Published : 16 Oct 2014 01:09 PM
Last Updated : 16 Oct 2014 01:09 PM

நொச்சில் மரத்தடி அம்மன்

கர்நாடக மாநிலம் சிமோகாவிற்கு அருகிலுள்ள உம்புஜம், சமணர்களின் முக்கிய இடமாகும். கி.பி1077-ல் பல்லவ மன்னன் மனைவி சட்டலாதேவி பஞ்சகூடகோயில் கட்டியதாக கல்வெட்டு உள்ளது. இங்குப் பார்சுவநாதர் மூலவர். இங்குள்ள பத்மாவதி அம்மன் மிகவும் புகழ்பெற்றது.

வடமதுரை நாட்டின் அரசன் சாகரதத்தன். அவன் மனைவி ஏலாதேவி. அவள் ஆண் குழந்தை வேண்டி பத்மாவதி அம்மனை வழிபட குழந்தைப் பிறந்தது. அக்குழந்தைக்கு ஜினதத்தன் எனப் பெயரிட்டு வளர்த்தனர்.

போருக்குப் போன சாகாதத்தன்

சாகரதத்தன் தனக்கு கப்பம் கட்டாத ஓர் அரசன் மீது போருக்கு கிளம்பினான். ஜினகுருவோ,போரில் வெற்றி பெற்றாலும் உன் குலத்திற்கு களங்கமாகும்.போரைத் தவிர்க்க ஆலோசனை கூறினார். ஆனால் அரசன் போருக்குச் சென்று வெற்றியுடன் காட்டு வழியேத் திரும்பினான்.

அப்பொழுது அரசன் ஒரு குடிசையைக் கண்டு குடிநீர் கேட்க பத்மினி என்பவள் நீர் தந்தாள்.அவள் அழகைக்கண்ட அரசன் அவளைத் திருமணம் செய்ய ஆசைப்பட்டான். தளபதியோ,இவள் காட்டுவாசி. நரமாமிசங்களையும் உண்பவள்.எனவே தங்கள் ஜினதர்மத்திற்கு பொருந்தாது என்றான். பத்மினியின் தந்தையோ இவளுக்குப் பிறக்கும் ஆணுக்கு அரசாட்சி தந்தால் பெண் தருவதாகக்கூற அரசனும் ஏற்று அவளை மணந்தான்.

நாளடைவில் மன்னன் புலால் உணவுகள் அனைத்தையும் உண்டான்.பத்மினிக்கு மாரிதத்தன் எனும் மகன் பிறந்து இளமைப்பருவம் அடைந்தான். பத்மினி அரசனிடம் ஜினதத்தனைக் கொன்று தன் மகனுக்கு பட்டம் சூட்ட ஆணையிட அரசனும் சம்மதித்தான்.அரசன் சமையல்காரனிடம், நான் எலுமிச்சை பழங்கள் கொடுத்தனுப்புவேன். எடுத்துவருபவனைக் கொன்று சமையல் செய் என ஆணையிட்டான்.

பின் ஜினதத்தன் மூலம் பழங்களை அனுப்பினான். ஜினதத்தன் வழியில் மாரிதத்தன் எதிர்பட, அண்ணனிடம், தானே பழங்களை சேர்ப்பதாகக்கூறி வாங்கிச் சென்றான். சமையல்காரன் மாரிதத்தனைக் கொன்று சமைத்து அரசனுக்குப் பரிமாறினான். உண்மையறிந்த அரசன் கோபம் கொண்டு ஜினதத்தனை பிடித்துவர ஆணையிட்டான்.

தப்பித்த ஜினதித்தன்

இதையறிந்த ஏலாதேவி மகனிடம் சுமக்குமளவு ஒரு சிறு பத்மாவதிஅம்மன் சிலையை வழித்துணைக்குக் கொடுத்து குதிரை மீதேற்றி தப்பிக்க வைத்தாள். காட்டு வழியில் ஜினதத்தன் ஒரு நொச்சில் மரத்தின் மீது சிலையை வைத்து மரத்தடியில் களைப்பாற உறங்கினான்.

கனவில் பத்மாவதிஅம்மன் தோன்றி, தான் இங்கேயே இருக்க விரும்புவதாகக் கூறினார். தன் கால்படும் இரும்பெல்லாம் பொன்னாகும். அதன்மூலம் ஒரு நகரை உருவாக்கி ஆளவேண்டும் என்றும் வரம் கொடுத்தாள். கண்விழித்தவன் குதிரை சேணத்தை சிலையின் பாதங்களில் வைக்கப் பொன்னானது. அதன் மூலம் நகர் அமைத்தான். அதுவே உம்புஜம். நொச்சில்மரம் கீழே கோயில் கட்டினான். பாண்டியமன்னன் மகளை மணந்தான்.

ஜினதத்தனைச் சோதிக்க அம்மன் இரு முத்துக்களை அவனிடம் கிடைக்கச் செய்தாள்.அதிலொன்று மங்கலானது. ஜினதத்தன் அதைக்கொண்டு இரண்டு மூக்குத்திகள் செய்து மங்கலானதை அம்மனுக்கும் நல்லதை மனைவிக்கும் அணிவித்தான். தேவி கனவில் தோன்றி நீ தவறு செய்துவிட்டாய். இங்கு நான் இருக்கமாட்டேன் என்றார். என்றது. ஜினதத்தன் தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டான்.அவனை மன்னித்த அம்மன் நொச்சில் மரம் காயாதவரை, அருகிலுள்ள குளம் வற்றாதவரை நான் இங்கேயே அருளுவேன் என வாக்களித்தார். அவர் வாக்குப்படி பத்மாவதி அம்மன் உம்புஜத்தில் அனைத்துமக்களுக்கும் அருளிக்கொண்டே இருக்கிறார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x