Published : 03 Sep 2014 12:39 PM
Last Updated : 03 Sep 2014 12:39 PM

நாங்கள் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணியாகத் திகழ்கிறோம்: தோனி பெருமிதம்

இங்கிலாந்து அணியை ஒருநாள் தொடரில் சகல பிரிவுகளிலும் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி பற்றி தோனி குறிப்பிடும்போது, "நாங்கள் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி" என்று பெருமிதமடைந்துள்ளார்.

எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை ரஹானே, ஷிகர் தவன் தொடக்க ஜோடி துவம்சம் செய்து வெற்றி பெற்றது குறித்து தோனி கூறியதாவது:

"நல்ல விஷயம் என்னவெனில், முதல் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து முன்னேற்றம் கண்டு கொண்டே வந்தோம். இதுதான் மிகப் பெரிய நம்பிக்கை அளிக்கக் கூடிய ஒரு விஷயம்.

டாஸ் வென்றது முக்கியமாக அமைந்தது. அதற்கேற்ப வேகப்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக வீசினர். அவர்கள் கொடுத்த தொடக்க விக்கெட்டுகளினால் நடுக்கள வீரர்கள் மீது நெருக்கடிகளை அதிகரிக்க முடிந்தது.

ஒட்டுமொத்தமாக எனக்கு மிக்க மகிழ்ச்சி தந்த ஒரு வெற்றி, ரஹானே சதம் அடித்தார், நல்ல தொடக்கம் அமைந்தது, நிறைவான ஒரு போட்டியாக இது அமைந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார் தோனி.

உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்கு முன்பு போதுமான அளவுக்கு இங்கிலாந்து இந்திய அணியை சோதனை செய்ததா? என்ற கேள்விக்கு பதில் அளித்த தோனி "எங்களை எப்படி சோதித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?" என்றார்.

"கிரிக்கெட் ஆட்டத்தில் அதுதான் நடக்கும். இங்கிலாந்து அணியை நாங்கள் எங்களை சோதிக்க அனுமதிக்கவில்லை. காரணம் வேகப்பந்து வீச்சாளர்கள் நன்றாக வீசினர். அவர்களுக்கு சரியாக அமையாத நாட்களில் ஸ்பின்னர்கள் பொறுப்பேற்றுக் கொள்கின்றனர். எனவே எதிரணியினர் நம்மை சோதிப்பது நல்லதுதான் ஆனால் சோதிக்க விடாமல் வெற்றி பெறுவது அதைவிடவும் முக்கியமானது.

மேலும் ஆட்டத்தை வசதியாக முன்னமேயே முடித்து விடுகிறோம் 49வது 50வது ஓவர் வரை இழுப்பதில்லை" என்றார் தோனி.

எப்போதும் டெஸ்ட் தோல்விகளை மறக்க ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று ஆறுதல் அடைகிறோமே என்று கேட்ட போது, "அதுமட்டுமல்ல இந்த வெற்றிகள், இது ஏதோ ஆறுதல் பரிசுகள் அல்ல. டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்த பிறகு அதைப்பற்றி யோசிப்பதில் என்ன இருக்கிறது? அது முடிந்து போன ஒன்று அதனை நாம் இனிமேல் மாற்றி அமைக்க முடியாது.

மேலும் உலகக் கோப்பை வரும் நேரத்தில் துணைக்கண்டத்திற்கு வெளியே தொடரை வெல்வது எங்களுக்கு அவசியம். டெஸ்ட் தொடரில் என்ன நடந்தது என்பது பற்றி நாங்கள் யோசிக்கவில்லை. அல்லது எதிர்காலத் தொடரைப் பற்றியும் சிந்திக்கவில்லை.

மேலும் வடிவம் மாறும்போது அது கொஞ்சம் அழுத்தத்தை குறைக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டின் தேவைகள் வேறு, இந்த வடிவத்தின் தேவைகள் வேறு. ஆகவே நாம் ஒப்பிட முடியாது" என்றார்.

நான் கேப்டன்சியக் கையில் எடுத்தபோது சிறந்த அணி இருந்தது, இப்போதும் சிறந்த அணியாகத் திகழ்கிறோம் என்று கூறிய தோனி 91 வெற்றிகளுடன் இந்தியாவின் சிறந்த கேப்டன் என்ற சாதனையை நிகழ்த்தியது பற்றி கூறுகையில், "என்னுடன் விளையாடி பங்களிப்பு செய்த அனைவருக்கும்தான் நன்றி கூற வேண்டும், அவர்களது பங்களிப்பு இல்லையெனில் நான் இதனை சாதித்திருக்க முடியாது.

நான் என்ன நினைக்கிறேன் எனில் நாங்கள் எப்போதும் ஒரு சிறந்த ஒருநாள் அணியாகத் திகழ்கிறோம் என்பதே. ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம், ஆனால் தன்னம்பிக்கையுடன் இருப்பது முக்கியம், அனைத்து வீரர்களுக்கும் நன்றி" என்றார் தோனி.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x