Published : 16 Nov 2014 09:58 AM
Last Updated : 16 Nov 2014 09:58 AM

சிறையின் ஜன்னல்களிலிருந்து...

சிறைச்சாலைகள் பற்றியும், கைதிகள் பற்றியும், தண்டனைகள் பற்றியும் நாம் கொண்டுள்ள பாரம்பரியமான பார்வைகள் மிகவும் பிற்போக்குத்தனமானவை. பல சமயங்களில் நாம் அன்றாடம் செய்ய நினைத்த காரியங்களை, தண்டனைக் கைதிகள் செய்து முடித்துவிட்டார்கள் என்பதை மட்டும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், நமக்கும் அவர்களுக்கும் இடையே பெரிய வேறுபாடு ஏதும் கிடையாது என்பது புரியும். ஒருவரைப் பழிவாங்க நினைத்திருப்போம், மற்றொருவரை இவன் சாக மாட்டானா எனச் சபித்திருப்போம்…

நமது நாட்டில் நடக்கும் கிரிமினல் குற்றங்கள் பெரும்பாலும் சாதாரணப்பட்டவைதான். அபூர்வமாக, சில சமயங்களில் மட்டுமே மாறுபடுகின்றன. பழிவாங்குதல், பொறாமை, கவுரவம், பொருளாசை, பெண்ணாசை, காட்டிக்கொடுத்தல், மரண பயம் முதலானவற்றுடன் சம்பந்தப்பட்டவை. காவல்துறை இந்தக் கோணத்தில்தான் முதலில் விசாரணையைத் தொடங்குகிறது. காட்டிக்கொடுத்தலும், துரோகமும் நமது சமூகத்தில் குற்றத்தின் பெரிய செயல்ஊக்கிகள். இவை தினசரி பெரும்பாலானவர்கள் சம்பந்தப்படும் பிரச்சினைகள்தான்.

எண்ணுவதோடு நிறுத்திக்கொள்வதால் நாம் வெளியில் இருக்கிறோம். இவ்வாறு கூறுவதற்கு, தண்டனைக் கைதிகளிடம் அனுதாபத்தையோ, கழிவிரக்கத்தையோ, கருணையையோ காட்டுங்கள் என்று கோருவதாக அர்த்தமில்லை. நடந்து முடிந்த குற்றத்தில் அவர்களுடைய பங்கும் இருக்கிறது. அதற்குரிய எதிர்விளைவை சட்டத்தின் முன்பாகவும், சமூகத்தின் முன்பாகவும் அவர்கள் எதிர்கொள்ளாமல் போக முடியாது. ஆனால் அதன் பொருட்டு அவர்களுடைய அடிப்படை உரிமைகளின் பேரில் அலட்சியம் காட்டுவதற்கு, ஒரு நாகரிகச் சமுதாயத்திற்கு யாதொரு தார்மீக பலமும் கிடையாது. சிறைச்சாலைகளும், தண்டனை முறைகளும் நமது நாகரிகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடக்கூடியவை.

தண்டனைகள் குறித்து மக்களின் அணுகுமுறை

தண்டனைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்கிற போக்கு சமீபகாலங்களில் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறுவதை உணர முடிகிறது. இது நல்ல அறிகுறி அல்ல. தண்டனைகளின் மிதமிஞ்சிய கோரிக்கைகள் பலம் பெறும்போது, ஒரு சிறிய அபத்தமான தருணத்தில் நாமெல்லோருமே எதிர் தரப்பாக, குற்றச் சமூகமாக மாறிவிடுவதற்கான எல்லா வாய்ப்புகளும் திறந்துவிடுகின்றன. நிகழ்தகவு நம்மையும் உள்ளடக்கிச் சுழலத் தொடங்குகிறது. இந்தத் தண்டனைகளின் விளையாட்டுப் பொறியில் சூழ்ச்சியை மெருகேற்றுவது மிக எளிது. அத்தகைய தருணங்களில் நாமே மனமுவந்து அவற்றுக்கு உருவாக்கிய வடிவான எலிப்பொறியில் நாமே மாட்டிக்கொள்வதற்கும் வாய்ப்புண்டு.

குற்றம் குறித்த வரையறைகள்

பொதுச் சமூகத்திலிருந்து அவர்களைத் தனிமைப்படுத்துவதற்குத்தான் சிறைகளே அன்றி, அவர்களை ஒடுக்குவதற்கோ, உரிமைகளைப் பறிப்பதற்கோ ஒரு அருகதையும் இல்லை. காலமாற்றத்தில் பாரம்பரியத் தொழில்களேகூடக் குற்றமாக மாறிவிடக்கூடிய சந்தர்ப்பம் இப்போதிருக்கிறது. நாம் மிகத் தீவிரமாக விரும்பிப் பின்பற்றத் துடிக்கும் கொள்கைகள் நம்மை அந்தத் திசையை நோக்கித்தான் விரைவு படுத்திக்கொண்டிருக்கின்றன.

சிறைக்கூடங்கள், வதைக்கூடங்களாக இருக்க வேண்டும் என்கிற சிந்தனை நில உடைமைக் காலத்தைச் சேர்ந்தது. சட்டத்தின் பேராலோ, ஊர்ப் பஞ்சாயத்துகளின் பேராலோ எந்த வடிவத்திலும் நாம் அங்கே திரும்பிச் செல்ல யத்தனிக்கக் கூடாது. பாரம்பரிய மீனவன் கடலுக்குச் செல்வதும், மலைவாழ் மக்கள் பூர்வீகத்தில் இருப்பதும் குற்றம் என்று கருதப்படுகிற கரடுமுரடான பாதையை நோக்கித்தான் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறோம்.

சிறையில் இருப்பவர்கள்

ஆங்கிலேயர்கள் விட்டுச்சென்ற பிற்பாடு சிறைகள் குறித்து நாம் அதிகம் கவலைப்படவில்லை. சிறைகள் பற்றி மேம்போக்காக நடந்துகொள்கிறோம். இது நமது வீட்டின் ஒரு அறையை புழக்கத்திற்கு அப்பால் மூடி வைத்திருப்பதற்குச் சமம். அங்கே ஓட்டடை படியலாம், விஷ ஜந்துக்கள் குடியேறலாம். எத்தகைய அநாகரிகமான செயல்களும் நடைபெறலாம். நமக்கு அது பற்றிய கவலைகளோ, அக்கறைகளோ அவசியமில்லை என நினைத்திருக்கிறோம். ஏனெனில் அது தண்டனை பெறும் இடம். இதற்கு அப்பால் சிந்திக்க வேண்டியதில்லை என நமது பொதுமூளை முடிவு செய்திருக்கிறது. இது பெரிய தவறு. அதனால்தான் நம்முடைய சிறைகள் காசநோய் வார்டுபோல, அல்லது கேன்சர் நோய் வார்டுபோல மாறியிருக்கின்றன. மனித நாகரிகத்தின் பேரில் அக்கறை கொண்ட அதிகாரிகள் சிலர் பொறுப்பெடுக்கும்போது சில அடிகள் முன்னகர்வதும் பின்னர் பழைய நிலைக்கே திரும்பிவிடுவதும் தொடர்கிறது.

இந்தியச் சிறைச்சாலைகளில் இருப்பவர்களில் 99 சதவீதம் பேர் ஏழைகளும், அதிகாரமற்றவர்களும்தான். நமது அமைப்புமுறையே ஏழ்மை, நோய், வன்முறை, விபத்து, கலவரங்கள், மனப்பிறழ்வு, தகாத குணங்கள், சிறை எல்லாவற்றையும் அதிகாரமற்றவர்களின் பக்கமாகத் திருப்பி முன்னேறிச் செல்வதாக உள்ளது. அதைத்தான் முன்னேற்றம் என்றும் கோடிட்டுக் காட்டுகிறது. நாமெல்லோருமே அதில் நம்பிக்கையும் வைத்திருக்கிறோம். இது மிகப் பெரிய அநீதி நிறைந்த அமைப்புமுறை என்பது நமக்கு விளங்கவில்லை.

நாம் ஒரு நாகரிகச் சமுதாயத்தை நோக்கித்தான் பயணப்படுகிறோம் எனில் சிறைச்சாலைகளிலுள்ள தண்டனைக் கைதிகளின் கல்வி, அரசியல், பண்பாடு ஆகியவற்றின்பேரில் மாசு ஏற்பட ஒத்துழைக்கக் கூடாது. அவர்களுடைய உரிமைகள் பற்றி அவர்கள் உணராமலிருப்பார்கள் என்றாலும்கூட. உரிமைகள் பாதுகாப்பில் காலம் தாழ்த்தக் கூடாது. சிறைகள் இன்னும் மேலதிக வெளிப்படைத் தன்மை பெற வேண்டியது காலத்தின் அவசியம். பொதுமக்களுக்கும், அவர்களுக்குமிடையே நிலவும் கசப்புமிக்க உறவு மேம்பட வேண்டும்.

கைதிகளின் படைப்பாக்க முயற்சிகள்

சிறை என்பது தனித்த பிராந்தியம் அல்ல, நமது வீட்டின் ஒரு அறை அது என்னும் எண்ணம் பொது மக்களுக்கு ஏற்படக் கைதிகளின் படைப்பாக்க முயற்சிகள் பெரிதும் உதவும். அந்த வகையில் ஓவியர் சந்ருவின் மேற்பார்வையில் அவரது மாணவர்கள் சிறைகளில் நடத்தும் ஓவியப் பயிற்சிகள் முன்னுதாரணமானவை. நல்ல இலக்கியம், நல்ல சினிமா, ஓவியம், இசை ஆகியவற்றோடு கைதிகளுக்கு ஏற்படும் உறவு நல்ல மாற்றத்தின் தொடக்கமாகும். இந்த ஓவியங்கள் சந்ருவின் மாணவர் கே.பி. கதிர்வேலால் பாளையங்கோட்டை சிறைக் கைதிகளுக்குக் கொடுக்கப்பட்ட பயிற்சியிலிருந்து உருவானவை.

இந்த ஓவியங்கள் பொதுவாக சில மன உணர்வுகளை ஆதாரமாகக் கொண்டிருக்கின்றன. விடுதலையின் வெளிச்சத்தை வேண்டுவது, ஒரு பொதுப்பண்பாக இந்த ஓவியங்களில் வெளிப்படுகிறது. மனைவி, குழந்தைகள் குறித்துக் கவலைகொள்ளும் ஓவியங்கள் அதிகம்.

பாபநாசத்தின் (கைதி எண்-1043) ஓவியம் மனைவியின் மீதான அன்பை வெளிப்படுத்துகிறது. அவரது தனிமை, குழந்தைகளின் கல்வி பற்றிக் கவலைப்படுகிறது. அதுபோல ராமகிருஷ்ணனின் (2110) ஓவியமும் அன்பையே பிரதானப்படுத்துகிறது. டி.ஆர். ரோஸ் தனது காதலுணர்வை வெளிப்படுத்துகிறார். வனராஜ் (கைதி எண் -2243) அப்பாவித்தனத்தின் மீது செலுத்தப்படும் வன்முறையைக் குறியீடாக வைத்துப் பேச முயல்கிறார். கணேசனின் ஓவியம் பிரிவின் வெம்மையை உணரும் அன்பு. ராமகிருஷ்ணனின் மற்றொரு ஓவியம் சிறையின் தனிமையையும், அது தரும் துயரையும் பேசுகிறது.

சி. முருகேசன் (கைதி எண்-6737), தங்கபாண்டி, நம்மாழ்வார் ஆகியோர் வரைந்த ஓவியங்களில் விடுதலைக்கான உணர்வு வெளிப்படுகிறது. எஸ்.எஸ்.கே. யின் கருடன் வானில் நிச்சலனத்துடன் பறக்கும் ஓவியம் குறிப்பிடத்தக்கது. குறைந்தகாலப் பயிற்சியில் கைதிகள் வரைந்த இந்த ஓவியங்கள், குழந்தைகள் வரையும் படங்களின் சாயலை ஒத்திருக்கின்றன. உணர்வுகளை நேரடியாக வெளிப்படுத்துவதில் சிறப்பும் பெறுகின்றன.

வைக்கம் முகம்மது பஷீரின் ‘மதிலுகள்’ போலக் காதலை வெளிப்படுத்தும் ஓவியங்கள் அநேகம். எவ்வாறாயினும் கலை, இலக்கியம், சினிமா, பண்பாடு ஆகியவற்றில் அவர்களுக்கிருக்கும் ஈடுபாட்டைப் பிரகடனம் செய்பவையாக இந்த ஓவியங்கள் அமைந்துள்ளன.

வெளியிலிருக்கும் மனிதர்கள், தங்களை நேரமற்றவர்களாகப் பாவித்து மிகுந்த அலட்சியம் கொண்டிருக்கும் காலம் இது. கைதிகள் தொடர்ந்து படைப்பாக்க முயற்சிகளில் ஈடுபடவும், அதற்குரிய பிரசுர வாய்ப்புகளும் அவர்களுக்கு அமையப் பெறுமாயின் கவிஞனோ, ஓவியனோ, கலைஞனோ சிறைகளிலிருந்து நுண்ணுணர்வுகளோடு வெளிவரப்போவது உறுதி. ஒரு புனித ஜெனேயோ, ஒரு ஜி. நாகராஜனோ, ஏன் ஒரு ஜான் ஆப்ரகாமோ சிறைச்சாலைகளிலிருந்து வர இயலாதா என்ன?

- லக்ஷ்மி மணிவண்ணன், கவிஞர் மற்றும் சிறுகதை ஆசிரியர், தொடர்புக்கு : slatepublications@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x