Published : 26 Apr 2015 11:54 AM
Last Updated : 26 Apr 2015 11:54 AM
தெற்கு ஹாலந்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆந்தைகள் மனிதர்களின் தலை மீது வந்து அமர்கின்றன. 2.7 கிலோ எடை கொண்ட ஐரோப்பிய ஆந்தை மரங்களிலோ, வேலிகளிலோ வந்து அமர்வதில்லை. நடந்துகொண்டிருக்கிற மனிதர்கள், நின்றுகொண்டிருக்கிற மனிதர்களின் தலையை நோக்கிக் குறிவைத்து அமர்கிறது. ஒரு நிமிடம் ஓய்வெடுத்துவிட்டு, மீண்டும் பறந்து செல்கிறது. ஆந்தை தலையில் வந்து அமர்வதை அங்குள்ள மக்கள் ஆட்சேபம் தெரிவிப்பதில்லை. தலையைக் கொடுத்துவிட்டுக் காத்திருக்கிறார்கள். ஆந்தை கிளம்பிய பிறகு நகர்கிறார்கள். இந்தக் காட்சியைப் புகைப்படங்கள் எடுப்பதற்காக ஏராளமானவர்கள் வருகிறார்கள். ஆந்தைகளின் இந்தச் செயல் மூலம் தங்களுடைய கிராமம் பிரபலமடைந்து வருவதாக அங்குள்ளவர்கள் பெருமைப்படுகிறார்கள். கேமராவைப் பார்த்துவிட்டால் இன்னும் உற்சாகமாகி, தலையில் அமர்ந்தபடி நன்றாகக் காட்சி தருகின்றன ஆந்தைகள்.
அடடா! எவ்வளவு துணிச்சல்!
கனடாவில் வித்தியாசமான முறையில் திருமணக் கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு வனப்பகுதிக்கு நண்பர்கள் மற்றும் காதலியுடன் சென்றார் காதலர். அங்கே ஓரிடத்தைத் தோண்டச் சொன்னார். விஷயம் புரியாமல் மண்ணைத் தோண்டினார் காதலி. ஓர் அடி ஆழத்தில் ஒரு பெட்டி வைக்கப்படிருந்தது. அதை எடுத்துத் திறந்தார். அதற்குள் சிறியப் பெட்டி ஒன்று இருந்தது. அதையும் திறந்தார். உள்ளே ஒரு மோதிரம். புரியாமல் காதலரைப் பார்த்தார். சட்டென்று மோதிரத்தை வாங்கி, என்னைத் திருமணம் செய்துகொள்கிறாயா என்று கேட்டார் காதலர். காதலிக்குக் கண் கலங்கிவிட்டது. உடனே தன்னுடைய சம்மதத்தைத் தெரிவித்துவிட்டார். இப்படி ஓர் அழகான திருமணக் கோரிக்கை இதுவரை வைக்கப்பட்டதில்லை என்ற தலைப்பில், இணையதளங்களில் வீடியோ பகிரப்பட்டு வருகிறது.
எங்கிருந்துதான் புதுப் புது டெக்னிக்குகளைக் கண்டுபிடிக்கிறாங்களோ!
தைவானின் தலைநகர் தைபேயில் நாய்களுக்கான சலூன்கள் பிரபலமடைந்து வருகின்றன. சலூன்களுக்கு நாய்களை அழைத்துச் சென்றால், வட்டம், சதுரம் போன்ற வடிவங்களில் முடிகளை வெட்டி, நாய்களின் தோற்றத்தையே மாற்றிவிடுகின்றனர். முடி வெட்டும் வரை நாய்கள் மிக அமைதியாக ஒத்துழைப்பு தருவதுதான் இதில் ஆச்சரியம். தங்கள் செல்ல நாய்கள் சலூன்களின் மூலம் மிக அழகாக மாறிவிடுவதால், நாய்களின் உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஒருமுறை வட்டமான முக அமைப்பு இருந்தால் அடுத்த முறை சதுரத்துக்கு மாற்றிக்கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.
நாய்களுக்கு ஸ்பா ஆரம்பிச்சிடுவாங்க போல…
அழிந்து போன பறவைகளில் ஒன்று யானைப் பறவை. ஒருகாலத்தில் உலகின் மிகப் பெரிய பறவையாக இருந்தது. 10 அடி உயரமும் 500 கிலோ எடையும் கொண்டது. 800 ஆண்டுகளுக்கு முன் யானைப் பறவை இட்ட முட்டை ஒன்று லண்டனில் ஏலத்துக்கு வந்திருக்கிறது. இந்த முட்டையின் விலை 48 லட்ச ரூபாய். உலகில் இதுவரை 25 யானைப் பறவை முட்டைகளே இருப்பதால், இந்த முட்டைக்கு வரவேற்பு அதிகம் இருக்கிறது. 200 கோழி முட்டைகளைச் சேர்த்தால் ஒரு யானைப் பறவை முட்டை.
முட்டையும் பெருசு… ஏலமும் பெருசு!
லண்டனில் வசிக்கும் நடாலிக்கு இசை என்றால் ஆர்வம் அதிகம். அதிலும் வினைல் வெளியிடும் நிர்வனா இசை ஆல்பங்கள் மீது கூடுதல் ஈடுபாடு. நிர்வனா இசை ஆல்பங்களின் அட்டைகளைத் தன் முகத்தில் வரைந்துகொள்ள விரும்பினார் நடாலி. ஃபேஸ்புக் நண்பர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார். அவர்கள் 11 இசை ஆல்பங்களின் அட்டைகளைச் சிபாரிசு செய்தனர். அவற்றை எல்லாம் முகத்தில் வரைந்து, புகைப்படங்கள் எடுத்து, இணையத்தில் வெளியிட்டிருக்கிறார் இந்த இசைக் காதலி.
ம்ம்... ரசனை என்னவெல்லாம் செய்ய வைக்குது…