Published : 16 Oct 2014 10:20 AM
Last Updated : 16 Oct 2014 10:20 AM

மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம்: விதிகளை தளர்த்த மத்திய அரசு திட்டம்

மருத்துவப் படிப்பு இடங்களுக்கான தேவையை கருதி, மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான விதிமுறைகளை தளர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் நாடாளுமன்ற ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு நேற்று முதல் முறையாக கூடியது. இக்கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பேசும்போது, “அதிக மருத்துவக் கல்லூரிகளின் தேவையை நான் உணர்ந்துள்ளேன். எனவே அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான விதிமுறைகள் தளர்த்தப்படும். தரத்தை சமரசம் செய்துகொள்ளாமல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

இக்கூட்டத்தில் மக்கள் ஜனநாயக கட்சி எம்.பி. மெஹ்பூபா முப்தி பேசும்போது, “ஏழைகளுக்காக மருத்துவக் காப்பீடு திட்டம் தொடங்கி தரமாக சிகிச்சை அளிக்க வேண்டும். அத்தியாவசிய மருந்துகளை சேமித்து வைக்கும் வகையில் மருந்து வங்கி தொடங்கவேண்டும்” என்றார்.

இதற்கு மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் பதில் அளிக்கும்போது, “மத்திய அரசால் தேசிய சுகாதார உறுதியளிப்பு இயக்கம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதில் மருத்துவக் காப்பீடு திட்டமும் உள்ளது. இத்திட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் மக்களுக்கான பிரிமியம் தொகையை அரசே செலுத்தும்.

வறுமைக்கோட்டுக்கு மேல் இருக்கும் மக்கள், குறைந்த அளவில் பிரிமியம் செலுத்தும் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள். இதற்காக மருத்துவக் காப்பீடு நிறுவனங்களுடன் அரசு பேச்சு நடத்தும்” என்றார்.

கூட்டத்தில் பாஜக உறுப்பினர் ரேகா வர்மா பேசும்போது, “தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அதிக அளவில் நடக்கின்றன. எனவே மாநிலங்களில் அவசர சிகிச்சை மருத்துவ மையங்கள் ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

அதிமுக உறுப்பினர் பி.வேணுகோபால், மார்க்சிஸ்ட் உறுப்பினர் பி.கே.ஸ்ரீமதி ஆகியோர் பேசும்போது, “தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் மாநில அரசுகள் தொடங்கியுள்ள மருத்துவக் காப்பீடு திட்டம் வெற்றி அடைந்துள்ளது. அத்திட்டத்தை தேசிய அளவில் செயல்படுத்த வேண்டும்” என்றனர்.

கூட்டத்தில் எம்.பி.க்களுடன் சுகாதார அமைச்சக அதிகாரிகளும் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x