Published : 10 Apr 2015 09:26 AM
Last Updated : 10 Apr 2015 09:26 AM

ஆந்திர அரசுக்கு எதிராக தமிழகத்தில் வலுக்கும் போராட்டம்: சந்திரபாபு நாயுடு குடும்பத்தினரின் சூப்பர் மார்க்கெட் மீது தாக்குதல்

திருப்பதி அருகே தமிழர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின் றன. சந்திரபாபு நாயுடுவின் குடும் பத்தினருக்கு சொந்தமாக சென் னையில் உள்ள சூப்பர் மார்க் கெட் அடித்து நொறுக்கப்பட்டது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதி யில் கடந்த 7-ம் தேதி செம்மரம் வெட்டியதாகக் கூறி தமிழக கூலித் தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர போலீஸார் சுட்டுக் கொன் றனர். இதற்கு, தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆந்திர மாநில அரசைக் கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.

சூப்பர் மார்க்கெட் மீது தாக்குதல்

சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னர் சிக்னல் அருகே ராயப் பேட்டை நெடுஞ்சாலையில் ஹெரி டேஜ் என்ற பெயரில் சூப்பர் மார்க் கெட் உள்ளது. இது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்த மானது. நேற்று காலை இந்த கடைக்குள் புகுந்த 2 பேர், உருட்டுக் கட்டைகளால் கண்ணாடி களை அடித்து உடைத்து, அங்கிருந்த பொருட்களை வீசி எறிந்தனர். சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற் பட்டது. கடை மேலாளர் கொடுத்த தக வலின்பேரில் விரைந்து வந்த மயிலாப்பூர் போலீஸார், தாக்குத லில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர். அவர்கள் தமிழர் எழுச்சிப் படையை சேர்ந்த குமரவேல், கண்ணன் என்பது விசாரணையில் தெரியவந்தது.

விடுதலைச் சிறுத்தைகள் மறியல்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் நூற்றுக்கணக் கானோர் கோயம்பேடு பேருந்து நிலைய சிக்னலில் நேற்று காலை திரண்டு மறியலில் ஈடுபட்டனர். 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப் பட்டதைக் கண்டித்து கோஷங் களை எழுப்பினர். சந்திரபாபு நாயுடுவின் உருவபொம்மையும் எரிக்கப் பட்டது.

தகவலறிந்து வந்த போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து நெற்குன்றத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்துவைத்தனர். இந்த திடீர் மறியலால் கோயம்பேட்டில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதேபோல, எஸ்டிபிஐ கட்சியினர் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குள் திடீரென நுழைந்து ஒரு ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். மறியலில் ஈடுபட்ட 40 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மாதவரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆந்திரா வங்கி முன்பு நேற்று காலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இங்கும் சந்திரபாபு நாயுடு உருவபொம்மை எரிக்கப்பட்டது. விருகம்பாக்கம் சின்மயாநகரில் உள்ள ஆந்திரா வங்கி முன்பு வீரத்தமிழர் பேரவை சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர். மறியலில் ஈடுபட்டு கைதான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உட்பட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

வழக்கறிஞர்கள் போராட்டம்

சென்னை பாரிமுனை லிங்கி செட்டித் தெருவில் உள்ள ஆந்திரா வங்கியை முற்றுகை யிட்டு தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். அதே போல உயர் நீதிமன்ற வளா கத்துக்கு வெளியே ஜன நாயக வழக்கறிஞர்கள் சங்கத் தினர் சார்பில் போராட்டம் நடந்தது.

அவர்கள் சந்திரபாபு நாயுடு உருவபொம்மையை எரித்தனர். திருவொற்றியூர் நீதிமன்ற வழக்கறிஞர்களும் ஆந்திர அரசைக் கண்டித்து நீதிமன்றத் துக்கு வெளியே போராட்டம் நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x