Published : 02 Oct 2014 10:21 AM
Last Updated : 02 Oct 2014 10:21 AM

மூத்த குடிமக்களை அன்புடன் நடத்த பாடத்திட்டம்: உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுமா அரசு?

மூத்த குடிமக்களை அன்புடன் நடத்துவதற்காக பாட்டி தாத்தா மாணவர் குழுவை ஏற்படுத்தி வரும் சமூக ஆர்வலர், இதுதொடர்பான பாடத்திட்டத்தை பள்ளி, கல்லூரிகளில் கொண்டு வருவதே அவர்களுக்கு நாம் ஆற்றும் நன்றியாக அமையும் என்று வலியுறுத்தியுள்ளார்.

குழந்தைகளுக்காக தங்களின் சுயவிருப்பங்களைக்கூட தியாகம் செய்து கல்வியையும், செல்வத்தையும் தந்து செல்லும் பெற்றோர்கள் கடைசியில் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பப்படும் கொடுமை இன்னமும் தொடர்கிறது. இதுபற்றி இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்விதமாக பள்ளி, கல்லூரிகளில் பாட்டி தாத்தா பாச விழாவை நடத்தி வருகிறது மதுரையைச் சேர்ந்த இந்திரம் அறக்கட்டளை. மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டத்தை முறையாக அமல்படுத்தக்கோரி இந்த அமைப்பைச் சேர்ந்த கே.ராம்பிரபு தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சென்னை லயோலா கல்லூரி பாடத்திட்டத்தில் இருப்பதைப்போல, அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் மூத்த குடிமக்கள் குறித்த பாடத்திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவு இதுவரையில் நடைமுறைக்கு வரவில்லை. ஆனால், சுய முயற்சியால் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் பாட்டி, தாத்தா மாணவர் குழுவைத் தொடங்கி வருகிறார் ராம்பிரபு. புதிய முயற்சியாக வருங்கால ஆசிரியர்களான ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவிகளைக் கொண்டு பாட்டி தாத்தா மாணவர் குழுவைத் தொடங்கியுள்ளார் அவர்.

கல்லூரியின் ஒருங்கிணைப்பாளரான சி.மீனாட்சி இதுபற்றி கூறும்போது, எங்கள் கல்லூரியில் 200 மாணவிகள் படிக் கின்றனர். இவர்கள் அனைவரும் பயிற்சிக்காக மதுரையில் உள்ள 28 பள்ளிகளுக்குச் செல்கின்றனர். அந்தப் பள்ளி மாணவ, மாணவிகள் தங்கள் வீட்டில் உள்ள தாத்தா பாட்டிகளைப் புரிந்துகொண்டு அவர்களை மதிக்கவும், அன்பு காட்டவும் வலியுறுத்துவர். ஆசிரியர் பயிற்சியை முடித்து பணியில் சேர்ந்த பிறகும், மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள் என்றார்.

ராம்பிரபு கூறும்போது, பெற்றோர், முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வுச் சட்டத்தின்படி, மதுரை அரசு மருத்துவமனையில் மூத்த குடிமக்களுக்கு என தனி வரிசை, தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சில காவல்நிலையங்களில் மூத்த குடிமக்களின் பிரச்சினைகளை பரிவோடு கேட்பதற்காக தனி போலீஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். கல்வி நிறுவனங் களையும் இந்தப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. எனவே தான், பள்ளி, கல்லூரிகளில் என்.சி.சி., என்.எஸ்.எஸ். போல பாட்டி தாத்தா மாணவர் குழுவை ஏற்படுத்துதவும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் பாடத்திட்டத்தை கொண்டு வரவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகள் இந்தக் குழுவைத் தொடங்க ஆர்வமாக உள்ளன. ஆனால், என்.சி.சி., என்.எஸ்.எஸ். போல இந்த குழுவுக்கு அரசு நிதி உதவி செய்யாததால், பல கல்வி நிறுவனங்களில் இம்முயற்சி தாமதமாகி வருகிறது. எனவே, பல்கலைக்கழகங்கள் மூலமாகவோ, கல்வித்துறையின் மூலமாகவோ இதற்கான நிதியை அரசு உடனே ஒதுக்க வேண்டும்.

இதனை கண்காணிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒவ்வொரு மாவட்டத்தில் ஒரு குழுவும், மாநில அளவில் ஒரு ஒருங்கிணைப்பு குழுவையும் ஏற்படுத்த வேண்டும். இம்முறை செயல்பாட்டுக்கு வந்தால், நாட்டின் வளர்ச்சிக்காக பங்காற்றிய மூத்த குடிமக்களின் பெரும்பாலான பிரச்சினைகள் தீரும். வருங்கால மூத்த குடிமக்களான, இன்றைய இளம் தலைமுறையினரின் இறுதிக்காலமும் மகிழ்ச்சிகரமாக அமையும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x