Last Updated : 27 Dec, 2014 09:47 AM

 

Published : 27 Dec 2014 09:47 AM
Last Updated : 27 Dec 2014 09:47 AM

அசாமில் போடோ தீவிரவாதிகளை ஒடுக்க பூடான், மியான்மர் ராணுவ ஒத்துழைப்பை நாடுகிறது இந்தியா: தேடுதல் வேட்டையில் வீரர்கள் தீவிரம்

அசாமில் ஆதிவாசி மக்கள் மீது தாக்குதல் நடத்திய போடோலாந்து தீவிரவாதிகளை ஒடுக்க, இந்திய எல்லையில் அமைந்துள்ள பூடான் மற்றும் மியான்மர் ராணுவத்தின் ஒத்துழைப்பை இந்தியா நாடி யுள்ளது.

அசாம் மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தேசிய ஜனநாயக போடோலாந்து முன்னணி (எஸ்) என்ற தீவிரவாத அமைப்பு ஆதிவாசி மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியது. இதில், 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. அசாமில் 5,000 துணை ராணுவப் படையினர் களமிறக்கப்பட்டுள்ள னர். மேலும் கூடுதல் வீரர்களை அனுப்பவும் ராணுவம் திட்ட மிட்டுள்ளது.

அசாமின் அடர்ந்த வனப் பகுதிக்குள் போடோலாந்து தீவிர வாதிகள் மறைந்து, பூடான் மற்றும் மியான்மருக்கு தப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இத்தீவிரவாத அமைப்பு பூடான் மற்றும் மியான்மரிலும் செயல்பட்டு வருகின்றன.

எனவே, வான்வழியாகக் கண்காணிப்புப் பணியை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பூடான் மற்றும் மியான்மர் ராணுவத்தின் ஒத்துழைப்பைப் பெறுவதற்காக அந்நாடுகளுடன் ஆலோசனை நடத்தியிருப்பதாகக் கூறப்படு கிறது.

வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பூடான் அரசுடன் ஏற்கெனவே பேசிவிட்டார். தீவிர வாதிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க பூடான் உறுதியளித் துள்ளது.

மேலும், மியான்மரும் தங்கள் எல்லைக்குள் தீவிரவாதி களின் செயல்பாடுகளை முடக்க உறுதியளித்துள்ளது.

இதனிடையே அசாம் நிலவரம் குறித்து ராணுவ தலைமைத் தளபதி தல்பீர் சிங்குடன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோ சனை நடத்தினார்.

இதுதொடர்பாக தல்பீர் சிங் கூறும்போது, “அசாமில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்படும். அசாமில் பாதுகாப்பு நிலவரம் குறித்து உள்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தலா 70 வீரர்கள் கொண்ட 66 படைப்பிரிவுகள் அசாமில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. அசாம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, ஆகிய மாநிலங்களில் போடோலாந்து தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதால், அங்கு ராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்” என்றார்.

2,000 எஸ்எஸ்பி வீரர்கள்

இந்திய-பூடான் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ள சஷாத்ர சீமா பால் (எஸ்எஸ்பி) படைப்பிரிவிலிருந்து 2,000 வீரர்கள் அசாமில் வன்முறை பாதித்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சாலை மறியல்

போடோ தீவிரவாதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆதிவாசிகள் மேம்பாட்டு அமைப்பினர் (ஏஎஸ்ஏ) மால்டா-பலுர்காட் சாலை மற்றும் கஜோல்-பமுங்கோலா சாலைகளில் நேற்று மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் தேங்கி நின்றன.

வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு

மேலும் ஏஎஸ்ஏ அமைப்பு வரும் 31-ம் தேதி அசாம், மேற்கு வங்கம், பிஹார், ஒடிஸா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் வேலைநிறுத்தப்போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. தீவிரவாதிகளின் அப்பாவி மக்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், ஆதிவாசி மக்களின் பாதுகாப்புக்கு போதுமான நடவடிக்கைகளை எடுப்பதில் தோல்வியடைந்த மத்திய அரசைக் கண்டித்தும் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படுவதாக, அந்த அமைப்பின் தலைவர் சல்கான் முர்மு தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தின் வடக்குப் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) 12 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதிவாசி விகாஸ் மோர்ச்சா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

முகாம்களைப் பார்வையிடுகிறார் மம்தா

தீவிரவாதிகள் தாக்குதலுக்கு அஞ்சி அசாமிலிருந்து வெளியேறி மேற்குவங்க மாநிலத்தில் தஞ்சமடைந்துள்ளவர்களுக்கு அம்மாநில அரசு நிவாரண முகாம்களை அமைத்துள்ளது. பக்தோர்கா, குமார்கிராம், அலிப்புர்துவார் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று பார்வையிடவுள்ளார்.

புலம்பெயர்ந்து வந்துள்ள ஆதிவாசி மக்களுக்கு போதுமான வசதிகள் செய்து தரப்படுகிறது. மேலும் செய்து தரப்படும் என மம்தா தெரிவித்துள்ளார்.

பலி எண்ணிக்கை உயர்வு

போடோ தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. தாக்குதலில் காயமடைந்திருந்த 2 பேர் நேற்று உயிரிழந்ததை அடுத்து பலியானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

5 ஆண்டுகளுக்கு தடை நீட்டிப்பு

தேசிய ஜனநாயக போடோலாந்து முன்னணி (எஸ்) தீவிரவாத அமைப்புக்கு விதித்திருந்த தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் அனைத்து வகையான பிரிவுகள், செயல்பாடுகளுக்கும் இந்தத் தடை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தேசிய ஜனநாயக போடோலாந்து முன்னணிக்கு கடந்த 2002 நவம்பர் 23-ம் தேதி முதன்முதலில் தடை விதிக்கப்பட்டது. தேசிய ஜனநாயக போடோலாந்து முன்னணி (என்டிஎப்பி-பி) அமைப்பிலிருந்து 2009-ம் ஆண்டு சோங்பிஜித் என்பவர் தலைமையில் பிரிந்தவர்கள் தேசிய ஜனநாயக போடோலாந்து முன்னணி (எஸ்) அமைப்பை உருவாக்கினர். இந்த அமைப்புதான் அசாமில் கடந்த வாரம் தாக்குதல் நடத்தியது. என்டிஎப்பி-பி அமைப்புடன் அசாம் அரசும், மத்திய உள்துறை அமைச்சகமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அந்த அமைப்புடன் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கும் உடன்பாட்டை மேலும் ஆறு மாதங்களுக்கு அதாவது வரும் 2015 ஜூன் 30-ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x