Published : 30 Apr 2015 09:48 AM
Last Updated : 30 Apr 2015 09:48 AM

கொல்கத்தா ஈடன் கார்டனில் சூப்பர் கிங்ஸ்- நைட் ரைடர்ஸ் இன்று மீண்டும் பலப்பரீட்சை: சென்னையின் வெற்றிப்பயணம் தொடருமா?

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் 30-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மீண்டும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐபிஎல் போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் எதிரணிகளுடன் தலா இருமுறை மோத வேண்டும். இதன்படி சென்னை கொல்கத்தா இடையை நேற்றுமுன்தினம் சென்னையில் நடைபெற்ற முதல் மோதலில் சென்னை அணி 2 ரன் வித்தியாசத்தில் வென்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மோதல் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களுமே நேற்று சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு சென்றுள்ளனர்.

இந்த போட்டியில் வென்று சென்னையில் ஏற்பட்ட தோல்விக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டிய முனைப்பில் கொல்கத்தா அணி விளையாடும். கொல்கத்தாவில் போட்டி நடைபெறுவது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும்.

அதே நேரத்தில் சூப்பர் கிங்ஸ் அணி தனது வெற்றியைத் தொடரும் முனைப்பில் களமிறங்கும். இப்போட்டியிலும் வென்றால் 7-வது வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் பெற்றுள்ள முதலிடத்தை சூப்பர் கிங்ஸ் அணி உறுதியாக தக்கவைத்துக் கொள்ள முடியும்.

காயம் காரணமாக அஸ்வின் போட்டியில் இருந்து விலகியுள்ளது சூப்பர் கிங்ஸ் அணிக்கு பின்னடைவு. கொல்கத்தாவுக்கு எதிரான முதல் போட்டியில் சென்னை அணியின் பேட்டிங் எடுபடவில்லை. பந்து வீச்சு மற்றும் பீல்டிங் மூலமே வெற்றி பெற்றது. சென்னை அணியின் மிகப்பெரிய பலமே அதன் பேட்டிங் வரிசைதான். முக்கியமாக தொடக்க வீரர்கள் ஸ்மித், மெக்கல்லம் ஆகியோர் ஏற்படுத்தித் தரும் வலுவான அடித்தளத்தை பின்பற்றி பின்னர் களமிறங்கும் ரெய்னா, தோனி, டு பிளெஸ்ஸி, பிராவோ ஆகியோர் ஸ்கோரை உயர்த்தி வருவதை வழக்கமாக கொண்டி ருந்தனர்.

ஆனால் கொல்கத்தாவுக்கு எதிரான முதல் போட்டியில் நடு வரிசை, பின் வரிசை பேட்டிங் எடுபடவில்லை. எனவே இப்போட்டியில் அந்த தவறுகளை சூப்பர் கிங்ஸ் அணி திருத்திக் கொண்டால் மிகப்பெரிய ஸ்கோரை எட்ட முடியும். எனினும் இருபது ஓவர் கிரிக்கெட்டில் முக்கியமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் கடைசி ஓவர் கூட ஆட்டத்தின் முடிவை மாற்றி அமைக்கும் வகையில் அமைவதை நாம் பல போட்டி களில் பார்த்து இருக்கிறோம். எனவே இப்போட்டியில் வெற்றியை எளிதில் கணித்துவிட முடியாது.

இரு அணிகளும் இதுவரை 15 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் 10 போட்டிகளில் சூப்பர் கிங்ஸ் அணியும், 5 போட்டிகளில் நைட் ரைடர்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளன.

போட்டி நேரம்: இரவு 8

நேரடி ஒளிபரப்பு: சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x