Last Updated : 20 Apr, 2015 08:59 AM

 

Published : 20 Apr 2015 08:59 AM
Last Updated : 20 Apr 2015 08:59 AM

இன்று அன்று: 1939 ஏப்ரல் 20 | பிரமிள் எனும் படைப்பாளி பிறந்தார்

தமிழில் பாரதி, புதுமைப்பித்தனுக்குப் பிறகு கவிதை, உரைநடை, விமர்சனம் என்று பல தளங்களில் முத்திரை பதித்த படைப்பாளி பிரமிள். இலங்கை திரிகோணமலையில் 1939 ஏப்ரல் 20-ல் பிறந்தவர். 1960-களின் இறுதியில் இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்துவிட்டார். எழுத்து, ஓவியம் என்று இரண்டு துறைகளிலும் நுட்பமான திறன்கொண்ட இவர், கலை களின் நகரமான பாரிஸுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார். எனினும், அது நிறை வேறவில்லை. சென்னையிலேயே தங்கி மகத்தான படைப்புகளைத் தமிழுக்குத் தந்தார். பானுசந்திரன், தர்மு சிவராம், தர்மு அரூப் சிவராம் உட்படப் பல்வேறு புனை பெயர்களில் எழுதினார். சி.சு.செல்லப்பா நடத்திவந்த ‘எழுத்து’ பத்திரிகையில், தனது 20-வது வயதில் எழுதத் தொடங்கினார்.

ஆங்கிலக் கவிதைகளையும் விமர்சனக் கவிதைகளையும் தவிர்த்து, 131 கவிதைகளை மட்டுமே பிரமிள் வெளியிட்டிருக்கிறார். எனினும், பாரதிக்குப் பிறகு நவீனத் தமிழ்க் கவிதையில் மிக முக்கியமான கவிஞராக அவர் கருதப்படுகிறார். ஓவியம், சிற்பக் கலை, மெய்யியல் போன்றவற்றிலும் அபூர்வ மான மேதைமையை வெளிப்படுத்தியவர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு நிறைய படைப்புகளை மொழிபெயர்த்திருக்கிறார். ‘கைப்பிடியளவு கடல்’ அவரது முதல் கவிதைத் தொகுப்பு. ‘கண்ணாடியுள்ளிருந்து’, ‘மேல் நோக்கிய பயணம்’ என்பன உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளையும் எழுதியிருக் கிறார். ‘லங்காபுரிராஜா’, ‘பிரமிள் படைப்புகள்’ ஆகிய தொகுப்புகளில் இவரது சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. ‘ஆயி, ‘பிரசன்னம்’ ஆகிய குறுநாவல்களையும் எழுதியிருக்கிறார்.

தனது கவிதைகளில் படிமங்களை அதிகம் பயன்படுத்தியவர் பிரமிள். அமெரிக்க வாழ் தமிழர்கள் வழங்கும் புதுமைப்பித்தன் நினைவுப் பரிசான ‘விளக்கு விருது’ இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. வாழ்நாள் முழுவதும் இலக்கியம், ஆன்மிகத் தேடல் என்று வாழ்ந்துவந்த பிரமிள், வேலூர் அருகில் உள்ள கரடிக்குடியில் 1997 ஜனவரி 6-ல் காலமானார். இறுதிக் காலத்தில் மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் அவரது உடல் செயலிழந்துபோனது. அவர் வாழும் காலத்தில் தனது படைப்புகளைச் சிறுநூல் களாக வெளியிடுவதற்கே மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டார். எழுத்தாளர் கால. சுப்ரமணியத்தின் பெரு முயற்சியால் இவரது படைப்புகள் இன்று முழுமையாக வாசகர்கள் படிப்பதற்குப் புத்தகங்களாகக் கிடைத்துள்ளன.

‘சிறகிலிருந்து பிரிந்த

இறகு ஒன்று

காற்றின்

தீராத பக்கங்களில்

ஒரு பறவையின் வாழ்வை

எழுதிச் செல்கிறது’

எனும் அவரது கவிதை, தமிழ் வாசகர் களின் மனதில் அழுத்தமாகப் பதிந்துவிட்ட கவிதைகளில் ஒன்று. இந்தியாவில் கடவுச் சீட்டு, அடையாளச் சீட்டு போன்ற ஆவணங்கள் எதுவும் இல்லாமல் வாழ்ந்து மறைந்த கவி அவர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x