Published : 24 Apr 2015 18:21 pm

Updated : 24 Apr 2015 18:21 pm

 

Published : 24 Apr 2015 06:21 PM
Last Updated : 24 Apr 2015 06:21 PM

புத்தகக் குறிப்புகள்: கக்கனின் வேட்டி அழுக்கு... ஆனால் கை சுத்தம்!

காமராஜர் ஆட்சியில் பொதுப்பணி அமைச்சராகவும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும், பணியாற்றியவர் கக்கன். அவரது எளிமைப் பண்புகளையும் நிகழ்வுகளையும் தியாகசீலர் கக்கன் எனும் நூல் மூலம் நூறு அத்தியாயங்களில் எழுதி தொகுத்திருக்கிறார் முனைவர் இளசை சுந்தரம்.

கக்கன் வரலாற்றை அலசி ஆராய்ந்து கூறுவதற்காக அவரது குடும்பத்தாரைச் சந்தித்து பேசி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக கக்கன் அவர்களது மகள் திருமதி கஸ்தூரிபாய் அவர்களின் நினைவலைகள் இந்நூல் எங்கும் விரிவாக நினைவுகூரப்பட்டுள்ளது. இதுவரை அறியாத அரிய பல செய்திகள் இதில் உண்டு.

கக்கன் அவர்களோடு தங்களது அனுபவங்களை அரசுச் செயலாளராக பணியாற்றிய அ.பத்மநாபன் ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட பலரும் சுவைபட கூறியுள்ளனர். பத்திரிகைச் செய்திகளும் இணைத்து ஓரளவுக்கு முழுமையான வரலாறாக தொகுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளில் ஊழலுக்காக சிறைசென்றவர்களின் வரலாறு விக்கிபிடியாவில் அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டுவரும் இக்காலத்தில் நல்ல அரசியல் தலைவர்கள் காண்பது அரிதாயிருக்கிறது.

ஆனால் நம் நாட்டில் நல்ல பல தலைவர்களும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லவேண்டியுள்ளது. காலத்தின் தேவை கருதி நூலை கொண்டுவருவதோடு அதை சிறப்பாக வெளியிட்டுள்ள மதுரா டிராவல்ஸ் வி.கே.டி.பாலனை மனமாரப் பாராட்டலாம்.

இந்நூலிலிருந்து சிலபகுதிகள் இங்கே பகிரப்படுகின்றன:

ஒருமுறை புதுக்கோட்டை மாவட்டத்தில் கக்கன் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்தார். சுற்றுப்பயண நாள்களைக் கணக்கிட்டு உடைகளை எடுத்துச் செல்வது வழக்கம்.

குளியலறைக்குள் சென்ற அமைச்சர் என்ன ஆனார்?

ஒரு குறிப்பிட்ட நாளில் சுற்றுப்பயணம் முடிந்து வீட்டிற்குத் திரும்ப வேண்டும். அன்று உடுத்த வேண்டிய வேட்டியை எடுதது உடுத்திக்கொள்ள முற்பட்டார். கட்டிக் கொள்ள முடியாத அளவுக்குக் கிழிந்திருந்ததைக் கண்டு மனம் சலனம் அடையவில்லை. உடனே அழுக்காயிருந்த ஒரு வேட்டியை எடுத்துச் சோப்புப் போட்டுத் துவைத்துக் கொண்டிருந்தார்.

குளியலறைக்குள் சென்ற அமைச்சரை வெளியில் நீண்ட நேரமாகக் காணோமே என்று காவலர்கள் கதவைத் தட்டினர். அமைச்சர் துணி துவைப்பதைக் கண்டு அதிர்ந்து போயினர். அமைச்சரின் இந்த நிலை தெரிந்திருந்தால் பணியாளரே துவைத்துக் கொடுத்திருப்பார்.

அல்லது அதிகாரிகளே ஒரு புதுவேட்டியை வாங்கிக் கொடுத்திருப்பார்கள். ஆனால் தாமே துவைத்து வெயிலில் உலர்த்திக் கொண்டு நின்ற அமைச்சரைப்பார்த்த அதிகாரிகள் உட்பட அனைவரும் அதிர்ச்சியுடன் புன்னகைத்தனர். கக்கனோ அமைச்சராக இல்லாமல் கக்கன்

என்ற தனிமனிதனாக நின்று புன்னகைத்தார். அந்த வேட்டி உலர்ந்த பின் உடுத்திக்கொண்டு சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்தார். அந்நாளைய செய்தித்தாள்கள் இச்செய்தியை வெளியிட்டன.

ஆலயப் பிரவேசத்தில் கக்கன்

1920ஆம் ஆண்டு வாக்கில் வைத்தியநாதய்யர் அவர்களுக்குக் கக்கன் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். கக்கன் கல்வியில் கொண்டிருந்த ஆர்வமும், அவர் பொதுத்தொண்டில் காட்டும் நேர்மையும் ஐயரை மிகவும் கவர்ந்தது. அதனால், தமது வீட்டிலேயே தங்க இடம் கொடுத்தார். கக்கனின் பழக்க வழக்கங்களைக் கண்டு வியந்து போன ஐயர் தமது வீட்டிலேயே உணவு கொடுத்தார்.

தொடர்ந்து தம் மக்களோடும் தம் மனைவியோடும் கக்கன் காட்டும் பாச உணர்வு ஐயரைப் பெரிதும் கவர்ந்தது. கக்கனைத் தம் மக்களில் ஒருவனாகவே கருதினார். தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காகத் தம்மை அர்ப்பணம் செய்துகொண்ட ஐயர் கக்கனுடன் நெருங்கிப் பழகும்போதுதான் பல உள்ளுணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிந்ததாம். 1939ஆம் ஆண்டு திருக்கோவில் நுழைவு (ஆலயப் பிரவேசம்) செய்தபோது அவ்வுணர்வுகளை மனதில் தாங்கியே ஆலயப் பிரவேசக் குழுவில் கக்கனையும் இணைத்துக்கொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினராக

அதற்குப் பின்னால் கக்கன் மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் தேர்தலில் நின்றபோது தாமே தேர்தலில் போட்டியிட்டது போல் செயல்பட்டதை அவர் பலமுறை சொல்லி மகிழ்ந்திருக்கிறார். அவ்வாறு படிப்படியாக உயர்த்தி இந்த நாட்டின் சட்டசபை உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உயர்த்தி அழகு பார்த்தவர் ஐயர்.

1955ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவராகவும் இருந்தார் கக்கன். உடல்நலக் குறைவாக இருந்த ஐயர் 1955ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் நாள் காலமானார். இச்செய்தி கேட்டு மதுரைக்கு விரைந்தார் கக்கன். அவரது இறுதிச் சடங்கில் கக்கனும் மொட்டையடித்துக்கொண்டார். ஐயரின் பிள்ளைகளுடன் பிள்ளையாக நின்றார். இதைப் பலரும் எதிர்த்தனர்.

வளர்ப்பால் மகனானவர்

அதற்கு அவது பிள்ளைகள் நாங்கள் பிறப்பால் மகன்களானோம். ஆனால், கக்கன் வளர்ப்பால் மகனானவர். ஆகவே எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை கக்கனுக்கும் இருக்கிறது என்று வைத்தியநாதய்யரின் மனைவியும் அவரது மக்களும் சொன்னதைக் கேட்டு ஐயர் இன சமுதாயத் தலைவர்கள் வாயடைத்துப் போயினர்.

அரசு மருத்துவமனையில் அனுமதி

1979ஆம் ஆண்டு தொடக்கத்தில் கக்கன் மதுரைக்குச் சென்றிருந்தார். அப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்றைய முதலமைச்சரான எம்.ஜி.ஆர். அப்போது மதுரை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்தார். கக்கன் மருத்துவமனயில் இருக்கும் செய்தியைக் கேள்வியுற்று அவரைச் சந்திக்க விரம்பினார். முன்னறிவிப்பின்றிக் கக்கனை பார்த்து நலன் விசாரிக்க மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்றார்.

எம்.ஜி.ஆர் நலம் விசாரிப்பு

ஆஸ்பத்திரியில் சாதாரண வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கக்கனின் அறையில் அவசரமாக எங்கிருந்தோ சேர்கள் கொண்டு வந்து போடப்பட்டன. உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக்கொண்டு இருந்தவரைப் பார்த்து எம்.ஜி.ஆர்.கண்கலங்கிவிட்டார். காமராஜர் ஆட்சியில் போலீஸ் மந்திரியாக பணியாற்றியவர்.

உடனே எம்.ஜி.ஆர். 'உங்களுக்கு நான் என்ன உதவி செய்யவேண்டும்?' எனக் கேட்க, 'உங்கள் அன்பு இருந்தால் போதும் நீங்கள் வந்ததே சந்தோஷம்' என்று கூறினார் கக்கன்.

எப்படி மனம் வந்தது?

'விசேஷ வார்டுக்கு மாற்றச் சொல்லவா?' எனக் கேட்டார் எம்.ஜி.ஆர். 'வேண்டாம்' என மறுத்துவிட்டார் கக்கன்.

ஆனாலும் எம்ஜிஆர் மனம் பொறுக்காமல், மருத்துவமனையின் பொறுப்பாளரை அழைத்தார், ',இவர் யார் என்று தெரியுமா? இவரது உழைப்பால் பெற்ற சுதந்திரத்தால் தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இவரை இதுமாதிரி பொதுமக்களோடு மக்களாக நடத்த உங்களுக்கு எப்படி மனம் வந்தது?' என்று கேட்டதோடு நில்லாமல் தனியறை வசதியும் உயர்தர மருத்துவமும் கிடைக்க அப்போதே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நூல் பெயர்:தியாகசீலர் கக்கன்

நூல் ஆசிரியர்:இளசை சுந்தரம்

பக்.240, விலை: ரூ.100

நூல் வெளியீடு:மதுரா வெளியீடு,

மதுரா டிராவல் சர்வீஸ் (பி) லிட்,

25-3, காந்தி இர்வின் சாலை,

எழும்பூர், சென்னை 600 008,

காமராஜர் ஆட்சிவைத்தியநாத ஐயர்மதுரை அரசு மருத்துவமனைஎம்.ஜி.ஆர்.

You May Like

More From This Category

More From this Author