Published : 21 Sep 2014 12:36 pm

Updated : 21 Sep 2014 12:36 pm

 

Published : 21 Sep 2014 12:36 PM
Last Updated : 21 Sep 2014 12:36 PM

நாங்க வேலைக்காரின்னா, நீங்க?

சில நாட்களுக்கு முன்பு வரை தொலைக்காட்சிகளில் பரவலாகவும் தொடர்ச்சியாகவும் ஒளிபரப்பப்பட்ட விளம்பரம் அது. அந்த வீட்டில் இருக்கும் குடும்பத் தலைவி திடீரென்று ஞானம் உதித்ததுபோல தனது வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணுக்குத் தான் அருந்தும் அதே கோப்பையில் தேநீர் தருவார். ‘எஜமானி'யின் கையில் இருக்கும் கோப்பையையும் தனது கோப்பையையும் பார்த்துப் பரவசப்பட்டுப்போவார் பணிப்பெண். சில பெண் அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக இப்போதெல்லாம் அந்த விளம்பரம் வருவதில்லை. வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கான கருத்தரங்கில் இதுபற்றிப் பேசும்போதே குரல் உடைகிறது சாந்திக்கு. “விளம்பரங்கள்ல மட்டுமில்ல, சீரியல்ல தொடர்ந்து எங்கள வேலைக்காரி வேலைக்காரின்னுதான் சொல்லுவாங்க. நாங்களும் பல சேனல்களுக்கு மனு போட்டுப் பார்த்துட்டோம். அவங்க மாத்திக்கிற மாதிரி தெரியல. நாங்க வேலைக்காரின்னா நீங்க எல்லாம் யாரு?” என்கிறார்.

எந்த மரியாதையும் இல்லை

சென்னையில் மட்டும் வீட்டு வேலை செய்யும் பெண்கள் தோராயமாக 10 லட்சம் பேர் இருக்கலாம் என்கிறார் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கான அறக்கட்டளையை நடத்தி வரும் ஜோசஃபைன் வளர்மதி. அரசு, முறையான கணக்கெடுப்பு எடுக்காத வரையில் வீட்டு வேலை செய்யும் பெண்கள் பற்றிய தரவுகள் சரியாகக் கிடைக்காது என்கிறார் அவர்.

‘‘சென்னை போன்ற நகரங்களில் இருக்கும் நடுத்தரக் குடும்பங்களில் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்குப் பெரிய அளவில் பிரச்சினை இல்லை’’ என்கிறார் வளர்மதி. “கொஞ்சம் பணக் காரர்கள் வீட்டில் வேலை பார்ப்பதுதான் கஷ்டம். கடுமையான ஏச்சுப்பேச்சுகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும். அந்த வீட்டில் இருக்கும் குழந்தை கள்கூட வீட்டு வேலை செய்பவர்களை மரியாதை இல்லாமல் பேசுவார்கள். கடுமையான வேலைச் சூழல் இருக்கும். நாம் கேள்விப்படும் வீட்டுப் பணிப்பெண் சித்திரவதை போன்ற செய்திகள்கூட அரசியல்வாதிகள் வீட்டிலோ பிரபலங்கள் வீட்டிலோ நடைபெறுவதுதானே” என்கிறார் வளர்மதி.

“நான் 12 வயசுல வேல பார்க்க ஆரம்பிச்சேன் மேடம். இப்போ எனக்கு 38 வயசு. ஆரம்பிச் சப்போ என்ன சம்பளமோ அதைவிட இப்போ கொஞ்சம்தான் அதிகம் வாங்குறேன். என் புருஷன் ஒரு குடிகாரரு. அவரு கையில காசு நிக்காது. என்கிட்டயிருந்தே அப்பப்போ புடுங்கிட்டுப் போயிடுவாரு. நான் வாங்குற ஆயிரம், ரெண்டா யிரத்த வச்சு எப்படி என் புள்ளங்கள காப்பாத்தப் போறேன்னே தெரியல” என்கிறார் சுஜாதா.

நித்யாவின் நிலை வேறு மாதிரி. “ஒரே வீட்டுல ஒரு நாளுக்கு நாலு மணி நேரம் வேல பார்ப்பேன். அவங்க வீட்டுலதான் கண்ணாடி டம்ளர் ஒடஞ்சி கையைக் கிழிச்சிடுச்சு. நூறு ரூபாயக் கொடுத்துட்டு வுட்டுட்டாங்க. கடன் வாங்கிதான் டாக்டர்கிட்ட போனேன், 800 ரூபா செலவாச்சு… நான் பரவாயில்ல. என் தங்கை ராணி ஒரு நாள் லீவு எடுத்தானு அவ அஞ்சு வருஷமா வேலை செஞ்ச வீட்டுல அவள நிறுத்திட்டாங்க” என்கிறார் நித்யா. “அவங்க வீட்டுல விசேஷத்தன்னிக்குதானே எங்க வீட்லயும் விசேஷம் இருக்கும். ஆனா, தீவாளியா இருந்தாக்கூட வேலையை முடிச்சுக் கொடுத்துட்டுதான் நாங்க கொண்டாட முடியும். லீவு போட்டா வேலையை விட்டு நிறுத்திடுவாங்க” என்கிறார் ராணி.

குழந்தைத் தொழிலாளர்கள்

மிக முக்கியமான பிரச்சினை இதுதான்: வீட்டு வேலை செய்பவர்களில் பலர் குழந்தைத் தொழிலாளர்கள். “எங்க அம்மா செத்தப்போ எனக்கு 12 வயசு. அஞ்சு தங்கச்சிங்க. நான் வேலைக்கு வராம என்ன செய்ய?” என்கிறார் நித்யா. இப்போது நித்யாவின் ஐந்து தங்கைகளும் வீட்டு வேலை செய்பவர்கள்தான். “என் மகளுக்கு நான் வேலை பார்க்குற வீட்டம்மா ஃபீஸ் கட்டுறாங்க. ஆனா, அவங்க கட்டுற வரைக்கும் தான் படிப்பு. நிறுத்திட்டாங்கனா எனக்கு அவளப் படிக்க வைக்கிற வசதி இல்ல” என்கிறார்.

பல சமயங்களில் உடல்நிலை சரியில்லாதபோது மகள்களை வேலைக்கு அனுப்புகிறார்கள் வீட்டு வேலை செய்பவர்கள். “இல்லேன்னா ஒரு நாள் கூலிய கட் பண்ணிடுவாங்க. அது ரொம்பப் பிரச்சனையாயிடும்.”

வீட்டு வேலை செய்யும் பணிப் பெண்களுக்கான வேலை நேரம், கூலி, விடுமுறை, உரிமைகள் குறித்து இதுவரை எந்த முறையான சட்டமும் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு, வீட்டுவேலை செய்பவர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு 50 ரூபாய் என்று கூலி நிர்ணயித்து ஒரு மசோதா இயற்றப்பட்டது. ஆனால், அதன் நிலை என்னவென்று இப்போதுவரை தெரியவில்லை. 2007-ல் 15 முறைசாராத் தொழில்களுக்கென்று தமிழகத்தில் ஒரு நலவாரியம் அமைக்கப்பட்டது. அதில் வீட்டுவேலையும் ஒன்று. நலவாரியத்தில் பதிவுசெய்பவர்களுக்கு பல சலுகைகளும் உண்டு. ஆனால், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை என்கிறார் வளர்மதி. “16 தொழில்களுக்கென்று நிதி ஒதுக்குகிறார்கள். அதில் வீட்டுவேலை செய்பவர்களுக்கென்று எவ்வளவு கிடைக்கும்? அதனால் வீட்டுவேலை செய்பவர்களுக்கென்று தனி நலவாரியம் கேட்டு வலியுறுத்திவருகிறோம்.”

2010-ல் அரசு சார்பாக அமைக்கப்பட்ட ஒரு குழு, தமிழகம் முழுவதும் பயணித்து, வீட்டுவேலை செய்யும் பெண்களிடம் பேசிக் குறைந்தபட்ச கூலி உள்ளிட்ட சில பரிந்துரைகளை முன்வைத்தார்கள். “ஒரு மணி நேரத்துக்கு 30 ரூபாய் கூலி உள்பட பல விஷயங்களை அவர்கள் பரிந்துரைத்தார்கள். அடுத்த சில மாதங்களில் தேர்தலைச் சந்திக்கவிருந்த நிலையில் அந்தப் பரிந்துரைகளை அரசு அமல்படுத்த முன்வர வில்லை” என்று வளர்மதி சொல்கிறார்.

வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கென்று சில சங்கங்களும் அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. ஆனால், இதையெல்லாம் தாண்டி அரசியல் கவனத்தைக் கோரும் இயக்கங்களாக அவையெல்லாம் மாறாதவரை அவர்களின் பிரச்சினைகள் தொடரும் என்பதுதான் உண்மை.

- கவிதா முரளிதரன், தொடர்புக்கு: kavitha.m@thehindutamil.co.in​


வீட்டு வேலைபணிப் பெண்விளம்பரம்வீட்டு வேலைத் தொழிலாளர்கள்குழந்தைத் தொழிலாளர்கள்

You May Like

More From This Category

More From this Author