Last Updated : 27 Apr, 2015 09:10 PM

 

Published : 27 Apr 2015 09:10 PM
Last Updated : 27 Apr 2015 09:10 PM

ஐசிசியின் சூதாட்ட புகார் விவகாரம்: சீனிவாசனுக்கு பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர் பதிலடி

சூதாட்டத் தரகர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவருடன் பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்கூர் இருந்ததாக பிசிசிஐக்கு ஐசிசி கடிதம் எழுதியதைத் தொடர்ந்து அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஐசிசி சேர்மன் சீனிவாசனுக்கு மிகக் காட்டமாக கடிதம் எழுதியுள்ளார் அனுராக் தாக்கூர்.

அதை அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் அனுராக் தாக்கூர் வெளியிட்டுள்ளார். இதனால் சீனிவாசன்-அனுராக் தாக்கூர் இடையிலான மோதல் மேலும் முற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தற்போது ஐசிசி சேர்மனாக இருக்கும் சீனிவாசன், நீதிமன்ற உத்தரவு காரணமாக பிசிசிஐ தலைவர் பதவிக்கு போட்டியிட முடியாமல் போனது. இதனால் ஜக்மோகன் டால்மியா தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் எதிர்கோஷ்டியைச் சேர்ந்த அனுராக் தாக்கூர் பிசிசிஐ செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதுமுதலே சீனிவாசன்-அனுராக் தாக்கூர் இடையிலான மோதல் முற்ற ஆரம்பித்தது.

இதனிடையே பிசிசிஐயின் பிரதிநிதியாக ஐசிசி சேர்மனாக இருக்கும் சீனிவாசனின் பதவிக்காலத்தை 2016 வரை நீட்டிப்பதா, இல்லையா என்பது குறித்து வரும் செப்டம்பரில் முடிவு செய்யப்படும் என அனுராக் தாக்கூர் தெரிவித்திருந்தார். இதுமட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மதிப்பு குறைத்து காட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில் பிசிசிஐ செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு சூதாட்டத் தரகர் என்று சந்தேகிக்கப்படும் கரண் கில்ஹோத்ரா என்பவரை அனுராக் தாக்கூர் சந்தித்துள்ளார் என பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐசிசி-யின் டேவ் ரிச்சர்ட்சன் கடிதம் எழுதியது தெரியவந்தது.

இதனால் கோபமடைந்த அனுராக் தாக்கூர், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஐசிசி சேர்மன் சீனிவாசனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நீங்கள் (சீனிவாசன்) பிசிசிஐ தலைவராக இருந்தபோது நான் இணைச் செயலாளராக இருந்திருக்கிறேன். இப்போது பிசிசிஐ செயலாளராக இருக்கிறேன். சூதாட்டத் தரகர்கள் என்று சந்தேகிக்கப்படுவர்களின் பட்டியலை நீங்கள் எங்களுக்கு தந்திருந்தால், நாங்கள் அவர்களை அடையாளம் கண்டு அவர்களோடு தொடர்பு வைக்காமல் இருந்திருக்க முடியும். கரண் ஹில்ஹோத்ரா பஞ்சாபில் அரசியல் மற்றும் கிரிக்கெட் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தபோதே எனக்கு தெரியும். அவர் ஒரு சந்தேகிக்கப்படும் சூதாட்டக்காரர் என்பதை அவருடைய செயல்பாடுகள் மூலமாக அறிவதற்கு எந்தவொரு தடயமும் கிடைக்கவில்லை.

சூதாட்டத் தரகர் என்று சந்தேகிக்கப்படுவரை என்பதை தெரியும் என்பதை உங்களுடைய நண்பர் நீரஜ் குண்டேதான் ஐசிசியின் கவனத்துக்கு கொண்டு வந்தார் எனக்கூறுவது மற்றவர்களுடைய விஷயங்களில் நீங்கள் அதிக ஆர்வம் செலுத்துவதையே காட்டுகிறது. உங்கள் குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை டெல்லியில் ஊடகங்களுக்கு விநியாகித்துக் கொண்டிருந்தார் நீரஜ் குண்டே. அவர் உங்களால்தான் இயக்கப்படுகிறார். உங்களின் கட்டளையை ஏற்றே பிசிசிஐ செயற்குழு கூட்டத்துக்கு முந்தைய நாள் மாலையில் நீரஜ் குண்டே அவ்வாறு செய்தார்.

நான் பிசிசிஐ செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாததாலேயே இப்போது இதுபோன்று தாக்குதல் நடத்துவதில் தீவிரமாக இருக்கிறீர்கள். சந்தேகிக்கப்படும் சூதாட்ட தரகர்கள் பட்டியலை எனக்கும், பிசிசிஐயில் உள்ள மற்றவர்களுக்கும் தெரிவியுங்கள். நாங்கள் அவர்களிடம் இருந்து விலகியிருப்போம். சூதாட்ட தரகர்கள் பட்டியலை சூதாட்ட வழக்கில் சிக்கிய உங்கள் குடும்பத்தினருக்கும் தெரிவியுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

கில்ஹோத்ராவும், அனுராக் தாக்கூரும் ஒன்றாக இருப்பதுபோன்ற ஒரு படம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியானது. அதில் தாக்கூரும், கில்ஹோத்ராவும் கேக்கை வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொள்வது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அனுராக் தாக்கூரின் கடிதம் குறித்து சீனிவாசன் கூறும் போது, “ஊடகங்களுக்கு விநியோகிக்கப்பட்ட அனுராக் தாக்கூரின் கடிதத்தைப் பார்த்தேன். ஆனால் அவருக்கு ஊடகங்கள் மூலம் பதில் அளிப்பது முறையாக இருக்காது. நான் தேவைப்பட்டால் அவருக்கு இது குறித்து கடிதம் எழுதுவேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x