Published : 26 Nov 2014 09:37 AM
Last Updated : 26 Nov 2014 09:37 AM

உலக மசாலா: ஒரு நாளுக்கு 21 மணி நேர தூக்கம்

இஸ்ரேலைச் சேர்ந்த மாவோர் ஸபார் படைப்புகளைப் பார்க்கும்போது கண்களைக் கவரும், நாவில் நீர் ஊறும். ஆனால் அவற்றைச் சாப்பிடத்தான் இயலாது. ஏனென்றால் நிஜமான உணவுப் பொருள்களைப் போலவே பிளாஸ்டிக்கில் உருவாக்கியிருக்கிறார். அதுவும் உணவுத் தொப்பிகளாகச் செய்திருக்கிறார். ஐஸ்க்ரீம், சாலட், பிக்னிக் உணவு, மீன் என்று பல்வேறு தலைப்புகளில் இந்தத் தொப்பிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. 36 வயது ஸபாருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குடல் நோய் ஏற்பட்டது. அவருக்குப் பிடித்த எந்த உணவையும் சாப்பிட முடியாது. தனது உணவு ஆர்வத்தை எந்த விதத்திலாவது ஈடுசெய்ய இயலுமா என்று யோசித்ததன் விளைவாகவே உணவு தொப்பிகள் உருவாகியுள்ளன.

உலகிலேயே இதுபோன்ற தொப்பிகள் எங்குமே கிடையாது! அற்புதமான இந்தக் கற்பனைக்கும் கைத்திறனுக்கும் ஏற்றார்போல தொப்பிகளின் விலையும் மிக அதிகம். சுமார் 18 ஆயிரம் ரூபாய் கொடுத்தால்தான் ஒரு தொப்பியே வாங்க முடியும். இந்தத் தொப்பியை அணிந்துகொண்டு சென்றால், லட்சம் பேரிலும் நீங்கள் தனித்துத் தெரிவீர்கள். அப்படியென்றால் இந்த விலை கொடுப்பது நியாயம் தானே என்கிறார் ஸபார். இப்பொழுது நோய் குணமாகிவிட்டது. ஆனால் நோய் மூலம் உருவான உணவுத் தொப்பிகளால் மிகப் பெரிய கலைஞராக மாறிவிட்டார் ஸபார்.

உங்க கற்பனைக்கு மட்டுமல்ல, உங்க தன்னம்பிக்கைக்கும் ஒரு சல்யூட் ஸபார்!

க்ரிம் பிரதர்ஸ் எழுதிய ஸ்லீப்பிங் பியூட்டி கதையைப் போலவே நிஜத்தில் ஒரு ஸ்லீப்பிங் பியூட்டி இருக்கிறார். 36 வயது ஹெலென் வாட்டர்சன் ஒரு நாளைக்கு 21 மணி நேரம் தூங்குகிறார். விழித்திருக்கும் 3 மணி நேரத்தில் உணவு சாப்பிட்டுவிட்டு, விசித்திரமான நோய்க்கு மருந்து எடுத்துக்கொள்கிறார். மருந்தின் விளைவாக மீண்டும் 21 மணி நேரம் தூங்க ஆரம்பித்துவிடுகிறார். இந்த நோய் மூலம் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களை எல்லாம் இழந்து வருகிறேன். எனக்கு சமூக வாழ்க்கை இல்லை. காதல் வாழ்க்கை இல்லை என்று வருந்துகிறார் ஹெலென்.

உலகம் முழுவதும் இந்த ஸ்லீப்பிங் பியூட்டி சிண்ட்ரோமால் 1000 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு நினைவு ஆற்றலும் குறைந்துவிடுகிறது. குழந்தைப் பருவத்திலேயே நோயின் அறிகுறி ஆரம்பித்துவிட்டது. சோம்பேறி, முட்டாள் என்று எல்லோரும் அவரை அழைத்தனர். ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு முன்னால்தான் ஹெலென் நோயால் தாக்கப்பட்டிருக்கிறார் என்பதை எல்லோரும் உணர்ந்துகொண்டனர். மருந்துகளைக் குறைத்தால் ஒருநாளைக்கு அரை மணிநேரம்தான் விழிக்க முடிகிறது. மருந்து எடுத்துக்கொண்டால் 3 மணி நேரம் தாக்குப்பிடிக்க் முடிகிறது என்கிறார் ஹெலென்.

ஐயோ… இப்படியெல்லாம் ஒரு நோயா? கேட்கவே கஷ்டமா இருக்கு ஹெலென்…

செல்ஃபி மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், செல்ஃபி ஸ்டிக் புதிதாக விற்பனைக்கு வந்துள்ளது. இந்தக் குச்சியில் மொபைல் போனைச் செருகி வைத்துவிட்டால், சற்றுத் தூரத்தில் இருந்து போட்டோ எடுக்கலாம். இந்த வசதி மூலம் நிறையப் பேர் போட்டோவுக்குள் வரக்கூடிய வாய்ப்புக் கிடைக்கிறது. பரிசோதனைக் கட்டத்திலேயே இந்தக் குச்சி விற்பனைக்கு வந்துவிட்டது. சட்டத்துக்கு விரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ள இந்தக் குச்சியைப் பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறது தென் கொரிய அரசாங்கம்.

செல்ஃபியில் இருந்தே மக்கள் இன்னும் வெளிவரல… அதுக்குள்ளே செல்ஃபி குச்சி வேறயா?

இங்கிலாந்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் விற்கப்படும் மீன்கள் எல்லாம் ஒன்றிரண்டு நாட்களுக்குள் பிடிக்கப்பட்ட புதிய மீன்கள் என்று நினைத்து மக்கள் வாங்கிச் செல்கிறார்கள். ஆனால் 16 நாட்களுக்கும் மேல் ஆன பழைய மீன்கள் என்று வாடிக்கையாளர்களுக்குத் தெரிவதில்லை. மீன் ஆராய்ச்சியாளர் ரிச்சர்ட் சிவெர்ஸ் சமீபத்தில் பல இடங்களுக்கும் ஆராய்ச்சி செய்து, இந்த அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டிருக்கிறார். பழைய மீன்களை விற்பனை செய்யக்கூடாது என்று சட்டம் இருந்தாலும், வியாபாரிகள் அதை மீறி விற்பனை செய்துவருகின்றனர். பணம் கொடுத்துப் பொருள்களை வாங்குவதோடு, நோயையும் இலவசமாக வாங்கிவிடக்கூடாது. வாடிக்கையாளர்கள் விழிப்புணர்வுடன், கேள்விகள் கேட்டு, சரியான உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறார் ரிச்சர்ட்.

அடப்பாவிகளா… யாரைத்தான் நம்புறதுன்னு தெரியலையே…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x