Last Updated : 17 Apr, 2015 11:04 AM

 

Published : 17 Apr 2015 11:04 AM
Last Updated : 17 Apr 2015 11:04 AM

அறிவோம் நம் மொழியை: நீரின் தூணும் காலும்

சிறு இடைவெளிக்குப் பிறகு வாசகர்களை இந்தப் பகுதியில் சந்திப்பதில் மகிழ்ச்சி! இந்த வாரத்திலிருந்து ‘அறிவோம் நம் மொழியை’ பகுதி வெள்ளிக்கிழமைகளில் வெளியாகிறது. ஐம்பூதங்களில் காற்றுக்கு அடுத்ததாக நீர் குறித்த பதிவுகளைச் சில வாரங்களாகக் கண்டுவருகிறோம். நீரின் கவித்துவமான இரண்டு அவதாரங்களை இந்த வாரம் காணலாம்.

ஈழம், தமிழுக்கு வழங்கியிருக்கும் சொல் வளம் மிகவும் சிறப்பானது. ஈழத்து நாட்டார் பாடல்களிலிருந்து அண்மையில் அறியப்பெற்ற சொற்களில் ஒன்று மயக்கும் வகையில் இருந்தது. அந்தப் பாடல் இதுதான்:

காரனை நீரெழுந்து

துளி ஆலமெல்லாம் நீர் குடித்து

வானங் கறுத்து மாரி செய்யுங் கார்காலம்

கன்னிக் கிரான் குருவி

கடும் மழைக்கு ஆத்தாமல்

மின்னி மின்னிப் பூச்செடுத்து

விளக்கெடுக்குங் கார்காலம்

(‘பொடுபொடுத்த மழைத் தூத்தல் - கிழக்கிலங்கை நாட்டார் காதல் பாடல்கள்’, தொகுப்பு: அனார்)

இந்தப் பாடலில் உள்ள ‘காரனை’ என்ற சொல் தமிழ்ப் பேரகராதியில் ‘காரானை’ என்ற வடிவத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சொல்லின் பொருள்: ‘கடலின் மீது குவிந்து கீழிறங்கி நீரை முகந்து பெருந்தூண் போல நிற்கும் மேகம்’.

அதேபோல், ‘துளி ஆலமெல்லாம் நீர்குடித்து’ என்ற வரியும் பிரமிக்க வைக்கிறது. ‘ஒரே ஒரு மழைத்துளி அப்படியே பிரபஞ்சத்தைப் பருகுவது’ என்று தொகுப்பாசிரியர் பொருள் தருகிறார். ‘ஆலம்’ என்ற அரபிச் சொல் பிரபஞ்சம், உலகம் என்றெல்லாம் பொருள்படும்.

‘காரானை’ என்ற சொல் தமிழ்நாட்டு வழக்கில் உள்ள அழகான சொல்லொன்றை நினைவுபடுத்துகிறது. ‘மழைக்கால்’ என்பதுதான் அந்தச் சொல். ஒரு வகையில் ‘காரானை’க்கு நேரெதிர் இந்தச் சொல். கடலிலிருந்து நீரை முகக்கும் பெரும் தூண் ‘காரானை’ என்றால், முகந்த நீரை நிலத்தில் இறக்கும் பெருந்திரைதான் ‘மழைக்கால்’. ‘மேகம் கால் இறங்குகிறது’ என்றும் சொல்வார்கள். அதைப் பார்த்தால், வானத்துக்கும் பூமிக்குமாக திரைச் சீலை அசைவது போலிருக்கும்.

.அப்போது மண்வாடையும் காற்றில் வரும். பத்து இருபது கிலோ மீட்டர் தொலைவிலிருந்து பார்க்கும்போதுகூட மழைக்கால் தெரியும். ரயில் ஒன்று நம்மை நோக்கி வருவதுபோல் மழைக்கால் அப்படி நெருங்கிக்கொண்டிருக்கும். “ஏலேய், மழை துரத்துதுடா” என்று ஓட ஆரம்பிப்பார்கள். ஓடஓட மழையும் துரத்தும். இறுதியில் மழை வெற்றிகொள்ளும். மழையின் வெற்றி பேரானந்தமாய் நம்மை அரவணைத்துக்கொண்டால் அப்படியே அதில் நின்று கரைய வேண்டியதுதான். வயல்வெளி போன்ற பரந்த வெளியில் நிற்பவர்களுக்குத்தான் மழைக்காலின் தரிசனம் கிட்டும்.

வட்டாரச் சொல்லறிவோம்

வயல்வெளிகளில் கோடைக் காலத்தில் வண்டிகள் போய்வருவதால் ஏற்பட்ட தடத்துக்கு ‘சோடு’ என்று பெயர். இதை ‘வண்டிச் சோடை’ என்றும் சொல்வார்கள். இந்தச் சொற்கள் பெரும்பாலும் தஞ்சைப் பகுதிகளில் வழங்கப்படுபவை. கொங்கு வட்டாரத்தில் இதற்கு ‘இட்டேறி’ என்று பெயர். வாசகர்கள் உங்கள் வட்டாரத்தின் பிரத்தியேகச் சொற்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே!

- ஆசை,
தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x