Published : 16 Sep 2014 08:44 AM
Last Updated : 16 Sep 2014 08:44 AM

உங்களால்... உங்களுக்காக!

ஓராண்டு நிறைந்து முதல் பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறது 'தி இந்து' தமிழ்.

காலங்களைக் கடந்து பயணப்படப் போகும் ஒரு பத்திரிகையின் பயணத்தில், ஓராண்டு என்பது ஒரு கஜ தூரம்கூட அல்ல. அதே சமயம், நம் பயணம் சரியான திசையில்தான் அமைந்திருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள இத்தருணம் அவசியமானது.

கடந்த செப்டம்பர் 16 முதல் தினம் வெளியான தலையங்கத்தில், நம்முடைய தாய்ப் பத்திரிகையான 'தி இந்து' ஆங்கில இதழ் 1878-ல் தொடங்கப்பட்டபோது எழுதப்பட்ட முதல் தலையங்கத்தில் இருந்து கீழ்க்கண்ட வரிகளை மேற்கோள் காட்டியிருந்தோம் -

'பத்திரிகை என்பது மக்களின் கருத்தை வெளிப்படுத்தும் சாதனம் மட்டும் அல்ல; சூழலுக்கு ஏற்ப மக்களின் கருத்துகளைச் செம்மைப்படுத்தி உருவாக்குவதும் ஆகும். அந்தத் தேவையைப் பூர்த்திசெய்யவே நாங்கள் களம் இறங்குகிறோம்.'

'...நியாயமும் நீதியுமே எங்களை வழிநடத்துவதற்காக நாங்கள் நிர்ணயித்துக் கொண்டிருக்கும் எளிய கோட்பாடுகள்...'

'...நம் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் வளர்க்க வேண்டும். மதச்சார்பின்மையை உறுதியாகப் பின்பற்ற வேண்டும். விவேகமான எல்லாக் கருத்துகளுக்கும், நியாயமான அனைத்துத் தரப்பு விமர்சனங்களும் பாரபட்சமின்றி இடம் அளிக்க வேண்டும். ஆள்பவர்களுக்கும் ஆளப்படுபவர்களுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையை உருவாக்க வேண்டும். இவையே எங்கள் லட்சியம்.'

மேற்கண்ட லட்சியத்தில் 'தி இந்து' தமிழ் நாளிதழும் இந்த ஓராண்டில் சரியாகவே பயணம் செய்துள்ளது என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. வந்து குவியும் வாழ்த்துகளையும் மதிப்பீடுகளையும் பார்க்கும்போது, வாசகர்களாகிய உங்கள் எண்ணமும் அதுவே என்பது உறுதியாகிறது.

எங்கள் ஆசிரியர் குழு களம் இறங்கிய முதல் நாளே ஒரு முக்கியமான முடிவை எடுத்தது. இந்தப் பத்திரிகையைப் பொறுத்தவரையில், வாசகர்கள் வெறும் பார்வையாளர்களாக மட்டும் இல்லாமல், பங்கேற்பாளராகவும் இருக்க வேண்டும். இந்த முடிவின் ஒரு பகுதியாக 'கருத்துச் சித்திரம்' எனும் கார்ட்டூன் தீட்டும் பொறுப்பை வாசகர்களிடமே ஒப்புவிப்பதாக முதல் நாளே அறிவித்தோம். அங்கே தொடங்கியது வாசகர்களாகிய உங்களின் அபாரமான பங்கேற்பும் வழிநடத்துதலும்.

'வாசகர்களால்... வாசகர்களுக்காக' என்ற அடிநாதத்தை மிகச் சரியாக உள்வாங்கிக்கொண்ட நீங்கள், இந்த ஓராண்டிலே 'தி இந்து'வை முழுமையாக உங்கள் உயரிய ரசனைக்கும், தேவைக்குமான பத்திரிகையாக ஆக்கிக்கொண்டீர்கள்.

ஆரம்பத்தில், 'செய்திக் கட்டுரைகளைச் சுவாரஸ்யமான மொழியில் தருவது கவர்ந்திருக்கிறது; ஆனால், ஒரு அளவுக்கு மேல் செய்திக் கட்டுரைகள் வேண்டாமே' என்றீர்கள். மாற்றி அமைத்தோம். 'செய்திகள் ஆழமாக இருக்கலாம்; ஆனால், நீளமாக வேண்டாம்' என்றீர்கள்; மாற்றிக்கொண்டோம். 'எழுத்துருவின் அளவு சற்றே சிறிதாக இருப்பதால், படிக்கச் சிரமமாக உள்ளது' என்பது மூத்த வாசகர்கள் சிலரின் கருத்து; எழுத்துருவும் பெரிதானது.

சில சிறப்புப் பகுதிகளையும் தனி இணைப்பிதழாகக் கொண்டுவந்தால் நன்றாக இருக்கும் என்றீர்கள்; இணைப்பிதழ்களின் எண்ணிக்கை ஒவ்வொன்றாகக் கூடி, வாரம் முழுவதும் வண்ணக்கோலமாக உங்கள் இல்லங்களில் நிறைக்கின்றன. 'வயிற்றுக்கு உணவிடும் விவசாயத்துக்கு தனி பகுதி வேண்டாமா?' என்று கேட்டீர்கள். அப்படித்தான் 'நிலமும் வளமும்' மலர்ந்தது. தீபாவளி, பொங்கல் மலர்களை வரவேற்று உச்சி முகர்ந்த உங்கள் மகிழ்ச்சியே சித்திரை மலர், ஆடி மலர் என்று புதுப்புது மலர்களாகப் பூத்துக் குலுங்கத் தொடங்கியது.

பாராட்டுகள் உற்சாகம் தரும்... ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையோ அதையும் தாண்டி அளவற்ற தெளிவும் பலமும் தரும்.

செய்திகள், கட்டுரைகளில் பிழையோ, தொனி மாற்றமோ தென்பட்டபோது, உரிமையோடு சுட்டிக்காட்டினீர்கள். நாங்களும் தயங்காமல் திருத்திக்கொண்டோம்; கொள்கிறோம்.

குடும்பத்தின் அத்தனை அங்கத்தினர்களும் படித்துப் பயன்பெறும் 'தி இந்து' நாளிதழில், இடையில் ஓரிரு செய்திகள் கையாளப்பட்ட தொனியைச் சுட்டிக்காட்டி, 'அடுத்தவர்களின் அந்தரங்கத்தில் மூக்கை நுழைக்கும் செய்திகள் நமக்குத் தேவையில்லை' என்று தலையில் குட்டிச் சொன்னீர்கள். வருத்தம் தெரிவித்தோம்... கூடுதல் கவனம் காக்கத் தொடங்கினோம்.

வழக்கமான கடிதங்கள், மின்னஞ்சல்களைத் தாண்டி செல்பேசி மூலமாக உங்கள் கருத்துகளை உடனுக்குடன் பதிவுசெய்யும் தொழில்நுட்பத்தையும் 'தி இந்து' கையிலெடுக்க வேண்டும் என்பதுகூட நம்முடைய வாசகர் ஒருவரின் விருப்பம்தான். பதிப்புகள்தோறும் இதற்கென்றே தனி எண்களை ஒதுக்கினோம். மடை திறந்த வெள்ளமாக, தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தில் இருந்தும்கூடத் தகவல்களும் விமர்சனங்களும் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் வந்துகொட்டியபோது திக்குமுக்காடிப்போனோம். எங்களின் பொறுப்பு எத்தனை மடங்கு கூடிக்கொண்டே போகிறது என்பதை, உணர்ச்சிமயமான 'உங்கள் குரல்' பதிவுகள் எங்களுக்கு அன்றாடம் உணர்த்திக்கொண்டே இருக்கின்றன.

இதோ, இன்றைக்கு நீங்கள் விரும்பிக் கேட்ட பொலிவுமிக்க மேலும் சில மாற்றங்களோடு வந்திருக்கிறது இரண்டாம் ஆண்டு தொடக்க இதழ். அதன் ஒவ்வோர் அங்குலத்திலும் ஒளிர்வது உங்கள் யோசனையே.

சரிவர சாலைகள் இல்லாத கிராமத்துப் பள்ளிகளுக்கு நகரத்திலிருந்து 'தி இந்து'வை வாங்கிச் சென்று மாணவர்களுக்கு வாசித்துக் காட்டுகிறார்கள் ஆசிரிய வாசகர்கள். வயல்களிலும் 'தி இந்து'வின் கட்டுரைகளை வாசித்து, விளக்கிக்கொண்டிருக்கிறார்கள் விவசாய, கடலோடி வாசகர்கள். கடல் கடந்து தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ, அங்கேல்லாம் சமூக ஊடகங்களின் வழியே நம் பதிவுகளை கொண்டுச்சென்று, மிகக் குறுகிய காலகட்டத்தில் இணையத்தில் உச்சத்துக்கு 'தி இந்து' இணையதளத்தைக் கொண்டு சென்றிருக்கிறார்கள் அயல்வாழ் வாசகர்கள்.

ஒவ்வொருவருக்கும் இந்தத் தருணத்தில் நன்றியை உரித்தாக்குகிறோம்.

ஐந்து பதிப்புகளுடன் தொடங்கிய நாம், அடுத்தடுத்த சிறு நகரங்களையும் ஊடுருவி, குறுகிய காலத்தில் எட்டுப் பதிப்புகளாக வளர்ந்திருக்கிறோம். எல்லைகள் இன்னும் இன்னும் விரித்துச் செல்கின்றன. மாற்றங்கள் முன்னேற்றங்கள் ஆகின்றன. கைகோத்துச் செல்கிறோம்.

உங்கள் நல்லாதரவோடு என்றும் தொடரும் இந்த அற்புதமான பந்தமும் பயணமும்!

- கே.அசோகன்,ஆசிரியர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x