Published : 24 Jun 2014 11:10 AM
Last Updated : 24 Jun 2014 11:10 AM

ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியை கோருகிறது உக்ரைன்: உள்நாட்டுப் போரால் நெருக்கடி

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்களின் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர உதவும்படி ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களிடம் உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ கோரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைனில் ஒருவார காலத் துக்கு போர்நிறுத்தம் செய்வதாக அதிபர் அறிவித்துள்ளார். ஆனால், அதை கிளர்ச்சியாளர்கள் நிராகரித்துவிட்டனர். தொடர்ந்து ராணுவ வீரர்கள் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் திங்கள்கிழமை 6 ராணுவ வீரர்கள் காயமடைந் துள்ளதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

இந்நிலையில், உக்ரைன் அரசு சார்பில் புதிய அமைதித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேற்கத்திய நாடுகளின் தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதிபர் பெட்ரோ போரோஷென்கோ பேசினார்.

அதோடு, இந்த திட்டம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்களை விரைவில் லக்ஸம்பர்க்கில் சந்தித்து உக்ரைன் வெளியுறவு அமைச்சர் விளக்கம் அளிக்கவுள்ளார்.

இந்நிலையில், “நாட்டின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையை தீர்க்க ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் உக்ரைன் நாட்டை காப்பாற்ற முடியும்” என்று அதிபர் பெட்ரோ போரோஷென்கோ தற்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கிடையே ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாரோவ் கூறும்போது, “அமைதித் திட்டம் தொடர்பாக பேச்சு நடத்த ஏதுவாக நீண்ட கால போர் நிறுத்தத்தை நடை முறைப்படுத்த வேண்டியது அவசியமாகும்” என்றார்.

முன்னதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விடுத்திருந்த செய்தியில், “உக்ரைனின் கிழக்குப் பகுதியில் வசிக்கும் ரஷ்ய வம்சாவளியினருக்கு கூடுதல் உரிமைகளை அளிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். இது தொடர் பான ஷரத்து, பெட்ரோ போரோ ஷென்கோ முன்வைக்கும் அமைதி திட்டத்தில் இடம் பெற வேண்டும்” என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x