Last Updated : 21 Apr, 2015 01:03 PM

 

Published : 21 Apr 2015 01:03 PM
Last Updated : 21 Apr 2015 01:03 PM

பன்முக அறிவுத்திறன்: நாளை நமதே

இறுதிப் பரிட்சை எழுதி முடித்தவுடன் பள்ளியைவிட்டு வெளியே ஓடிவரும் மாணவர்களைப் பார்த்திருப்பீர்கள். அடேங்கப்பா, என்ன ஒரு கொக்கரிப்பு, கூச்சல், மகிழ்ச்சி! கையிலும், பையிலும் வைத்திருக்கும் பாடப் புத்தகங்களைத் தூக்கி எறிந்து ஆரவாரம் செய்வார்கள். இது எதைக் காண்பிக்கிறது? கல்வி என்பது சுகமா அல்லது சுமையா? சாமானியரின் எட்டாக்கனியாக இருந்த கல்வி, ஒரு கட்டத்தில் தூக்கிச் சுமக்க முடியாத பாரமாகிப்போன அவலத்தைப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். அதே நேரம், சமீப காலங்களில் கல்வி உலகில் மாற்றத்துக்கான ஒளிக் கீற்றுகள் ஆங்காங்கே தென்படுகின்றன.

அறிவு ஏராளம்

உலக அளவில் கார்டனர் எனும் உளவியல் நிபுணர் 1980களில் பன்முக அறிவுத்திறன் எனும் கோட்பாட்டை உலக மேடையில் அரங்கேற்றி மாபெரும் அதிர்வை ஏற்படுத்தினார். அறிவின் பல பரிமாணங்களை அவர் நிரூபித்தார். கற்றல் என்பது ராணுவப் பயிற்சி போல இறுக்கமான வடிவில் இயங்க வேண்டியதில்லை. ஒவ்வொரு குழந்தையின் தனித்திறனை, ஆற்றலைக் கண்டறிந்து அதை மென்மேலும் வளர்த்தெடுப்பதே சரியான கல்வி.

அதற்கு மனித மூளையின் ஆற்றலை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும் எனக் கூறினார் கார்டனர். கணித அறிவையும், மொழி அறிவையும் சரியாகக் கற்பிப்பதே சிரமம். இதில் இந்த மனிதர் எட்டு விதமான அறிவுத் திறன்கள் உள்ளன என்கிறாரே! இத்தனையும் கற்பித்தல் எப்படிச் சாத்தியம் எனும் எதிர் கேள்வி ஆரம்பத்தில் எழுந்தது. பின்பு ஒரு கட்டத்தில் பன்முக அறிவுத்திறன் கோட்பாட்டின் முக்கியத்துவம் சர்வதேச அளவில் புரிந்துகொள்ளப்பட்டு இன்று பல தளங்களில் கல்வியாளர்களால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அதே சமயம் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வணிகப் பொருளாகவும் மாற்றப்படுகிறது என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. “எங்கள் பிராண்ட் பாலைப் பருகினால் உங்களுக்கு அத்தனை விதமான பன்முக அறிவுத்திறனும் வளரும்” என சீனாவில் ஒரு பால் விளம்பரம் பார்த்து வாயடைத்துப்போனதாக கார்டனர் தன்னுடைய சமீபத்திய பன்முக அறிவுத்திறன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது யாருக்காக?

பன்முக அறிவுத்திறனைக் கற்பிக்கும் பள்ளிகள் என்ற அடைமொழியோடே பல தனியார் பள்ளிகள் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் செயல்படுகின்றன. சர்வதேசப் பள்ளிகள் எனும் அடையாளத்தோடு இயங்கும் இப்பள்ளிகளில் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்குக் கல்வியைச் சுவாரஸ்யமாகவும், லகுவாகவும் அளிக்கப் பல முயற்சிகள் உத்வேகமாக எடுக்கப்பட்டு வருகின்றன.

இவை ஓர் அளவுக்குச் சிறப்பாகவும் செயல்படுகின்றன என்பதும் தெரியவருகிறது. ஆனால் நாம் கடந்த ஆறு மாதங்களாகப் பன்முக அறிவுத்திறனை விவாதப் பொருளாக எடுத்துக் கொண்டதற்கு காரணம் வேறு. பன்முக அறிவுத்திறன் எனும் அற்புதமான செயல்திட்டம் அத்தனை குழந்தைகளையும் சென்றடைய வேண்டும். அதற்குத் தற்போது எல்லா மட்டத்திலும் இயங்கும் கல்வித் திட்டத்தைப் புரிந்துகொள்ள வேண்டியது முதலில் அவசியமாகிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை அரசு மற்றும் அரசு சார்ந்தப் பள்ளிகளின் சமச்சீர் கல்வித்திட்டம் இதில் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தத் திட்டத்தின் பிரதான அம்சம் “சுமையற்ற கற்றல் முறை” என்பதாகும். நேரடியாகப் பன்முக அறிவுத்திறன் கோட்பாட்டைப் பின்பற்றவில்லை எனினும் அதன் முக்கிய அம்சங்களை வெளிப்படுத்துகிறது இந்தத் திட்டம். அதாவது செயல்முறை விளக்கத்தின் அடிப்படையிலானப் பாடத்திட்டம் இதன் முக்கிய அம்சமாகும்.

ஒரே பாடப்புத்தகத்தை வருடம் முழுவதும் மாணவர்கள் மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியமில்லை. முப்பருவ திட்டத்தில் வகுப்பறையின் உள்ளேயும், வெளியேயும் மாணவர்களின் செயல்பாடுகள் அடிப்படையில் கிரேடு அளிக்கப்படுகிறது. முதல் மாணவர் கடைசி மாணவர் போன்ற படிநிலைகள் கிடையாது. இவ்வாறாக, சமத்துவமான, ஆரோக்கியமான மனவளம் கொண்ட இளைய சமூகத்தை உருவாக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியது.

“இது குழந்தைகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்தான். ஆனால் ஆசிரியரிடம்தான் அதற்கான சூத்திரம் உள்ளது. கவிதை, நாவல் எழுதுவது போலக் கற்பித்தலும் கலை ஆர்வத்தோடு வெளிப்பட வேண்டும். அதற்கு ஆசிரியரின் மனநிலை முக்கியம். மாணவர் அடக்கி ஆளப்படவேண்டியவர்கள் என்ற மனநிலையிலிருந்து ஆசிரியர்கள் விடுபட வேண்டியது அவசியம்” என்கிறார் ஆசிரியர் மற்றும் எழுத்தாளரான வெண்ணிலா.

எளிமைப்படுத்தலாமா?

மறுபுறம் வழக்கமான கல்வித் திட்டம் போல மாற்றுத்திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்பட வாய்ப்பில்லை. படிப்பை மிகவும் எளிமைப்படுத்துவதனால் கல்வித் தரம் குறைந்துபோகிறது எனும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. வழக்கமான பாடத்திட்டத்தின் மூலம் வகுப்பறையில் எல்லாவற்றையும் சொல்லித்தந்துவிட முடியுமா எனும் கேள்வியை எழுப்புகிறார் “கலகல வகுப்பறை” எனும் அமைப்பை நடத்திவரும் சிவா.

படிப்பதற்கான ஊக்கத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்துவதுதான் சிறந்த கல்வி. அதற்கு மாற்றுச் சிந்தனை கொண்ட ஆசிரியர்கள் ஒன்று திரள வேண்டும் எனும் அழைப்புவிடுக்கிறார் இவர். ஆசிரியர்களுக்கான மாற்றுக் கல்விப் பயிற்சி முகாமை நடத்திவரும் சிவா நாடகம், ஓவியம், கதை சொல்லுதல், மாற்றுத்திரைப்படங்கள் திரையிடல், விவாத மேடைகள் நடத்துவது என ஆசிரியர்களைப் பன்முகத் திறனாளிகளாக மாற்றுவதற்கான அத்தனை முயற்சிகளையும் எடுத்துவருகிறார்.

“சமையலறையில் அம்மாவோடு குழந்தைகள் நேரம் செலவழிக்க வேண்டும். கணிதப் பாடத்தையும், சமூகவியலையும் அனுபவப்பூர்வமாகக் கற்றுக்கொள்ளும் இடம் சமையலறைதான். என் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நான் தரும் வீட்டுப்பாடம் இதுதான்” எனக் கூறுகிறார் மதுரை முத்துப்பட்டியில் மாற்றுக் கல்விக்கூடம் நடத்திவரும் பாண்டியராஜன்.

இப்படி மாற்றுக் கல்வித் திட்டத்தை முன்வைத்து ஆக்கப்பூர்வமாகச் செயல்படும் ஏராளமான ஆசிரியர்களையும், பேராசிரியர்களையும் சந்திக்க முடிகிறது. அதே போன்று இன்றைய கல்வித்திட்டம் நெகிழ்வுத்தன்மை கொண்டதாகவே உள்ளது என்பதும் புரியவருகிறது. ஆனால் செயல்பாட்டில் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதிலும் பன்முக அறிவுத்திறன் போன்ற புதிய போக்கை அமல்படுத்தத் தேவை மாற்றத்தைக் கொண்டாடும் சமூகம். அது விரைவில் சாத்தியப்படும் எனும் நம்பிக்கையோடு பீடு நடைபோடுவோம் வாருங்கள்.

வாசகர்கள் கவனத்திற்கு...

இப்பகுதிக்கு நீங்களும் பங்களிக்கலாம். கல்வி, தொழில் வாழ்க்கை, ஆளுமை வளர்ச்சி, இளைஞர் உலகம், இளம் சாதனையாளர் உள்ளிட்ட விஷயங்களைக் குறித்து எங்களுக்கு எழுதலாம்.

கடிதத் தொடர்புக்கு:

தி இந்து, கஸ்தூரி மையம், 124,

வாலாஜா சாலை, சென்னை - 600002.

மின்னஞ்சல் முகவரி: vetrikodi@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x