Published : 16 Dec 2014 12:12 pm

Updated : 16 Dec 2014 12:12 pm

 

Published : 16 Dec 2014 12:12 PM
Last Updated : 16 Dec 2014 12:12 PM

உலக மசாலா: டிஷ்யூ பேப்பரை சாப்பிடும் தாய்

சாரா பேகம் பிரிட்டனைச் சேர்ந்தவர். ஈக்வடார் பகுதியில் இருக்கும் அமேசான் காடுகளில் 3 ஆயிரம் பழங்குடி மக்கள் வசிக்கிறார்கள். அவர்கள் பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களை எதிர்த்துப் போராடி வருகிறார்கள். லண்டனில் பார்த்துக்கொண்டிருந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, பழங்குடி மொழியைக் கற்றார் சாரா. படக்குழுவினரோடு ஈக்வடாருக்குச் சென்றார். இரண்டு வாரங்கள் தங்கி, அவர்களின் வாழ்க்கையைப் படம் பிடித்தார். எண்ணெய் நிறுவனத்துக்கு எதிராகத் தானும் இருப்பதைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார். தன்னை விட 30 வயது மூத்தவரான பழங்குடிகளின் தலைவரும் வீரருமான ஜின்க்டோவைத் திருமணம் செய்துகொண்டார்.

சாராவின் தலையில் மக்கா இறக்கைகளால் ஆன க்ரீடம் சூட்டப்பட்டு, அமேசானின் ராணியாக ஏற்றுக்கொண்டார்கள் பழங்குடிகள். ‘என் கணவர் மிகவும் அருமையான மனிதர். நான் குடும்பம் நடத்துவதற்காக அவரைத் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவர்களின் போராட்டத்துக்கு ஒரு வடிவம் கொடுக்கவும் வெளியுலகத்துக்குத் தெரியப்படுத்தவும் உதவியாக இருக்கவுமே திருமணம் செய்துகொண்டேன்’ என்கிறார் சாரா. அவரது ஆவணப்படம் பல்வேறு இடங்களில் வெளியிடப்பட்டன. அமேசான் பழங்குடியினரின் போராட்டத்துக்குப் பரவலாக ஆதரவு அதிகரித்து வருகிறது. மீண்டும் தன் கணவரையும் மற்றவர்களையும் காண அமேசான் செல்ல இருப்பதாகச் சொல்கிறார் சாரா.

வித்தியாசமான போராட்டக்காரர்!

பிரிட்டனில் வசிக்கிறார் ஜேட் சில்வெஸ்டர். ஐந்து குழந்தைகளுக்குத் தாய். அவருக்கு விநோத பழக்கம் இரண்டு ஆண்டுகளாக இருந்து வருகிறது. டாய்லெட்க்கு உபயோகப்படுத்தும் பேப்பரை விரும்பிச் சாப்பிட்டு வருகிறார். கடைசி மகன் வயிற்றில் இருந்தபோது, பேப்பரைச் சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டது. பேப்பரின் சுவைக்கு நாளடைவில் அடிமையாகிவிட்டார் ஜேட். குழந்தை பிறந்து ஒன்றரை வருடங்கள் ஆகியும் பேப்பர் சாப்பிடுவதை அவரால் நிறுத்த முடியவில்லை. ஒரு தடவை டாய்லெட்டுக்குள் நுழைந்தால் 8 பேப்பர்களைச் சாப்பிடுவார். இதனால் அடிக்கடி டாய்லெட் போவதைத் தவிர்த்து வருகிறார். பேப்பர் உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் என்பதை அறிந்தும் தன்னால் சாப்பிடுவதை விடமுடியவில்லை என்கிறார் ஜேட். தற்போது மருத்துவர்களின் உதவியை நாடியிருக்கிறார்.

உங்களை நினைச்சா பாவமா இருக்கு ஜேட்…

​ஒட்டகத்தைப் போன்று தோற்றமளிக்கும் அல்பகா தென் அமெரிக்க விலங்கு. பெர்லினில் உள்ள முதியோர் இல்லத்தில் அல்பகாக்கள் நோயாளிகளைக் குணப்படுத்துகின்றன. முதியோர் தங்கியிருக்கும் வீட்டின் கதவைத் தட்டுகின்றன. முதியவர்கள் வந்து இவற்றைக் கட்டி அணைக்கின்றனர். தடவிக் கொடுக்கின்றனர். அல்பகாவும் பதிலுக்கு முதியவர்கள் மீது முகத்தை உரசுகிறது. பரஸ்பரம் முதியவர்களும் அல்பகாக்களும் தங்கள் அன்பைப் பகிர்ந்துகொள்கிறார்கள். சிறிது நேரம் விளையாடுகிறார்கள். இரு தரப்பும் சந்தோஷம் அடைந்த உடன் அடுத்த வீட்டை நோக்கி நகர்கின்றன அல்பகாக்கள். விலங்குகள் செலுத்தும் அன்பு மனிதர்களின் மனத்தை சந்தோஷப்படுத்துகிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது. பதற்றத்தைத் தணிக்கிறது. இதனால் முதியவர்களுக்கு வலி கூட பெரிதாக தெரிவதில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். முறையாகப் பராமரிக்கப்பட்டு, தடுப்பூசிகள் போட்டுவிடுவதால் அல்பகாக்களால் மனிதர்களுக்கு எந்தத் தொற்றும் ஏற்படுவதில்லை என்கிறார்கள்.

அன்புக்கு வலியை மறக்கடிக்கும் சக்தி இருக்கிறது உண்மைதான் போல!


உலக மசாலா

You May Like

More From This Category

More From this Author