Last Updated : 22 Sep, 2014 11:50 AM

 

Published : 22 Sep 2014 11:50 AM
Last Updated : 22 Sep 2014 11:50 AM

மதுரையின் அழகு அங்குலம் அங்குலமாக பதிவு: வருவாய், வாய்ப்புகள் இன்றி தவித்து வரும் ஓவியக் கலைஞர்

மதுரையின் புராதன அழகை அங்குலம் அங்குலமாகப் பதிவு செய்துவரும் ஓவியக் கலைஞர் எஸ்.எஸ். சுந்தரம் (44), நிரந்தர வருவாய், வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார்.

மதுரை சின்னக்கடை தெரு கொண்டையநாயக்கர் சந்தில் வசிப்பவர் சு.சு.சுந்தரம். மதுரையின் பெருமைகளை எல்லாம் தேடித் தேடி தன் தூரிகைகளால் பதிவு செய்து வரும் ஓவியக் கலைஞர். மீனாட்சியம்மன் கோயில் சிற்பங்கள், தேர், திருமலை நாயக்கர் மகால் போன்றவற்றை யாரும் கற்பனைகூட செய்து பார்த்திராத கோணங்களில் இவர் வரைந்து குவித்துள்ளார். இவரின் கை வண்ணத்தில் உருவான பல ஓவியங்கள், மதுரையில் உள்ள பிரபல ஓட்டல்கள், மருத்துவமனைகளில் சித்திரமாக பார்வையாளர்களை மகிழ்விக்கின்றன.

13 வயசுலேயே தூரிகை

மதுரை திருமலை நாயக்கர் மகாலின் ராட்சத தூணுக்கருகில் அமர்ந்து, தவம் போல ஓவியம் வரைந்து கொண்டிருந்த அவரிடம் பேசினோம். ‘என்னோட பூர்வீகம் தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம். குடும்பச் சூழலால் எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை. ஆனா, 13 வயசுலேயே தூரிகை பிடிக்க ஆரம்பிச்சிட்டேன். முறையாக படிக்காதவன் என்றாலும், சத்யநாதன் என்ற ஓவிய ஆசிரியர்தான் என்னை ஊக்குவித்தார்.

ஒரு கட்டத்தில் ஓவியம் தான் வாழ்க்கை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். ஏதாவது ஒன்றை வரைய ஆரம்பித்தால், 5 முதல் 9 மணி நேரம் வரை, வேறு சிந்தனையே இல்லாமல் வரைவேன். சில படங்களை வரைந்து முடிக்க ஐந்தாறு நாட்கள் கூட ஆகும். ஆனால், அதற்கேற்ப வருமானம் கிடைக்காது. எனக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.

ஓவியம் வரைவதை பார்ப்பவர்கள் எல்லாம் பிரமாதமாக ஓவியம் வரையறப்பா.. என்பார்களே தவிர, விலை கொடுத்து வாங்க மாட்டார்கள். முறைப்படி ஓவியம் படிக்காததால் திறமை இருந்தும் ஓவிய ஆசிரியர் போன்ற நிரந்தரப் பணிக்கும் என்னால் செல்ல முடியவில்லை. சென்னை போன்ற ஊர்களில் நடக்கும் ஓவியக் கண்காட்சிகளில் பங்கேற்கவும் படிப்பு தடையாக இருக்கிறது.

மதுரையை விட்டு பிரிய மனமில்லை

என் திறமையை அறிந்தவர்கள், ஏம்பா மதுரையையே சுத்திக்கிட்டு இருக்க? சென்னைக்கு போனால் சினிமா, கட்டிடக்கலை, பத்திரிகைகள் என்று எத்தனையோ வேலைவாய்ப்பு இருக்கிறதே என்கிறார்கள். எனக்கோ மதுரையைப் பிரிய மனமில்லை. அப்படியே பிரிந்தாலும், சென்னையில் வீட்டு வாடகை கொடுக்கவும், என் குழந்தைகளை அங்கு படிக்க வைக்கவும் வசதி இல்லை.

மீனாட்சியம்மன் கோயிலும், மகாலுமே போதும். என் காலம் முழுக்க வரைவதற்கான ‘தீம்கள்’இங்கே நிறைய இருக்கிறது. ஒரு கலைஞனுக்குத் தான் இன்னொரு கலைஞனின் திறமை தெரியும். எனவே, என்னைப் போல கஷ்டப்படும் கலைஞர்களுக்கு ஓவியத்துறையில் உச்சம் தொட்டவர்கள், ஏதாவது வாய்ப்பு தந்தால் நன்றாக இருக்கும்.

பெயிண்ட் அடிக்கும் ஓவியர்கள்

ஆதரவு இல்லாததால் மதுரையின் மிகப்பெரிய ஓவியக் கலைஞர்கள் எல்லாம், பிழைப்புக்காக பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு போய்விட்டார்கள். இந்த தூரிகைகளை நழுவ விடாமல், எவ்வளவு காலம்தான் வறுமையோடு போராடப் போகிறேனோ தெரியவில்லை.’ என்றபோது அவரது கண்களில் நீர் வழிந்து கையில் இருந்த ஓவியத்தை நனைத்தது.

இவரைப் போன்ற அற்புதமான கலைஞர்கள் வெளிநாடுகளில் பிறந்திருந்தால் கொண்டாடியிருப்பார்கள். ஆனால், நாம்..?

இவரது தொலைபேசி எண்: 9842166330.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x