Published : 09 Sep 2014 09:44 AM
Last Updated : 09 Sep 2014 09:44 AM

புறநகர் பகுதிகளில் அதிகரிக்கும் லேப்டாப் திருட்டு: மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த போலீஸார் திட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலை நகர் மற்றும் வண்டலூர் பகுதிகளில் பல்வேறு தனியார் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில மாணவர்களும் படித்து வருகின்றனர். இம்மாணவர்கள், தாங்கள் படிக்கும் கல்லூரிகளைச் சுற்றியுள்ள வீடுகளில் கூட்டாக வாடகைக்கு தங்கியிருக்கின்றனர். சென்னையில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் படிக்கும் வெளியூர் மாணவர்களும் குறைந்த வாடகை மற்றும் ரயில் வசதி காரணமாக வண்டலூர் மற்றும் மறைமலை நகர் பகுதிகளில் தங்குகின்றனர்.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் கூட்டாக வீடுபிடித்து தங்குகின்றனர். இவர்களது வகுப்பு நேரம் வேறுபடுவதால், வெவ்வேறு நேரங்களில் வீட்டை விட்டு கிளம்புவதும், திரும்பி வருவதுமாக உள்ளனர். மடிக் கணினிகள் கட்டாயம் தேவைப் படுவதால் ஒவ்வொரு மாணவரும் தனித்தனி மடிக்கணினி களை வைத் துள்ளனர். விலையுயர்ந்த செல் போன்களையும் வைத்துள்ளனர். இந்த விலையுயர்ந்த பொருட்கள் திருடப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுவதாவது: ‘இம்மாணவர்கள் வீட்டில் இல்லாத நேரங்களில் வீட்டின் கதவை மூடாமல் சென்றுவிடுகின்றனர். வீட்டில் இருந்தாலும் கதவை மூடுவதில்லை. சில நேரங்களில் மது போதையில் கதவை உள் தாழிடாமல் தூங்கிவிடுகின்றனர். இதனால் இவர்கள் பயன்படுத்தி வரும் செல்போன், மடிக்கணினிகள் அடிக்கடி திருடு போகின்றன. இதை இவர்களின் வீட்டு அருகில் உள்ளவர்கள்தான் செய்கின் றனர். திருட்டையே தொழி லாக கொண்டவர்கள் செய் தால் நாங்கள் எளிதில் கண்டுபிடித்துவிடுவோம்.

திறந்து கிடக்கும் வீட்டில், அதன் அருகில் வசிப்பவர் எடுத்துச் சென்றால் எளிதில் கண்டுபிடிக்க முடிவதில்லை. இத்திருட்டு குறித்த புகார்களைப் பெறுவது, விசாரணை நடத்துவது, கண்டுபிடித்து பொருட்களை மீட்பது, காப்பீடு செய்யப்பட்ட போன்களுக்கு, கண்டுபிடிக்க முடியவில்லை என்று சான்று வழங்குவது ஆகிய வேலைகளை மட்டுமே முழு நேரப் பணியாக மறைமலைநகர் மற்றும் ஓட்டேரி காவல்நிலைய போலீஸார் பார்த்து வருகின்றனர். இதற்கிடையில் சட்டம் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டும்.

இப்பகுதியில் மடிக் கணினி, செல்போன் திருட்டு வழக்குகளை பதிவு செய்வதற் கென்றே தனி காவல்நிலையம் அமைத்தாலும் தவறில்லை’ என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் கூறியதாவது: ‘வாடகை வீடுகளில் கூட்டாக தங்கி படித்து வரும் கல்லூரி மாணவர்கள் தங்கள் உடமை களை பாதுகாப்பதில் மிகவும் அலட்சியமாக உள்ளனர்.

இதைத் தடுக்க அம்மாணவர் களை அழைத்து விழிப்புணர்வு கூட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x