Published : 18 Dec 2014 07:47 PM
Last Updated : 18 Dec 2014 07:47 PM

இரட்டை சதம் அடித்தார் ஆம்லா: 552 ரன்கள் குவித்து தென் ஆப்பிரிக்கா டிக்ளேர்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டத்த்தில் தென் ஆப்பிரிக்க கேப்டன் ஹஷிம் ஆம்லா 208 ரன்கள் எடுத்தார்.

அவர் 475 நிமிடங்கள் நின்று 371 பந்துகளைச் சந்தித்து 22 பவுண்டரிகளுடன் 208 ரன்களை எடுத்து சுலைமான் பென் பந்தில் ஒருவழியாக ஆட்டமிழந்தார். தென் ஆப்பிரிக்காவின் வான் ஸில் என்பவரும் 130 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்த போது ஸ்கோர் 552 ரன்கள். இந்நிலையில் ஆம்லா டிக்ளேர் செய்தார்.

நேற்று 141 ரன்களில் இருந்த ஏ.பி.டிவிலியர்ஸ் இன்று 152 ரன்களில் பென் பந்தில் வெளியேறினார். முதல் நாள் ஆட்டத்தில் மே.தீவுகள் பவுலர் கிமார் ரோச் அபாரமாக வீசி அல்விரோ பீட்டர்சன் (27), டூ பிளேசி (0) ஆகியோரை விரைவில் வெளியேற்ற இடது கை வேகப்பந்து வீச்சாளர் காட்ரெல் டீன் எல்கர் (28) விக்கெட்டைக் கைப்பற்றினார். தென் ஆப்பிரிக்கா 57/3 என்று தடுமாறியது.

அப்போது ஜோடி சேர்ந்த ஆம்லா, டிவிலியர்ஸ் ஜோடி 308 ரன்களை 84 ஓவர்களில் 4-வது விக்கெட்டுகாகச் சேர்த்து புதிய சாதனை படைத்தனர். 16-வது ஓவரை வீசிய கிமார் ரோச் காயம் காரணமாக வெளியேற மே.தீவுகள் அணிக்கு அது ஒரு பெரும் பின்னடைவாகப் போனது. இதனால் ஜெரோம் டெய்லர், காட்ரெல் வேலைச்சுமை அதிகரித்தது.

அதன் பிறகு இன்று வான் ஸில் - ஆம்லா கூட்டணி மேலும் 155 ரன்களை 5-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தது. கடைசியில் குவிண்டன் டீ காக் இறங்கி இரண்டு மிகப்பெரிய சிக்சர்களை விளாசி 18 ரன்கள் சேர்த்தார். ஸ்கோர் 552/5 என்று இருந்த போது ஆம்லா டிக்ளேர் செய்தார்.

டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்தார் மே.இ.தீவுகள் கேப்டன் தினேஷ் ராம்தின்.

இன்று இன்னமும் குறைந்தது 35 ஓவர்கள் வீச வேண்டிய நிலையில் மழை காரணமாக ஆட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x