Last Updated : 05 Sep, 2014 12:44 PM

 

Published : 05 Sep 2014 12:44 PM
Last Updated : 05 Sep 2014 12:44 PM

சர்வதேச சினிமா: பிக் பாக்கெட் - குற்றமல்ல கலை

பலவீனமான மனிதன் மிஷெலின் குற்றங்குறைகளைப் பொருட்படுத்தாமல் பிரியத்தின் காரணமாக அவனை வந்தடைகிறாள் ஜியன். இந்த இரண்டு ஆன்மாக்களும் ஒன்றையொன்று சந்தித்துக் கொள்ளும் வித்தியாசமான பயணம்தான் 1959-ல் படமாக்கப்பட்ட ராபர்ட் பிரெஸ்ஸன்னின் பிக்பாக்கெட். காதலில் ஈடுபடுவதைவிட ஈர்ப்புடன் அவன் பிக் பாக்கெட் அடிப்பதில் ஈடுபடுகிறான். அவனைப் பொறுத்தவரை பிக் பாக்கெட் அடிப்பதால் உச்சச்கட்ட பரவசம் கிடைக்கிறது; அவனுக்கு அது ஓர் ஆன்மிக அனுபவம். பியோதர் தஸ்தோயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ நாவலின் ஈர்ப்பு காரணமாகவே இத்திரைப்படத்தை பிரெஸ்ஸன் உருவாக்கியுள்ளார். படமாக்கப்பட்ட விதத்தால் உலகத்தின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக பிக்பாக்கெட் மாறுகிறது.

கத்தோலிக்கரான ராபர்ட் பிரெஸ்ஸன் பிரெஞ்சு புதிய அலை சினிமாவின் இயக்குநர்களில் ஒருவர். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் 18 மாதங்களை ஜெர்மனியின் சிறைக் கொட்டடியில் கழித்தவர். மதம் போதிக்கும் அறத்தை, நியாயத் தீர்ப்பு என்னும் கோட்பாட்டை அர்த்தம் தொனிக்கும் தீவிரக் கேள்விகளால் துளைத்தெடுக்கிறார். ஆனால் கேள்விகள் வெளிப்படையாய் ஒலிப்பதில்லை; படத்தின் இருளில் மறைந்துகிடக்கின்றன. பின்னணி ஒலியும் காட்சிகளில் படரும் இருளும் ஒளியும் படத்தைப் பொருள்மிக்கதாக்குகின்றன.

படம் வாழ்வு குறித்த ஆழ்ந்த தத்துவக் கருத்துகளை மனதில் எழுப்புகிறது; மோதவிடுகிறது. தனிமனித ஆசைக்கும் சமூகம் வலியுறுத்தும் விழுமியங்களுக்கும் இடையில் அலைபாயும் வாழ்வின் ஊசலாட்டமும் உளவியல் சிக்கலும் காட்சிகளுக்கிடையே பொதிந்து கிடக்கின்றன.

நவீன உலகில், விருப்பமான வாழ்வுக்கும் விதிக்கப்படும் வாழ்வுக்கும் இடையில் காணப்படும் இட்டு நிரப்ப முடியாத இடைவெளியின் வெம்மையை உணர்த்துகிறது மிஷெலின் வாழ்க்கை. ஒல்லியான உருவம், ஒடுங்கிய முகம், கூர் நாசி, எப்போதும் கூச்சத்தில் மூழ்கிக் கிடப்பது போன்ற தோற்றம், மற்றவரின் கவனத்தை ஈர்க்க விரும்பாத எண்ணம் ஆகியவை கொண்டவன் மிஷெல். அவன் தன்மீது வைத்திருப்பதைவிடத் தன் தாய்மீது அதிகப் பிரியம் வைத்திருக்கிறான் அதே நேரத்தில் அவளை அடிக்கடி சென்று பார்ப்பதைத் தவிர்க்கிறான். தாய் இறந்த பின்பு அந்தத் தேவாலயத்தில் மிஷெலின் கண்களிலிருந்து வழிந்து கன்னத்தில் படர்ந்திருக்கும் கண்ணீர்க் கறையும் கேவல் மிக்க பார்வையும் பின்னணியில் ஒலிக்கும் துயரார்ந்த இசையும் அவனது துன்பத்தை மட்டுமல்ல அவனது பிரியத்தையும் துல்லியமாகச் சொல்கின்றன. மிஷெலை உருவாக்கியவர் பிரெஸ்ஸன். சிருஷ்டித்தாரெனில் அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தவர் மார்ட்டின் லசால். அவர் தொழில்முறை நடிகரல்ல, ஆனால் பிரெஸ்ஸனின் மனதிலிருந்த மிஷெல்லைத் திரையில் அப்படியே கொண்டுவந்திருக்கிறார்.

சாதாரண குற்றச் செயல் எனப் புரிந்துகொள்ளப்படும் பிக் பாக்கெட் அடிப்பதை அவன் தொழிலாகப் பாவிக்கிறான். அதன் அத்தனை நுணுக்கங்களையும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கற்றுத் தேர்ந்துகொள்கிறான்; அதில் வெற்றிபெறுகிறான்; தோல்வியுறுகிறான்; அவமானப்படுகிறான்; எல்லாமும் நிகழ்கிறது. தர்க்கத்தின்பால் ஈர்க்கப்படும் மனதைப் புறந்தள்ளி, மிஷெலை அவனது ஆசாபாசங்களுக்கு உட்பட்ட நிலையிலேயே நடமாட வைத்துள்ளார் ராபர்ட் பிரெஸ்ஸன். மிஷலின் நடை, உடை, பாவனைகள் அவனை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்துகிறது. ஆனால் அவன் அவர்களில் ஒருவன். இந்த முரண்தான் பிக் பாக்கெட் படத்தின் உணர்வுபூர்வ இழை. அறிவுக் கத்தியால் சம்பவங்களைக் கூறுபோட நினைக்கும் தர்க்க மனதைச் சர்வ சாதாரணமாக ஏமாற்றி ஒரு கலைஞனாக மிளிர்கிறார் ராபர்ட் பிரெஸ்ஸன்.

மிஷெல் சாதாரணமானவன். ஆனால் அவனது செயல் அவனை சூப்பர்மேனாக உணரச் செய்கிறது. அந்தப் பரவசம் மீண்டும் மீண்டும் அவனை அச்செயலில் ஈடுபடச் செய்கிறது. அவன் வாழ்ந்ததற்கான பொருளை அச்செயல் அவனுக்கு அளிக்கிறது. அவன் வேறு வேலை செய்து பிழைத்திருக்க முடியும். ஆனால் அவன் பிக்பாக்கெட் அடித்தே வாழ்கிறான். அதன் பின்னணியிலிருக்கும் அத்தனை ஆபத்தையும் மீறி அவனுக்குச் சாகசச் செயல் செய்த திருப்தி கிடைக்கிறது. வேறு எந்த வேலையிலும் கிடைக்காத திருப்தியை அவன் பிக்பாக்கெட் அடிக்கும் போது உணர்கிறான். அது அவனை ஆட்கொள்கிறது. பிக்பாக்கெட் அடிக்கும் தொழிலை அவன் தேர்ந்தெடுக்கவில்லை. அந்தக் கலை அவனைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறது. துயரத்தின் கதவை அவனாகவே சென்று தட்டுகிறான். அதை அவன் தவிர்த்திருக்கலாம் ஆனால் அவனால் தவிர்க்க இயலவில்லை. அந்த மாயச் சூழல் அவனை வழிநடத்துகிறது. சமூகப் பார்வையில் அது ஒரு பொறி, அதில் அவனாகச் சென்று சிக்குகிறான். பொறிக்குள் மாட்டிக்கொள்வதில் அவனுக்கு அதிக மகிழ்ச்சி கிடைக்கிறது. அந்த மகிழ்ச்சியே அவனது துக்கமாகவும் மாறுகிறது. துக்கம் தரும் மகிழ்ச்சியில் திளைக்கிறான் மிஷெல். இது புதிரானது, புரியாதது. ஆனால் தனது படத்தின் காட்சிகளில் இந்தப் புரிதலைப் புதைத்துவைத்துள்ளார் இயக்குநர் பிரெஸ்ஸன். அர்த்தமற்ற வழக்கங்களுக்குள் புகுந்துகொண்டு வர மறுக்கும் அபத்தத்தை அனாயாசமாக விளக்குகிறார் பிரெஸ்ஸன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x