போக்கில் நாகரீக வளர்ச்சியால் கடிகாரம் அலாரம் வைத்து எழும் வழக்கம் இருந்தது. தற்போது செல்போனில் அலாரம் வைத்து காலையில் எழுகின்றனர்.

ஆனால், கிராமப்புறங்களில் இன்றளவும், சாமக்கோழி கூவும் நேரத்தைக் கொண்டுதான் மக்கள் எழுந்து பொழுது விடிந்ததாக நினைக்கின்றனர்.

இதுகுறித்து பழநி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் வி.ராஜேந்திரன் கூறும்போது, ‘சாமக்கோழி’ கூவையிலே முழிக்கணும், சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவுதையா’ என கவிஞர்கள் சாமக்கோழி கூவுவதை கவிதையாகத் தந்துள்ளனர். கிராமங்களில் வெளியூர் பயணம் மேற்கொள்பவர்களும், அதிகாலையில் காட்டு வேலைக்கு செல்பவர்களும் சாமக்கோழி கூவும் நேரத்தை பயன்படுத்துகின்றனர்.

கால் நூற்றாண்டுக்கு முன்பு வரை, கிராமப்புறம் மட்டுமின்றி நகர்புறங்களிலும் மனிதர்கள் விழித்தெழ கோழி கூவும் சத்தம் மிகுந்த உதவியாக இருந்துள்ளது. சாமக்கோழி கூவும் நேரம் ஏறத்தாழ அதிகாலை 3 மணியில் இருந்து 3.30 மணிக்குள் இருக்கும். இதற்கு அடுத்ததாக சேவல் அதிகாலை 5 மணிக்கு தொடந்து கூவும். பெட்டைக் கோழி கூவாது.

தமிழ் மரபுப்படி கோழி என்பது சேவல், பெட்டை என்ற இரண்டு இனங்களையும் குறிக்கும். அதனால்தான் கோழி கூவுது என்ற சொல் வழக்கத்தில் வந்தது. சேவல் கூவுகிறது என்று தனிமைப்படுத்தி கூற வேண்டிய அவசியம் இல்லை. அப்படிச் சொன்னாலும் தவறு ஒன்றும் இல்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x