Published : 08 Oct 2014 02:48 PM
Last Updated : 08 Oct 2014 02:48 PM

மக்கள் முதல்வர் ஜெயலலிதாவா?- விஜயகாந்த் கண்டிப்பு

ஊழல் வழக்கில் குற்றவாளியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை 'மக்கள் முதல்வர்' என்று‌ கூறுவது கண்டிக்கத்தக்கது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

மேலும், "அரசு அலு‌வலகங்கள், அரசுப் பேருந்து‌கள், திரையரங்குகள் மற்று‌ம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் அரசு விளம்பரங்கள், அம்மா உணவகங்கள், குடிதண்ணீர் பாட்டில்கள் போன்ற பலவற்றிலு‌ம் இன்னு‌ம் குற்றவாளி ஜெயலலிதாவின் உருவப்படங்களை வைப்பது‌ எந்த வகையிலு‌ம் நியாயமானது‌ அல்ல" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டம் - ஒழுங்கு குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 11 நாட்களாக நீண்ட தூக்கத்தில் இருந்து‌விட்டு எழுந்தது‌போல் இன்றைய ஆளும் அதிமுக அரசின் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கடையடைப்புகளோ, போராட்டங்களோ நடத்தக்கூடாது‌ பொது‌ மக்களுக்கு இடையூறு‌ ஏற்படுத்து‌ம் வகையிலான எந்தவொரு நடவடிக்கையையும் ஜெயலலிதா விரும்பமாட்டார் என்று‌ கூறியுள்ளார்.



இவ்வளவு நாட்கள் கழித்து‌ அனைத்து‌ வன்முறைகளும் நடந்தேறிய பிறகு, அறிவித்திருப்பது‌ பெரும் கண்டனத்திற்குரியது. நேற்று‌ நடந்த காட்சிகளை தொலைக்காட்சி மூலம் கண்ட மக்கள், பெயிலா? இல்லை ஜெயிலா? என்று‌ தெரியாமலேயே அதிமுகவினர் இந்த ஆட்டம் போடுகிறார்களே, இது‌என்ன கேலிக்கூத்து‌ என்று‌ம், இது, தமிழ்நாட்டையே தலைகுனிய வைக்கும் செயல் என்று‌ம், ஆளும்கட்சியினரே இது‌போன்ற போராட்டங்களை முன்நின்று‌ அரங்கேற்றியுள்ளனர் என்று‌ம் பேசிக்கொள்கின்றனர்.

தற்போது‌, பெயில் எப்பொழுது‌ கிடைக்குமோ? இல்லை கிடைக்காமலேயே போய்விடுமோ? என்று‌ தெரியாமல் இதற்கு மேலேயும் செலவு செய்து‌ இது‌போன்ற போராட்டங்களை நடத்த முடியாது என்பதால், இனி யார் முன்னின்று‌ இந்த செலவுகளை ஏற்க முடியும் என்று‌ கருதியதன் விளைவுதான் இது‌போன்ற அறிக்கையை இன்றைய முதல்வர் அறிவித்திருக்கிறாரோ என்று‌ மக்கள் எண்ணு‌கிறார்கள்.

நீதிமன்றத்தையும், நீதிபதியையும் தரக்குறைவான வார்த்தைகள் மூலம் விமர்ச்சித்து‌ம் போஸ்டர், பேனர் மற்று‌ம் போராட்டங்கள் மூலம் தரக்குறைவாக நடந்து‌ கொள்வது‌ நீதிமன்ற அவமதிப்பாகும். ஊழல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவது‌ ஊழலு‌க்கு துணைபோவதாகும்.

இதன் மூலம் நாட்டு மக்களுக்கு ஆளும் தரப்பினரும், அதன் ஆதரவாளர்களும் என்ன தகவலை மக்களின் மனதில் பதிய வைக்கிறார்கள். ஊழல் செய்வது‌தான் நியாயம் என்று‌ சொல்ல வருகிறார்களா? அல்லது‌ குற்றவாளி என்று‌ நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு சாதமாக செயல்பட்டு அவர் செய்ததது‌தான் உண்மை, சத்தியம் என்று‌ சொல்ல வருகிறார்களா? என்ற மிகப்பெரிய கேள்வி மக்கள் மனதிலு‌ம், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையேயும் எழுந்து‌ள்ளது‌.

ஜெயலலிதாவின் ஊழலு‌ம், நீதிமன்ற தீர்ப்பும் என்று‌ உள்ள பிரச்சனையை, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனையாக இதை திசைதிருப்பப் பார்க்கிறார்கள். இரண்டு மாநில பிரச்சனைகளுக்கு வழிவகுத்து‌ தமிழர் - கன்னடர் என்ற மோதலை உருவாக்கி இந்த பிரச்சனையின் மூலம் மிகப்பெரிய சட்டச்சிக்கலை உருவாக்க ஆளும்தரப்பினரே முயல்வது‌ வேதனைக்குரியது.

நேற்று‌ கூட கர்நாடக மாநிலத்தில் இருந்து‌ பழனி கோயிலு‌க்கு வந்திருந்த ஒரு குடும்பத்தினரின் வாகனத்தை அடித்து‌ நொறு‌க்கி மிரட்டப்பட்டுள்ளனர். அதில் இருந்த குழந்தைகள் கதறி அழும் காட்சிகளை பார்த்து‌ அப்பகுதி மக்கள் அக்குடும்பத்தினருக்கு பாது‌காப்பு அளித்து‌ள்ளனர்.

மேலு‌ம், கர்நாடக மாநில பேருந்து‌கள் பல இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் மூலம் தாக்கப்பட்டு ஓட்டுநர்கள் படுகாயம் அடைந்து‌ள்ளனர். இது‌போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கடும் நடவடிக்கையின் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்.

மக்கள் முதல்வர் ஜெயலலிதா என்று‌ அவர்களுக்கு சொந்தமான தொலைக்காட்சியில் கூறுவதை மக்கள் வன்மையாக கண்டிக்கின்றனர். முன்னாள் முதல்வராக இருந்தவர், தற்போது‌ குற்றவாளி ஜெயலலிதாவாக சிறையிலே அடைக்கப்பட்டுள்ளவர் என்று‌தான் மக்கள் கூறி வருகிறார்களே தவிர, இவர்கள் தொலைக்காட்சியில் சொல்வதைப்போல தமிழ்நாட்டு மக்கள் யாரும் மக்கள் முதல்வர் என்று‌ சொல்வதில்லை.

நீதிமன்றத்தால் குற்றவாளி என்று‌ நிரூபிக்கப்பட்ட ஒருவர் முதல்வர் பதவி மட்டுமல்ல சட்டமன்ற உறு‌ப்பினர் பதவியையும் இழந்து‌ சாதாரண குடிமகனாகத்தான் இருக்க முடியும். ஆனால், அவரை முதல்வர் என்ற அளவிலேயே இன்னு‌ம் வைத்து‌க்கொண்டு அரசு அலு‌வலகங்கள், அரசுப் பேருந்து‌கள், திரையரங்குகள் மற்று‌ம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் அரசு விளம்பரங்கள், அம்மா உணவகங்கள், குடிதண்ணீர் பாட்டில்கள் போன்ற பலவற்றிலு‌ம் இன்னு‌ம் குற்றவாளி ஜெயலலிதாவின் உருவப்படங்களை வைப்பது‌ எந்த வகையிலு‌ம் நியாயமானது‌ அல்ல, ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக்கும் செயல் என்று‌ அரசியல் விமர்சகர்களும் பொது‌ மக்களும் என அனைத்து‌ தரப்பினரும் இதை எதிர்க்கிறார்கள். எனவே, உடனடியாக அவற்றை இன்றே ஆளும் அதிமுக அரசு அனைத்து‌ இடங்களிலு‌ம் அகற்ற வேண்டும்.

முதல்வராக ஒருவர் பதவியேற்கும்போது‌ எடுத்து‌க்கொள்ளும் உறு‌திமொழியில் ஒன்றைக்கூட மதிக்காமல் அதைப் பின்பற்றாமல், அந்த உறு‌திமொழிக்கு முற்றிலு‌ம் மாறாக செயல்பட்டு முதல்வராக இருக்க எந்த தகுதியும் இல்லாதவர் என்பதை குற்றவாளி ஜெயலலிதா மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டுவதை விட்டுவிட்டு, சட்டம் - ஒழுங்கை காப்பாற்றி தமிழக மக்களின் அச்சத்தைப் போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்‌ கேட்டுக்கொள்கிறேன்" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x