Published : 09 Aug 2014 10:58 AM
Last Updated : 09 Aug 2014 10:58 AM

ஜாமீனில் வந்த வழக்கறிஞர் வெட்டிக்கொலை: மதுரையில் பழிக்குப்பழியாக நடுரோட்டில் பயங்கரம்

கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நடுரோட்டில் பழிக்குப்பழியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள சொக்கம்பட்டி திருவட்டநல்லூரைச் சேர்ந்த வீரபாண்டி கோனார் மகன் முத்து துரை (35). இவருக்கு திருமண மாகவில்லை. உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராகப் பணியாற்றிய இவர், கடந்த 3 ஆண்டுகளாக மதுரை திருப்பாலை அன்புநகரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார்.

இதற்கிடையே, திருவட்டநல் லூரைச் சேர்ந்த இவரது உறவினர் சண்முகசுந்தரம் என்பவர் கடந்த 11.5.2014-ம் தேதி அதே ஊரில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சொக்கம்பட்டி போலீஸார் கூட்டு சேர்ந்து கார் வாங்கிய தகராறில் சண்முகசுந்தரத் தைக் கொலை செய்ததாக வழக்கறிஞர் முத்து துரை, மாடசாமி, வேலுச்சாமி உள்ளிட்ட சிலரைக் கைது செய்து திருநெல்வேலி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் தினமும் மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முத்து துரைக்கு ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து கடந்த மாதம் 17-ம் தேதி சிறையிலிருந்து வெளியே வந்த முத்து துரை திருப்பாலை வீட்டில் தங்கியிருந்தபடி தினமும் மாலை நேரத்தில் அண்ணாநகர் காவல் நிலையத்துக்குச் சென்று கையெழுத்திட்டு வந்தார். மற்ற நேரங்களில் உயர் நீதிமன்ற கிளைக்கும் சென்று பணிகளைக் கவனித்து வந்தார்.

வெள்ளிக்கிழமை காலை உயர் நீதிமன்றத்துக்குச் செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டார். திருப்பாலை மெயின்ரோட்டில் வந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டியது. மேலும் கத்தியால் குத்திவிட்டு அவர்கள் தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த முத்து துரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுபற்றி தகவலறிந்த ஊமச்சிகுளம் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீஸார் அங்கு சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் சண்முகசுந்தரம் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்தது தெரியவந்தது. எனவே ஊமச்சிகுளம் போலீஸார் இதுபற்றி வழக்குப் பதிவு செய்து சண்முகசுந்தரத்தின் சகோதரர்கள் சண்முகவேல், பரமசிவம், மணிகண்டன், ராமர் உள்ளிட்ட சிலரைத் தேடிவருகின்றனர்.

வழக்கறிஞர்கள் மறியல்

வழக்கறிஞர் முத்து துரை கொலையைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் சங்க அவசரக் கூட்டம் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இதில் நீதிமன்ற புறக்கணிப்பு செய்வதென முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து வழக்கறிஞர்கள் அங்கிருந்து வெளியேறி மேலூர் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x