Published : 20 Aug 2014 08:32 AM
Last Updated : 20 Aug 2014 08:32 AM

அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள்: எல்லை பாதுகாப்புப் படை சாதனை

இந்திய- வங்கதேசம், இந்திய- பாகிஸ்தான் எல்லையில் அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகளை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை நட்டுள்ளது.

சீனா, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் 15,106 கி.மீ. தொலைவுக்கு இந்தியா எல்லையைப் பகிர்ந்து கொண் டுள்ளது. இதில், 4,096 கி.மீ. தொலைவு இந்தியா வங்கதேச எல்லையாகவும், 3,323 கி.மீ தொலைவு இந்தியா- பாகிஸ்தான் எல்லையாகவும் உள்ளது. இந்த எல்லைப் பகுதிகளில் எல்லைப் பாதுகாப்புப் படை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.

மொத்தம் 10,500 எல்லைப் பாதுகாப்புப் படையினர் 30 நிமிடங்களில் 1.80 லட்சம் மரக் கன்றுகளை நட்டனர். இச் சாதனை லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லைப் பாதுகாப்புப் படை ஐ.ஜி. பி.என். சர்மா இது தொடர் பாகக் கூறும்போது, “செவ் வாய்க்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கி, அரை மணி நேரத்தில் 1.80 லட்சம் மரக் கன்றுகள் நடப்பட்டன. எல்லையை பசுமைமயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன” என்றார்.

மரக்கன்று நடும் நிகழ்ச்சியை, எல்லைப் பாதுகாப்புப் படை தலைவர் டி.கே. பதக் டெல்லியில் தொடங்கி வைத்தார். இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை டிஐஜி பிஎஸ் டோலியா, சில மரக் கன்றுகளை வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படை 12-வது பட்டாலியன் தலைவர் சலாலுதீன் கலீதாவிடம் கொடுத்தார்.

சலாலுதீன் கலீதா இதுதொடர் பாகக் கூறும்போது, “இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் ‘எனது பூமி, எனது கடமை’ என்ற திட்டத்தை நாங்கள் வரவேற் கிறோம். வங்கதேச எல்லையை பசுமை மயமாக்கும் முயற்சியை நாங்களும் தொடங்கவுள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x