Published : 24 Jan 2015 13:14 pm

Updated : 24 Jan 2015 13:14 pm

 

Published : 24 Jan 2015 01:14 PM
Last Updated : 24 Jan 2015 01:14 PM

1983 உலகக் கோப்பை: "நடக்கக் கூடாதது" நடந்துவிட்டது

1983-quot-quot

இனி இதுபோல நடக்கக் கூடாது என்று கண்டிப்பாகச் சொன்னார் கிளைவ் லாயிட்ஸ். ஆனால் அது மீண்டும் நடந்தது. ஒரு முறை அல்ல. இரு முறை. அதிலும் அந்த இரண்டாவது முறை நடந்ததை லாயிட்ஸால் வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாது.

1983-ல் இந்தியா உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தது. உலகக் கோப்பைப் போட்டிகள் தொடங்கி மூன்றாவது தொடரிலேயே இந்தியா இந்தச் சாதனையைப் புரிந்தது. அந்தச் சாதனைதான் உலகின் மிகச் சிறந்த அணியாக அன்று கருதப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேதனையாக மாறியது.

இரண்டு உலகக் கோப்பைப் போட்டிகளில் படுதோல்வி அடைந்த இந்தியாவை மூன்றாவது உலகக் கோப்பைப் போட்டியில் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்தியாவிலும் யாருக்கும் பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் இல்லை. சொல்லப்போனால் அணியினருக்கும் அந்த நம்பிக்கை இருந்திருக்க வாய்ப்பில்லை. தன்னம்பிக்கையோடு முன்னணியில் நின்று தலைமை ஏற்ற கபில்தேவும்கூட இதைக் கற்பனை செய்திருப்பார் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. ஆனால் அந்த அதிசயம் நடந்தது. உலகமே இந்தியாவை வியப்புடன் பார்த்தது. இந்திய கிரிக்கெட்டையும் உலக கிரிக்கெட்டையும் நிரந்தரமாக மாற்றிய திருப்பமாக அது அமைந்துவிட்டது.

அரங்கேறிய அதிசயங்கள்

லாயிட்ஸின் கண்டிப்பான வார்த்தைகளுக்கு வருவோம். உலகக் கோப்பை தொடங்குவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு இந்திய அணி, மே.இ. தீவுகளை எதிர்த்து ஒருநாள் போட்டித் தொடர் ஒன்றில் ஆடியது. 1983-ம் ஆண்டின் தொடக்கத்தில் மே.இ. தீவுகளில் நடந்த அந்தத் தொடரில் ஒரு போட்டியின் முடிவில்தான் லாயிட்ஸ் இந்த வார்த்தைகளைச் சொன்னார்.

மூன்று போட்டிகள் கொண்ட அந்தத் தொடரின் இரண்டாவது போட்டியில் (மார்ச் 29) இந்தியா வெற்றிபெற்றது. மே.இ. தீவுகளுக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் இந்தியா பெற்ற முதல் வெற்றி அது. அந்தத் தோல்வி மே.இ. தீவுகள் அணிக்குக் கடும் அதிர்ச்சியையும் ரோஷத்தையும் ஏற்படுத்தியது. அதனால்தான் அணித் தலைவர் லாயிட்ஸ் “இனி ஒருபோதும் இப்படி நடக்கக் கூடாது” என்று தன் அணியினரை எச்சரித்தார்.

அப்படி ரோஷம் வருமளவுக்கு அது வலுவான அணியாக இருந்தது. கார்டன் கிரீனிட்ஜ், டெஸ்மாண்ட் ஹெய்ன்ஸ், விவியன் ரிச்சர்ட்ஸ், லாயிட்ஸ் போன்ற அபாரமான மட்டையாளர்கள்; மால்கம் மார்ஷல், மைக்கேல் ஹோல்டிங், ஆன்டி ராபர்ட்ஸ், ஜோயல் கார்னர் ஆகிய வேகப் பந்து வீச்சாளர்கள், லாரி கோம்ஸ் என்னும் ஆல் ரவுண்டர், மட்டையாட்டத்திலும் சிறந்து விளங்கிய ஜெஃப் துஜோன் என்னும் விக்கெட் காப்பாளர் ஆகியோரைக் கொண்ட அந்த அணி உலகின் எந்த அணிக்கும் சவாலாக விளங்கிய காலம் அது. அந்த அணியை இந்தியா அதன் மண்ணிலேயே வீழ்த்தினால் ரோஷம் வராதா?

ஆனால் தோற்கக் கூடாது என்னும் எச்சரிக்கை பலிக்கவில்லை. அதே ஆண்டில் மேலும் இரண்டு முறை அதே இந்திய அணியிடம் மே.இ. தீவுகள் அணி தோற்றது. அதில் ஒன்று உலகக் கோப்பை இறுதிப் போட்டியாக அமைந்துவிட்டது.

இது வேறு அணி

கடந்த இரு போட்டிகளைப் போல அல்லாமல் இந்த முறை இந்தியா ஒப்பீட்டளவில் வலிமையான அணியாக இருந்தது. கபில் தேவின் தலைமையில் புதிய வேகம் பெற்றிருந்தது.

முதல் உலகக் கோப்பைப் போட்டியில் டெஸ்ட் இன்னிங்ஸை ஆடிய சுனில் கவாஸ்கர் சுதாரித்துக்கொண்டு ஒரு நாள் போட்டிக்கேற்பத் தன்னைத் தகவமைத்துக்கொண்டிருந்தார். கவாஸ்கருடன் இன்னிங்ஸைத் தொடங்கிய கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் டெஸ்ட் போட்டியையே ஒரு நாள் போட்டிபோல ஆடுபவர்.

இடை நிலையில் மொஹீந்தர் அமர்நாத், யாஷ்பால் ஷர்மா ஆகிய அருமையான மட்டையாளர்களுடன் சந்தீப் பாட்டீல் என்னும் அதிரடி இளம் ஆட்டக்காரரும் இருந்தார். இவர்களை அடுத்து அதிரடிக்குப் பேர்போன கபிலும் நேர்த்தியாக மட்டையைச் சுழற்றக்கூடிய விக்கெட் காப்பாளர் சையது கிர்மானியும் இருந்தார்கள்.

பந்து வீச்சைப் பொறுத்தவரை கபில் தேவ் உலகத் தரமான வீச்சாளர். பல்வீந்தர் சிங் சந்து, ரோஜர் பின்னி, மதன்லால் போன்றவர்கள் வேகத்தில் பின்தங்கினாலும் ஸ்விங் பௌலிங்கில் தேர்ந்தவர்கள். பந்தை வீசும் அளவிலும் வரிசையிலும் கட்டுக்கோப்புக் கொண்டவர்கள். இங்கிலாந்து ஆடுகளங்கள் இவர்களது பந்து வீச்சுக்கு உறுதுணையாக இருந்தன.

போதாக்குறைக்கு யாராலும் புரிந்துகொள்ள முடியாத விதத்தில் பந்து வீசும் அமர்நாத்தும் திறமையான சுழல் பந்து வீச்சாளர் ரவி சாஸ்திரியும் இருந்தார்கள். மேற்கிந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற அணிகளுக்கு இணையான பந்து வீச்சாக இல்லை என்றாலும் அலட்சியப்படுத்த முடியாத வலிமை கொண்டதாகவே இந்தியப் பந்து வீச்சு இருந்தது.

என்றாலும் உலகக் கோப்பையை வெல்லக்கூடிய அணி என்று யாரும் இதைச் சொல்லவில்லை. காரணம், மே.இ. தீவுகள் தவிர, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் பலம் பொருந்திய அணிகளாக இருந்தன. இந்த அணிகளைத் தாண்டி அரை இறுதியை எட்டுவதே கஷ்டம் என்னும் நிலை இருந்தது. இந்த எண்ணத்தைத் தகர்த்து கோப்பையைக் கைப்பற்றி உலகை வாயடைக்கவைத்தது இந்தியா.

இந்தச் சாதனைக்கு மொத்த அணியினரும் காரணம் என்றாலும் கபில் தேவுக்கு அந்தப் பெருமையைக் கூடுதலாக வழங்க வேண்டும். முன்னுதாரணமாக விளங்கும்தலைமைப் பண்பு, எத்தகைய நிலையிலும் மனம் தளராத உறுதி, பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்திய விதம், தடுப்பு வியூகத்தில் காட்டிய மதிநுட்பம், சிறப்பான பந்துவீச்சாலும் தேவைப்படும் சமயங்களில் மட்டையாலும் பங்களித்த விதம் ஆகியவற்றால் அந்த வெற்றியின் ஆணி வேர் என்று கபில் தேவைச் சொல்லலாம்.

கடந்து வந்த பாதை

ஒரு பிரிவில் இருந்த நான்கு அணிகளும் ஒவ்வொன்றையும் எதிர்த்து இரு முறை விளையாடும். இதில் எடுத்த எடுப்பில் இந்தியா உலக சாம்பியனுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இரண்டு அணிகளுக்கும் அதுதான் முதல் போட்டி. முதலில் ஆடிய இந்தியா யாஷ்பால் (89), பாட்டீல் (36), பின்னி (27) ஆகியோரின் மட்டையாட்டத்தால் 262 ரன்களைக் குவித்தது. ஆகச் சிறந்த வேகப் பந்து வீச்சை எதிர்த்து முதல் போட்டியிலேயே இந்தியா இத்தனை ரன்கள் அடித்தது.

ஆனால் மேற்கிந்திய அணியின் மட்டை வலுவுக்கு இது பிரமாதமான இலக்கு அல்ல. எனினும் இந்தியாவின் சிக்கனமான பந்து வீச்சும் பின்னி, சாஸ்திரியின் திறமையான வீச்சும் (இருவருக்கும் தலா 3 விக்கெட்) சேர்ந்து எதிரணியை 54.1 ஓவர்களில் 228 ரன்களுக்குச் சுருட்டின. எது நடக்கக் கூடாது என்று லாயிட்ஸ் சொன்னாரோ அது நடந்துவிட்டது.

இதைக் கெட்ட கனவாக நினைத்து மறக்கவே மேற்கிந்திய அணி நினைத்திருக்கும். அதற்கேற்ப அடுத்த ஐந்து போட்டிகளிலும் அது வென்றது. அடுத்து வந்த அரை இறுதியையும் வென்றது. ஆனால் இறுதிப் போட்டியில் மீண்டும் இந்தியாவிடம் தோற்றது. எது நடக்கக் கூடாது என்று லாயிட்ஸ் எச்சரித்தாரோ அது மீண்டும் ஒரு முறை நடந்தது. வரலாறு மாற்றி எழுதப்பட்டது.

(1983-ன் மந்திரக் கணங்கள் தொடரும்..)

விளையாட்டுகிரிக்கெட்உலகக்கோப்பைஇந்திய அணிவரலாறு

You May Like

More From This Category

More From this Author