Published : 02 Sep 2014 12:00 AM
Last Updated : 02 Sep 2014 12:00 AM

மு.க.அழகிரி மீதான நில அபகரிப்பு வழக்கு: விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு - ஆய்வாளர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்குமாறு காவல்துறை நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு ஆய்வாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா பொறியியல் கல்லூரி உள்ளது. இதனருகே உள்ள விநாயகர் கோயில் நிலத்தை கல்லூரி நிர்வாகம் அபகரித்ததாக, மு.க.அழகிரி உள்ளிட்டவர்கள் மீது கோயில் நிர்வாக அதிகாரியும், தக்காருமான ஆர்.ஜெயராமன் மதுரை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மு.க.அழகிரி, சம்பத்குமார், ஆதிலெட்சுமி, சேதுராமன், சதீஷ்குமார், கோயில் பூசாரிகளான ராமசாமி, வேலுச்சாமி ஆகிய 7 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் மு.க.அழகிரியை செப். 3 வரை கைது செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.

இந்நிலையில், நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி மு.க.அழகிரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘அபகரித்ததாக கூறப்படும் 44 சென்ட் நிலம் வேலுச்சாமி பண்டாரத்தின் சுய சம்பாத்திய சொத்து. அந்த நிலம் அவருக்கு சொந்தமானது என சார்பு நீதிமன்றம் அறிவிப்பு செய்துள்ளது. மேலும் இந்த நிலம் தொடர்பாக மதுரை மற்றும் திருமங்கலம் சார்பு நீதிமன்றங்களில் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆக. 11-ல் புகார் பெறப்பட்டு ஆக. 27-ல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரை முன்தேதியிட்டு வாங்கியுள்ளனர். புகாரில் என் மீது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை, ஜோடிக்கப்பட்டவை. எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அழகிரி தரப்பு வழக்கறிஞர் திவாகரன் வாதிடும்போது, ‘சிவரக்கோட்டையில் மு.க.அழகிரி கல்வி அறக்கட்டளை சார்பில் பொறியியல் கல்லூரி கட்டப்பட்டுள்ளது. அந்த கல்லூரிக்கு அனுமதி வழங்காமல் அண்ணா பல்கலைக்கழகம் இழுத்தடித்து வருகிறது. கல்லூரிக்காக கோயிலுக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்கவில்லை. அந்த நிலம் முறைப்படி வாங்கப்பட்டுள்ளது’ என்றார். அரசு வழக்கறிஞர் ராமச்சந்திரன் வாதிடும்போது, ‘விநாயகர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மனுதாரர் ஆக்கிரமித்துள்ளார். புகாரில் முகாந்திரம் இருந்ததால்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

விசாரணையின்போது, ‘வழக்குமுதல் தகவல் அறிக்கை நிலையில் தான் உள்ளது, இப்போதே ஏன் ரத்து செய்யக்கோருகிறீர்கள்’ என அழகிரி தரப்பிடம் நீதிபதி கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘பொய் வழக்கு என்பதால் ரத்து செய்யக்கோருகிறோம், விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று அழகிரியின் வழக்கறிஞர் பதிலளித்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்குமாறு காவல்துறையின் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு ஆய்வாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப். 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தங்களை வளப்படுத்திக் கொள்ளும் அரசியல்வாதிகள்

வழக்கு விசாரணையின்போது அழகிரி தரப்புக்கும், அரசு தரப்புக்கும் காரசார வாதம் நடைபெற்றது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘அதிகாரத்தில் இருக்கும்போது அனுபவிப்பதும், அதிகாரத்தை இழக்கும்போது குற்றம்சாட்டுவதும் அதிகமாக உள்ளது. இது இரு தரப்பினருக்கும் பொருந்தும். அரசியல்வாதிகள் அதிகாரத்தை மக்களுக்கு சேவை செய்வதில் பயன்படுத்த வேண்டும். அதை செய்வதில்லை. தங்களை மேம்படுத்த அதிகாரத்தை பயன்படுத்துவது இப்போது அதிகமாக உள்ளது. இதில் யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. யாராக இருந்தாலும் எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் இதில் விதிவிலக்கு கிடையாது. முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள் பலர் கல்வி நிலையம் நடத்துகின்றனர். கல்வித் தந்தையாக வலம் வருகின்றனர்’ என கருத்து தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x