Published : 20 Jan 2015 10:21 AM
Last Updated : 20 Jan 2015 10:21 AM

ஜிஎஸ்டி அமல்படுத்துவதால் நாட்டின் வர்த்தகம் சிறப்பாகும்: நிதியமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை

சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்துவதால் நாட்டின் வர்த்தக சூழல் சிறப்பாகும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

மத்திய நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் அருண் ஜேட்லி முதன் முறையாக சென்னை வந்த அவர் இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் நடத்தப்பட்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அப்போது நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியதாவது: இந்தியாவின் தொழில் மற்றும் பொருளாதார சூழல் கடந்த பத்தாண்டுகளில் திசை மாறிப்போயிருந்தது. இந்தியாவில் 1991 முதல் 2004 வரை இருந்த பொருளாதார நிலை, சீர்கெட்டிருந்தது.

இதற்கு சரியான கொள்கை முடிவுகள் எடுக்காததுதான் காரணம். எனவே, இந்திய பொருளாதாரம் எந்த புள்ளியில் விலகியது, என்பதை பார்த்து சரிசெய்து வருகிறோம். இதுவரை உற்பத்தி குறைவாக இருந்த நேரத்தில் பொருட்களின் பரவலாக்கம் அதிகளவில் இருந்தது. இதையெல்லாம் சீர்திருத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். இதன் பேரில் நாட்டில் புதிய முதலீடுகளுக்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி, வெளியுறவு கொள்கை என அனைத்துத் துறைகளிலும் மாநிலங் களுக்கு இடையே ஒருங்கிணைந்த பார்வை வேண்டும். கடந்த 8 மாத சீர்திருத்தங்களால் பொருளாதாரம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட அவையில், தாக்கல் செய்யப்படுகிற சட்டங்கள், மாநிலங்களவை மற்றும் நிலைக்குழுவில் தாக்கல் செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் அரசியலமைப்பிலேயே மாற்றங்களை செய்ய வேண்டி யுள்ளது. இதே போலதான் கோல் இந்தியா நிறுவனத்தின் செயல்பாட்டு முறைகளும், இதனால் கடந்த காலங்களில் நாட்டுக்கு பெரிய இழப்புகள் ஏற்பட்டன.

நாட்டில் பல்வேறு துறைகளின் மானியங்களை படிப்படியாக சீரமைப்பு செய்யவுள்ளோம். இதன் முதற்கட்டமாக ஜனவரி 1-ம் தேதி முதல் நேரடி சமையல் எரிவாயு மானியம் வழங்கப்பட்டது. மானியங்களை சீரமைப்பதால் அதிக முதலீடுகள் வரும் வாய்ப்புள்ளது.மேலும் வரி மற்றும் பொருளாதார கொள்கைகளில் நிலையான தன்மையை உருவாக்குவதன் மூலம் இந்தியா வை நோக்கி முதலீடுகளை ஈர்க்க முடியும்.

இது மட்டுமன்றி சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்துவதன் மூலம் நாட்டின் வர்த்தக சூழல் சிறப்பாக அமையும். இதன் மூலம் மாநில அரசுகள் ஒரு ரூபாய் கூட இழக்க வேண்டிய சூழல் இருக்காது. மேலும் வரி வசூலில் மாநிலங்களுக்கும் பெரியளவில் பங்கு தொகை கிடைக்கும். நில கையகப்படுத்தல் சட்டத்தில் கொண்டு வரவுள்ள மாற்றங்கள், நிலத்தின் விலையை அதிகப்படுத்தும்.

கிராமப்புற அடிப்படை கட்ட மைப்பில் அதிக கவனம் செலுத்தி வருவதால், இளை ஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும், மேலும் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரமும் உயரும். நிதி ஆயோக் மூலம் மாநில முதல்வர் தங்களுக்கு தேவையான திட்டங்களை பரிந்துரை செய்யவும், தேர்ந்தெடுக்கவும் முடியும்.

தற்போதைய சூழலில் உணவு மற்றும் பெட்ரோல் விலை கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு நாட்டின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. இதுமட்டுமன்றி வருகிற ஆண்டிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடையமுடியும். பொது மற்றும் தனியார் துறை கூட்டு முறையில் நிறைய சிக்கல் உள்ளன. இதனை சரிசெய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

பிரதமர் மோடியின் அரசு, அதிகளவிலான உள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும். உற்பத்தி மற்றும் கட்டமைப்பு துறையில் அதிக கவனம் செலுத்துகிறது. இவை அனைத்துக்கும் மேலாக தெளிவான நிர்வாக கொள்கை களை முன்னெடுத்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம் படுத்துவோம் என்றார் அருண் ஜேட்லி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x