Published : 30 Apr 2015 04:00 PM
Last Updated : 30 Apr 2015 04:00 PM

மே தினம்: தமிழக தலைவர்கள் வாழ்த்து

மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கருணாநிதி (திமுக தலைவர்): ’’மே தினம். உழைப்பாளர் சமுதாயத்தின் பெருமைகள் சொல்லி; உழைப்பின் புகழ்பாடும் உன்னதத் திருநாள். இத்திருநாளில் - உடலுழைப்பால் உலகுக்கு வளம் சேர்க்கும் தொழிலாளர் சமுதாய உடன்பிறப்புகளுக்கும், அவர்தம் குடும்பத்தார்க்கும் எனது உளமார்ந்த மே தின நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

நாம் உண்ணும் உணவுப் பொருள்களிலும், அழகுற உடுத்தும் ஆடைகளிலும், வாழ்கின்ற வீடுகள், சாலை வசதிகள், போக்குவரத்து வசதிகள், மருத்துவ வசதிகள், பிற நுகர்பொருள்கள் உள்ளிட்ட அனைத்திலும் தொழிலாளர்களின் உழைப்பு உள்ளடங்கியிருத்தலை நாம் மறந்திடலாகாது.

வீட்டுக்கு விளக்காக; நாட்டுக்குத் தொண்டனாகத் திகழ்ந்துவரும் திமுக தொழிலாளர் சமுதாயத்தின் தோழனாக என்றும் துணைநிற்கும் என்பதை நினைவுபடுத்தி, இந்த ஆண்டின் மேதின விழா எழுச்சியுடன் நடைபெற - தொழிலாளர் சமுதாயம் மேலும்மேலும் வளம் பெற எனது மே தின நல்வாழ்த்துகளை மீண்டும் உரித்தாக்குகின்றேன்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்): ''இந்த உலகத்தை இயக்குகின்ற மூலதனமான சக்திதான் தொழிலாளர்களின் உழைப்பாகும்” என்ற உண்மையை பாட்டாளி வர்க்கம் உதிரம் சிந்தி செய்த பிரகடனத்தைத்தான் மே நாளாக உலகம் கொண்டாடுகிறது.

தொழிலாளர் வர்க்கம் தங்களது அடிப்படை உரிமைகளுக்காக மட்டும் போராடாமல், சர்வாதிகாரத்தை எதிர்த்தும், காலனி ஆதிக்கத்தை எதிர்த்தும், தேசிய இனங்களின் விடுதலைக்காகப் போராடியும், வரலாற்றை உலுக்கிய புரட்சிகளில் முக்கியப் பங்காற்றியது.

கடந்த காலங்களில் தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மீண்டும் அரங்கேற்றும் விதத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 ஏழைத் தொழிலாளர்களை ஆந்திர அரசின் காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கி, சித்திரவதை செய்து, படுகொலை செய்துள்ளனர். இந்தக் கோரக் கொலைகளுக்குக் காரணமான குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றி தண்டிக்க உறுதி ஏற்போம்.உழைக்கும் உத்தமர்களாம் தொழிலாளர்களுக்கு வாழ்த்துகள்'' என்று வைகோ கூறியுள்ளார்,

ராமதாஸ் (பாமக நிறுவனர்): ''உழைப்பாளர்களின் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்திய உழைப்பாளர் நாளை மே நாளாக கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த மகிழ்ச்சியை நம்மால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. நிலம் கையகப்படுத்துதல் சட்டம், சிறு மற்றும் குறு தொழிற்சாலைகளில் மட்டும் உற்பத்தி செய்யக் கூடிய பொருட்களை பெரிய தொழிற்சாலைகளும் உற்பத்தி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது, புதிய ஊய்வூதியச் சட்டம் போன்றவை தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது.

இன்னொருபுறம் தொடர்ந்து நான்காவது ஆண்டாக வறட்சியால் விவசாயிகளும், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் கட்டுமானத் தொழிலாளர்களும் வேலையின்றி வாடுகின்றனர். இவர்களின் வாட்டத்தை போக்க வேண்டிய ஆட்சியாளர்கள் தங்களது வாட்டத்தைத் தணிப்பதில் தான் துடிப்புடன் இருக்கிறார்கள். இந்த அவலங்களை போக்கி, தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்க பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடங்கியுள்ள லட்சியப் பயணத்தில் இணைந்து பாடுபட இந்த நாளில் உறுதி ஏற்க வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

விஜயகாந்த் (தேமுதிக தலைவர்): ''உலகம் முழுவதும் மே 1ஆம் தேதி தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. தொழிலாளர்களின் உரிமைகளையும், சுதந்திரத்தையும், நிலைநாட்டியதன் நினைவாகவும், முதலாளித்துவத்தின் அதிகார அடிமைத் தளையிலிருந்து விடுபட்டதன் நினைவாகவும் இந்த நாள் தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள பலவகையான தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்ட தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவை தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தொழிலாளர்களின் உரிமைகளுக்கான அனைத்து போராட்டங்களிலும், தோளோடுதோள் நின்று போராடி வருகிறது.

இந்த தொழிலாளர் தினத்தை தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களோடு மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்காகத்தான் உலகின் பெரும்பாலான நாடுகளில் மே 1ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் மே தின வாழ்த்துகள்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

ஜெயலலிதா (அதிமுக பொதுச் செயலாளர்): ''உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாளாம் மே தின நன்னாளில் உலகெங்கும் வாழும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான மே தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த உலகம் உழைப்பவர்களாலே வாழ்கின்றது. அதனால் அது உழைப்பவர்களுக்கே சொந்தமானது என்றும், இத்தகைய பெருமையையும், சிறப்பினையும் கொண்ட உழைப்பாளர்கள் தங்களுக்குள் வேற்றுமை பாராட்டாது, ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தும் வகையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்,உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள் உலகம் நமது என்று சிந்து பாடுங்கள் என்று உழைப்பாளர்களின் புகழை உயர்த்தி பாடியுள்ளார்.

வியர்வை சிந்த உழைப்பது என்பது கடினமானதாகக் கருதப்பட்டாலும், அதன் பலன்கள் இனிமையானவை என்பதை உணர்ந்து, உழைப்பின் மேன்மையை உள்ளத்தில் பதிய வைத்து, தங்களின் கடினமான உழைப்பால் வீட்டையும், நாட்டையும் உயர்த்திடும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த மே தின நல்வாழ்த்துகள்'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்): '' உழைக்கும் வர்க்கத்தின் அளப்பரிய பங்களிப்பால் ஆண்டின் ஒவ்வொரு நாளும் சிறப்புக்குரிய நாளாக மலர்கிறது. ஆனால், உழைப்போருக்கோ ஒவ்வொரு நாளும் வலி மிகுந்த நாளாகவே கழிகிறது.

குழந்தைத் தொழிலாளர் முறை, மனிதனின் மலத்தை மனிதனே அள்ளும் அவலம் ஆகிய கொடுமைகளை இந்திய மண்ணில் இன்னும் ஒழிக்க இயலவில்லையென்பது வெட்கக் கேடானதாகும்.

பள்ளிக்குச் செல்லவேண்டிய பிள்ளைகள், ஓடி ஆடி விளையாட வேண்டிய பிஞ்சுப் பருவத்தில், கல் சுமக்கவும், பீடி சுருட்டவும், தீப்பெட்டி-பட்டாசு செய்யும் வேலைகளிலும் ஈடுபடுத்தப்படும் அவலம் குறைந்தபாடில்லை. வீட்டுப் பணியாளர்களாக வாழ்க்கை நடத்தும் பெண்கள் படும் வேதனைகள் விவரிக்க இயலாதவை. கல் குவாரைகளிலும், செங்கல் சூளைகளிலும், பெருந்தோட்டப் பண்ணைகளிலும் சிக்கித் தவிக்கும் கொத்தடிமைச் சமூகத்திற்கு இன்னும் இங்கே விடிவில்லை.

இத்தகையதொரு சூழலில்தான், ஆண்டில் ஒரு நாள் மே நாள் எனக் கொண்டாடுகிறோம். தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து உழைக்கும் வர்க்கத்தினரைப் பற்றிச் சிந்திக்கவும், அவர்களின் மீட்சிக்காகப் போராட உறுதியேற்கவும் இந்த நாளில் சூளுரைப்போம் என விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வேண்டுகோள் விடுப்பதுடன், உழைக்கும் வர்க்கத்தினர் யாவருக்கும் மீண்டும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்’’ என்று திருமாவளவம் கூறியுள்ளார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் (தமிழக காங்கிரஸ் தலைவர்): ''தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 4 ஆண்டுகளாக உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராக அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.

கடந்த 10 மாதங்களாக மத்தியில் நடைபெற்று வருகிற பாஜக ஆட்சியும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும்,தொழிலாளர்களுக்கு விரோதமாகவும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தொழிலாளர் வர்க்கம் மத்திய - மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கிற்கு எதிராக ஓரணியில்திரள வேண்டிய சூழல் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.

இத்தகைய நடவடிக்கைகள் மூலமாக கட்சி எல்லைகளை கடந்து, அனைத்து தொழிலாளர்களும் தங்களது உரிமைகளை நிலைநாட்ட, ஆட்சியாளர்களை எதிர்த்து களத்தில் நின்று போராட வேண்டியது மிகமிக அவசியமாகும். இத்தகைய போராட்டங்களில் தொழிலாளர் வர்க்கத்திற்கு துணையாகதமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நிச்சயம் துணை நிற்கும்.

உழைப்பை மூலதனமாக வைத்து வாழ்ந்து வரும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மேதின வாழ்த்துகள்'' என்று ஈவிகேஎஸ் இளக்கோவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x