Published : 22 Aug 2014 10:00 AM
Last Updated : 22 Aug 2014 10:00 AM

கார் பயணம் இனிதாக…

நடுத்தர குடும்பத்தினரின் போக்குவரத்து சாதனங்களில் இன்று கார் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. நகர்ப் புறம் விரிவடைந்த நிலையில் அலுவலகத்துக்கு செல்வதற்கு கார் மிகவும் அவசியமாகும். வேலைக்கு டிரைவரை அமர்த்தி அவருக்கு சம்பளம் கொடுத்து கட்டுப்படியாகாத சூழலில், கார் ஓட்டக் கற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கார் பயணம் சவுகர்யமானதாக இருக்கவேண்டுமென்றால், அதை சரிவர பராமரிக்க வேண்டும். உரிய இடைவெளியில் கார் பாகங்களை கவனித்து வந்தால் தான் நடுவழியில் மக்கர் செய் வதை தவிர்க்கலாம். கார் பராமரிப்பு குறித்து முக்கியமான ஆலோசனைகளை அளிக்கிறார் மை டிவிஎஸ் நிறுவனத்தின் கார் பராமரிப்புப் பிரிவு துணைப் பொதுமேலாளர் வி. ஸ்ரீராம்.

பொதுவாக எந்த நிறுவனத்தின் கார் வாங்கும்போதும் அத்துடன் ஒரு உபயோகிப்பாளர் புத்தகம் அளிப்பர். அதை கட்டாயம் படிக்க வேண்டும். அதிலேயே பல அடிப்படையான ஆலோசனைகள் கூறப்பட்டிருக்கும். இருப்பினும் பின்வரும் ஆலோசனைகளை பின்பற்றினால் கார் சிறப்பாக செயல்படுவதோடு அதன் செயல்திறனும் மேம்பட்டு நீண்ட காலம் உழைக்கும்.

காரில் செல்லும்போதே ஏதேனும் சந்தேகப்படும்படியான ஓசை கேட்டால் அதை உடனடி யாகக் கவனியுங்கள். காரில் ஏதேனும் பழுது ஏற்படக்கூடும் என்பதற்கான சப்தமாக கூட அது இருக்கலாம். வாரந்தோறும் என்ஜின் ஆயில், பிரேக் ஆயில், கிளச் ஆயில், ரேடியேட்டரில் தண்ணீர் அளவு மற்றும் கார் டயரின் காற்றழுத்தம் ஆகியவற்றைக் கவனிக்க வேண்டும். 2,000 கி.மீ. அல்லது மாதம் ஒருமுறை காரை சர்வீஸ் செய்ய வேண்டும்.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை (5,000 கி.மீ. முதல் 7,000 கிமீ) பேட்டரி, பவர் ஸ்டீரிங், கியர் டிரான்ஸ்மிஷன், ஃபேன் பெல்ட், ஹோஸ்பைப், முகப்பு விளக்கு ஆகியவற்றைக் கவனிக்க வேண்டும்.

6 மாதத்துக்கு ஒருமுறை கார் என்ஜினை டியூன் செய்ய வேண்டும். கார்புரேட்டர் மற்றும் புகை வெளியிடும் அளவைக் கண்காணிக்க வேண்டும். என்ஜின் ஆயில், ஃபில்டரை மாற்ற வேண்டும். சக்கரங்களின் செயல்பாடுகள், டயரின் நிலையை பரிசோதிக்க வேண்டும்.

15 ஆயிரம் கி.மீ. தூரம் ஓடியிருந்தால் கார் சக்கரத்தின் பேரிங்குகள், சஸ்பென்ஷன், பிரேக் சிஸ்டம், பிரேக் ஆயில், டிரான்ஸ்மிஷன் ஆயில் ஆகியவற்றை மாற்ற வேண்டும். அனைத்து ரப்பர் பகுதிகள், லைனிங் ஆகியவற்றை பார்த்து சரியில்லாதவற்றை மாற்ற வேண்டும். எப்போதும் காரின் அடிப்பகுதியில் துரு பிடிக்காத வகையிலான ரப்பர் பெயிண்ட் அடிக்க வேண்டும்.

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை காரை முற்றிலுமாக சோதிக்க வேண்டும்.

பேட்டரி: காரின் முக்கிய பகுதி களில் பேட்டரி முக்கியமானது. இதை வாரம் ஒருமுறை பரிசோதித்து அதில் உள்ள டிஸ்டில்ட் வாட்டர் அளவை உரிய அளவு பராமரிக்க வேண்டும். பேட்டரியிலிருந்து செல்லும் வயர்கள் சரியான வகையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

காருக்கான மசகு எண்ணெய் (லூப்ரிகன்ட்) எப்போதும் பிராண்டட் தயாரிப்புகளையே பயன்படுத்தவேண்டும். பிராண்ட் அல்லாதவை காருக்கு பிரச்சினையை ஏற்படுத்தும். கார் என்ஜின் சூடாக இருக்கும்போது குளிர்ந்த நீரை ரேடியேட்டரில் ஊற்றக்கூடாது. இதனால் சிலிண் டரில் வெடிப்பு ஏற்படலாம்.

காரின் கீழ்ப்பகுதியில் எண்ணெயை ஸ்பிரே செய்வது சரியான நடவடிக்கை அல்ல. சஸ்பென்ஷன் புஷ், ரப்பர் பாகங்கள், மின்சார வயர்களுக்கு எண்ணெய் ஊற்றக்கூடாது. 20,000 கிலோ மீட்டர் ஓடியபிறகு பிரேக் செயல்பாடு, சக்கரத்தின் பேரிங் ஆகியவற்றை பரிசோதிக்க வேண்டும். 10,000 கி.மீ. தூரம் ஓடிய பிறகு கார் டயர்களை நேரெதிர் திசையில் மாற்ற வேண்டும். அதாவது முன்சக்கர வலது புற டயர் பின்பகுதியின் இடது பக்கம் என்ற வகையில் மாற்ற வேண்டும். இது டயர் தேய்மானம் ஓரே சீராக இருக்க உதவும்.

கார் வைத்திருப்பது சற்று செலவு பிடிக்கும் விஷயம்தான். ஆனால் சிறிய செலவுகளை அவ்வப்போது செய்து பராமரித் தால், பெருமளவிலான செலவைத் தவிர்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x