Published : 03 Dec 2014 10:25 AM
Last Updated : 03 Dec 2014 10:25 AM

அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் திருக்கச்சூர் கிராம மக்கள்: நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி

திருக்கச்சூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம், போக்குவரத்து சேவை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் நாள்தோறும் அவதிப்படுவதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், மறை மலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட 13,14-வது வார்டு பகுதியில் திருக்கச்சூர் கிராமம் அமைந் துள்ளது. இங்கு, 5000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அடிப்படை வசதிகள் ஏதுமின்றி தவிப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: நகராட்சி சார்பில் கடந்த 2010-ம் ஆண்டு அமைக்கப்பட்ட கழிப்பறை ஒன்று, இதுவரை பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. இப்பகுதிக்கு என தனியாக பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. இதனால் மருத்துவமனை போன்ற தேவைகளுக்கு கிராமத்திலிருந்து வெளியே செல்வது கடினமாக உள்ளது.

இங்குள்ள தியாகராஜ சுவாமி கோயிலில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம், திருவண்ணாமலை கோயிலுக்கு நிகராக பிரசித்தி பெற்றது. இதைக் காண வரும் ஏராளமான வெளியூர் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை. இங்கு 4 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குழாய்களில் குடிநீர் வழங்கப்படுகிறது.

மலையில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களில் யாரேனும் ஒருவருக்கு, காய்ச்சல் அல்லது விஷபூச்சி தாக்கினால் கூட, அவசர சிகிச்சைக்கு ஆரம்ப சுகாதார நிலையம் வசதி இல்லை. அதற்காக சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள ரெட்டிபாளைம் அல்லது சிங்கப் பெருமாள்கோவிலுக்குச் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

இதுகுறித்து, திருக்கச்சூர் கிராம நாட்டாமை தனபால் கூறியதாவது: வருவாய் அளிக்கும் கிராமம் என்பதாலேயே, திருக்கச்சூரை மறைமலைநகர் நராட்சியுடன் இணைத்தனர். ஆனால் அடிப்படை வசதிகளை மட்டும் செய்து தரவில்லை. இங்கு சுமார் 7 ஆயிரம் கால்நடைகள் உள்ளன. இந்த கால்நடைகளுக்கான சிகிச்சைக்காக செங்கல்பட்டுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் கால்நடை மருத்துவமனை ஏற்படுத்தி தருமாறு கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

இதுகுறித்து, சைதாப்பேட்டை சுகாதார மாவட்ட இணை இயக்குநர் ராஜசேகர் கூறும்போது, ‘ஒரு கிராமத்தில் அதிகபட்சம் 30 ஆயிரம் முதல், குறைந்தபட்சம் 5 ஆயிரம் வரையிலான மக்கள்தொகையும், 7 கி.மீ. தொலைவில் எந்த மருத்துவவசதியும் இல்லை என்றால் மட்டுமே அங்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க முடியும். இதுபோன்ற நிலை திருக்கச்சூரில் உள்ளதா என விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்டம் ஆட்சியர் சண்முகம் கூறியதாவது: சம்பந்தப்பட்ட துறையின் தலைமை அதிகாரி களிடம் விசாரித்து, திருக் கச்சூரின் அடிப்படை வசதிகளுக் காக ஏற்கெனவே ஏதேனும் திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப் பட்டுள்ளதா என கண்டறியப்படும். புதிய திட்டத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த ஆலோசிக் கப்படும். பேருந்து வசதி குறித்து மாவட்ட போக்குவரத்து நிர்வாக அதிகாரிகளிடம் விசாரிக்கிறேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x