Published : 14 Apr 2015 11:46 AM
Last Updated : 14 Apr 2015 11:46 AM

சேதி தெரியுமா?

இயக்குநராக மயில்சாமி

இஸ்ரோவில் பணியாற்றி வரும் விஞ்ஞானியும், சந்திரயான்-1 திட்ட இயக்குநருமான மயில்சாமி அண்ணாதுரை, பெங்களூரு இஸ்ரோ செயற்கைக் கோள் மையத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இந்த மையத்தின் இயக்குநராக இருந்த விஞ்ஞானி சிவகுமாரின் பதவிக்காலம் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் 1-ம் தேதி மயில்சாமி அண்ணாதுரை புதிய இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கான அறிவிப்பு ஏப்ரல் 6-ம் தேதி வெளியானது.

செம்மரக் கொலைகள்

திருப்பதி அருகே சேஷாலம் பகுதியில் ஏப்ரல் 7-ம் தேதி அன்று செம்மரங்களை வெட்டியதாக ஆந்திர மாநிலச் செம்மரம் கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர்கள் 20 தமிழகக் கூலித் தொழிலாளர்களை என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொன்றார்கள். தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்தச் சம்பவம். அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் குதித்தன.

இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டுத் தேசிய மனித உரிமை ஆணையம் ஆந்திர அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. மத்திய அரசும் அறிக்கை கேட்டது. ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கடற்படையின் சாதனை

போர்ச் சூழல் நிலவும் ஏமனில் இருந்து ஏப்ரல் 7-ம் தேதி 700-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர். அவர்களில் கிட்டத்தட்ட 600 பேர் மிக மோசமாக பாதிக்கப்பட்ட சனா பகுதியிலிருந்து மீட்கப்பட்டவர்கள். ஏமனிலிருந்து பெரும்பாலான இந்தியர்களை மீட்கும் பணி நிறைவுபெற்றது. இதுவரை 4,000 இந்தியர்களை தாயகம் அழைத்து வந்த இந்திய கடற்படை, 26 நாடுகளைச் சேர்ந்த 230 வெளிநாட்டினரையும் பத்திரமாக மீட்டது.

முத்திரை பதிக்குமா முத்ரா?

முத்ரா வங்கி எனப்படும் சிறு, குறு தொழில்கள் வளர்ச்சிக்கு நிதி அளிக்கும் நிறுவனத்தைப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 8-ம் தேதி டெல்லியில் தொடங்கி வைத்தார். மத்திய நிதி நிலை அறிக்கையில் அறிவித்தபடி இந்த வங்கி தொடங்கி வைக்கப்பட்டது. சுய தொழில் புரிவோருக்கும், சிறு வணிகர்களுக்கும் உதவும் இந்த வங்கி மூலம் ரூ. 10 லட்சம் வரை குறைந்த வட்டிக்குக் கடன் பெறலாம்.

நெடும் பயணம்

பிரான்ஸ், ஜெர்மனி, கனடா நாடுகளுக்கு 9 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 9-ம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். பயணத்தின் முதல் நாடாக பிரான்ஸுக்கு மோடி சென்றார். இந்தப் பயணத்தின் போது உள்கட்டமைப்பு, பாதுகாப்புத் துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பது, அணுசக்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

மேலும் இரு தரப்பு உறவு குறித்தும் இந்த நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்துகிறார் நரேந்திர மோடி. கடந்த 42 ஆண்டுகளில் கனடா செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x