Published : 09 Dec 2014 11:01 am

Updated : 09 Dec 2014 11:01 am

 

Published : 09 Dec 2014 11:01 AM
Last Updated : 09 Dec 2014 11:01 AM

ஆண் மயமான பணியிடத்தில் பெண்...

பெண் விடுதலை பற்றி ஒரு கூட்டத்தில் பேசுகையில் பெண் என்றால் பேயும் இறங்கும் என்பது பழமொழி. பெண் என்றால் pay யும் இறங்கும் என்பது தான் நிஜமொழி என்று குறிப்பிட்டதும் பலர் சண்டைக்கு வந்து விட்டார்கள்.

‘‘அதெல்லாம் அந்தக் காலம் சார். ஐ.டி, வங்கிகள், ஆசிரியப்பணி இப்படி எல்லா இடங்களிலும் பெண்கள் கொடி கட்டிப் பறக்கிறார்கள். ஆண்களுக்குத்தான் சார் இனி இட ஒதுக்கீடு வேண்டும்’’ என்றார்கள்.


சம வளர்ச்சியா?

பெண்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் வந்து விட்டதாகவும் ஆணுக்குப் பெண் சரி சம வளர்ச்சி அடைந்து விட்டதாகச் சொல்வதெல்லாம் பொய் என்பதைப் புள்ளி விவரங்களுடன் சொன்னேன். அடிமட்டத் தொழிலாளிகளிடையே ஆண்களுக்கு அளிக்கும் கூலியை விடப் பெண்களின் கூலி உலகமெங்கும் குறைவு. கட்டிட வேலை முதல் அனைத்து வேலைகளிலும் இதுதான் நிதர்சனம்.

அதே போல் பெரும் நிறுவனங் களின் உயர் மட்ட பதவிகளில் பெண்களின் பங்கும் மிகக் குறைவு தான். தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கும் பெண்களின் சதவீதம் ஒற்றைப் படை எண்ணாகத்தான் உள்ளது. அமைப்பு சார்ந்த தொழிலில் கூட ஆரம்ப நிலை முதல் இடைப்பட்ட நிலைகளில் மட்டும்தான் பெண்கள் ஆண்களுக்கு இணையாகப் பணி புரிகிறார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் உயரே போக முடியாத அளவு ஒரு கண்ணாடி விட்டம் தடுக்கும். அது கண்ணுக்குத் தெரியாத கண்ணாடி விட்டம் என்றேன்.

உளவியல் சிக்கல்

இத்தனை ஐ.ஐ.டிக்கள். ஐ.ஐ.எம்கள் இருந்தும் ஏன் நிறுவனத்தின் தலைமைப் பதவிகளில் பெண்கள் வருவதில்லை? திறமையும் அனுபவமும் இருந்தாலும் ஒரு நிலையில் பெண் என்ற காரணத்தாலேயே அவள் புறக்கணிக்கப்படுகிறாள் என்பதுதான் உண்மை.

“குடும்பச்சுமை காரணமா? ” என்ற கேள்வி வந்தது. பெண் எல்லா காலங்களிலும் குடும்பத்தைச் சுமந்த வாறுதான் வேலைப்பொறுப்பை பார்த்து வந்திருக்கிறாள். இது புதிதல்ல. ஆனால் பெண் தலைமையின் கீழ் வேலை செய்வதில் இன்னமும் பெரும்பான்மையான ஆண்களுக்கு உளவியல் சிக்கல் உள்ளது.

சவால்

அதே போல் உயர் பதவிகளுக்கு வரும் பெண்களிடமும் ஒரு அதிகாரத்துவம் எதிர்பார்க்கப்படுகிறது. இதை அரசியல் களத்திலும் தொடர்ந்து பார்க்கிறோம். தலைமைப் பதவிகளுக்கு வரும் பெண்கள் “சூப்பர் ஹீரோக்கள்” ஆகின்றனர். மம்தா பானர்ஜி, மாயாவதி, ஜெயலலிதா என பட்டியல் போடலாம். இந்திரா காந்தி அமைச்சரவையின் ஒரே ஆண்மகன் இந்திரா காந்தி மட்டும்தான் போன்ற கருத்துகள் உருவாகக் காரணம் இந்த அதிகாரத்துவத்தோடு செயல்பட்டாக வேண்டிய வேலைச்சூழல் தான்.

பாலின பன்முகத் தன்மையின் அவசியத்தை இன்று பல பன்னாட்டு நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன. ஒரு பெண் சீ.ஈ.ஓ என்னுடன் பேசுகையில் “ஆண்களின் குழுவில் ஒரு பெண் நுழைந்து அங்கீகாரம் பெறுவது என்பது பெரிய சவால். மார்கெட்டிங்கில் நான் பணியாற்றும் போது எல்லா முக்கிய முடிவுகளும் மது பான விருந்துகளில் பேசி முடிவெடுக்கப்படும். சிகரெட், மது போன்ற பழக்கங்கள் சில குழுக்களை உருவாக்கும். அது சக்தி கொண்ட தகவல் மையமாக நிறுவனத்தில் உருவெடுக்கும். எங்கள் சீ.ஈ.ஓ வுடன் கிளப்பிற்குச் செல்லும் அனைத்து பொது மேலாளர்களும் ஆண்கள். தனிமைப்படக்கூடாதென்று நானும் போக ஆரம்பித்தேன். அந்த அந்தரங்க வட்டத்தை உடைக்காமல் தனியார் நிறுவனங்களில் பெண் தலைமைப் பொறுப்பை அடைவது கடினம்! ” என்று சொன்னார்.

தாண்டித்தான்..

அரசாங்கம், அரசியல், தனியார் துறை எல்லா இடங்களிலும் பெண் தலைமைப் பொறுப்புக்கு வர சில ஆண்களின் துணை அவசியப்படுகிறது. அதை லாவகமாகப் பெற்று சேதப்படாமல் மேலே போவதுதான் பெண்களுக்கான முக்கிய சவால். ஓர வஞ்சனை, பாலின நச்சரிப்பு, கேலிப் பேச்சு எனப் பல அவதூறுகளைத் தாண்டியும் மீண்டு எழுந்துதான் பெண் தலைமைப் பொறுப்புகளுக்கு வர முடியும். அதற்கு அவர்கள் தங்களைச் சற்று அதிகாரத்தன்மை கொண்டவர்களாக மாற்றிக் கொள்வது அவசியமாகிறது.

உளவியல் பாடங்கள்

ஆண் மயமான பணியிடத்தில் ஒரு பெண் எப்படித் தன்னைப் பாதுகாத்து முன்னேறுவது என்பது பற்றியெல்லாம் கல்விக் கூடங்களிலிருந்து விவாதிக்க வேண்டும். ஆண்களையும் பெண்களையும் பிரித்து வைத்துப் பாடம் நடத்தும் நிலை மாறி உறவுகள் பற்றிய உளவியல் பாடங்கள் நடத்த வேண்டும்.

சாதித்த பெண்மணிகளை அழைத்து பேசச் செய்ய வேண்டும். தற்காப்புக் கலை முதல் அடிப்படைச் சட்டம் வரை போதிக்க வேண்டும். தன்னைப் பற்றி தாழ்வாக நினைத்து ஆண்களின் மதிப்பீடுகளில் தன் வாழ்க்கையைத் தொலைக்காமல் சுயமாகச் சிந்திக்கும் திறன்களை நம் பெண்களுக்குக் கற்றுத் தருதலே பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஆற்ற வேண்டிய முதல் கடமையாகும்.

எல்லாக் காலங்களிலும் மாற்றத்துக்கு வித்திட்டவள் பெண். வேட்டைத் தொழில் புரிந்த ஆணுக்கு விவசாயத்தைக் கற்றுத் தந்தவள் பெண். நாடோடி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து குடும்ப அமைப்பும் நாகரிகமும் பிறந்தது பெண்ணால். பெண்ணின் அறிவும் உழைப்பும் நம் பூமியின் வரலாறு முழுக்கப் பொதிந்து கிடப்பவை.

எதிர் நீச்சல்தான்

பெண்ணடிமைத்தனம் மனித இனத்தை அழிக்கும் என்பதை உணர்வதுதான் பேரறிவு. ஆற்று மணலைத் திருடுபவனும் வன்புணர்ச்சி செய்பவன் மட்டும் குற்றவாளிகள் அல்ல. பெண்ணுக்கு வர வேண்டிய சம வாய்ப்புகளைத் தட்டிப் பறித்து அரசியல் செய்யும் அனைவரும் குற்றவாளிகள்தான்.

பிஞ்சுக் குழந்தைகளே பள்ளிகளில் பாலியல் வன்கொடுமைக்கு அடிக்கடி ஆளாகும் காலத்தில் நம் பெண் குழந்தைகளுக்குப் பணியிடங்களில் எப்படி நடந்து கொள்வது, எப்படி வளர்வது என்பவை பற்றி அவசியம் ஆலோசனை சொல்ல வேண்டும். அதே போல ஆண் பிள்ளைகளுக்கு பெண்களுடன் கண்ணியமான, ஆரோக்கியமான உறவுகளை பேணும் அவசியத்தை அறிவுறுத்த வேண்டும்.

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கும் சட்டம் பலம் பெற்று வருகிறது. அதே நேரத்தில் தனி நபர் உறுதியும் தெளிவும் இன்றியமையாதது. இந்திரா காந்தி முதல் இந்திரா நூயி வரை எதிர் நீச்சல் போட்டு வந்தவர்கள் தான். பெண்கள் இயல்பாகப் போராடி ஜெயிப்பவர்கள். பெண்களை மதிக்காத சமூகம் வளர்ந்ததாகச் சரித்திரம் இல்லை. அடுப்படியிலும் அடிமட்ட வேலைகளிலும் மட்டும் பெண் அறிவை பூட்டி வைப்பதை விடுத்து அனைத்துத் தொழில்களிலும் பெண்களின் பங்களிப்பை வளர்க்க வேண்டும்.

ஆரம்பக் கல்வியில் ஆண்களுக்கு இணையாக உள்ள பெண்கள், உயர் கல்வியிலும், வேலைகளில் தலைமை பொறுப்புகளிலும் சரி சமமான எண்ணிக்கையில் வலம் வரும் நாள் தான் பெண் நிஜமாக விடுதலை பெற்ற நாள்!

பெண் வாழப்பிறந்தவள் மட்டும் அல்ல. ஆளப்பிறந்தவள்!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

தன்னம்பிக்கை தொடர்பணியிடத்தில் பெண்ஆண் ஆதிக்கம்பெண்ணியம்வேலை செய்யும் பெண்பெண்களிடம் அதிகாரம்பெண்கள் முன்னேற்றம்

You May Like

More From This Category

the-struggle-to-continue

தொடரும் போராட்டம்

இணைப்பிதழ்கள்

More From this Author