Published : 27 Apr 2015 04:37 PM
Last Updated : 27 Apr 2015 06:42 PM
கடந்த ஐபிஎல் தொடரின் போது உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின் படி ஐபிஎல் விவகாரம் தொடர்பான பிசிசிஐ தலைவராக கவாஸ்கர் பொறுப்பு வகித்தார். இதற்கான ஊதியமாக ரூ.1.90 கோடி கேட்டு சுனில் கவாஸ்கர் பிசிசிஐ-க்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஐபிஎல்-7 தொடரின் போது அதன் தலைவராகச் செயல்பட்டதற்கான ஊதியமாக சுனில் கவாஸ்கர் ரூ.1.90 கோடி கேட்டு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் காலக்கட்டத்தின் போது தான் ஊடகங்களில் பணியாற்ற முடியாது போனதால் இழந்த தொகையாக இதனை அவர் கோரியுள்ளார். இந்தக் கடிதம் பிசிசிஐ நிதிக்குழுவின் பரிசீலனைக்கு வைக்கப்பட்டுள்ளது.” என்றார்.
ஐபிஎல் தொடரின் போது நடைபெற்ற ஸ்பாட் பிக்சிங் ஊழல் தொடர்பான விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் சுனில் கவாஸ்கரை ஐபிஎல் விவகாரங்களைக் கவனிக்க நியமிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. மேலும் இதற்கு கவாஸ்கருக்கு உரிய தொகையையும் அளிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.