Last Updated : 11 Apr, 2015 08:21 AM

 

Published : 11 Apr 2015 08:21 AM
Last Updated : 11 Apr 2015 08:21 AM

இரு என்கவுன்டர்கள் - சில செய்திகள்

நம் சட்டங்களுக்கு இவ்வளவுதான் மதிப்பா என்ற கேள்வியை இந்தச் சம்பவங்கள் எழுப்பியுள்ளன.

தெலங்கானா, ஆந்திர மாநில ஆட்சியாளர்கள் முன்னாள் ஆந்திரப் பிரதேசத்தைப் போலவே, என்கவுன்டர்களையும் பங்கு போட்டுக் கொள்வதாகத் தோன்றுகிறது. ஏப்ரல் 7-ம் தேதி தெலங்கானாவின் நால்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த அலயருக்கு அருகில், வாரங்கல் சிறை யிலிருந்து ஹைதராபாத் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட 5 விசாரணைக் கைதிகள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதே நாளில், ஆந்திரத்தின் செம்மரக் கடத்தல் தடுப்புத் தனிப்படைப் போலீஸாரால் 20 தமிழகக் கூலித் தொழிலாளர்கள் (15 பேர் பழங்குடி இனத்தவர்) ‘என்கவுன்டர்’ செய்யப்பட்டனர்.

தெலங்கானா ‘என்கவுன்டர்’ பட்டப்பகலில் நெடுஞ் சாலையொன்றில் நடந்துள்ளது. சிறை வேன் ஒன்றில் இருக்கைகளோடு சேர்த்துப் பிணைத்திருந்த விலங்குகளை அந்த 5 விசாரணைக் கைதிகளுக்குப் பூட்டி அழைத்துச் சென்றவர்கள் ஏ.கே. 47 ரகத் துப்பாக்கி ஏந்திய 17 போலீஸ்காரர்கள். அந்த 5 பேரும் வேனுக்குள்ளேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் கொல்லப்பட்டதைப் பற்றிய போலீஸ் விளக்கம், இந்திய ஊடகங்கள் மிகப் பெரும்பாலானவற்றால் எந்தக் கேள்வியும் இல்லாமல் அப்படியே பரப்பப்பட்டது. அதாவது, அந்த விசாரணைக் கைதிகளில் ஒருவரான விகாருதீன் அகமது சிறுநீர் கழிப்பதற்காக வேனை நிறுத்தச் சொன்னாராம். சிறுநீர் கழித்துவிட்டுத் திரும்பி வந்ததும், ஒரு போலீஸ் அதிகாரியின் கையில் இருந்த ஏ.கே.47 துப்பாக்கியைப் பறிக்க முயன்றாராம். அதேவேளை வேறு இரு விசாரணைக் கைதிகள் இரண்டு போலீஸ்காரர்கள் மீது பாய்ந்து அவர்களிடமிருந்த ஆயுதங்களைப் பறிக்க முயன்றனராம். எனவே ‘தற்காப்பு’ கருதி மற்ற போலீஸ்காரர்கள் சுட்டதில் அந்த 5 விசாரணைக் கைதிகளும் மாண்டனராம். கவனிக்க வேண்டிய விஷயம்: அச்சு ஊடகங்களில் வெளிவந்த புகைப்படங்களும்கூட விசாரணைக் கைதிகள் விலங்குகள் பூட்டிய வண்ணம், தங்கள் இருக்கைகளிலேயே பிணங்களாகக் கிடப்பதைக் காட்டின.

சட்டத்தின் மதிப்பு!

அந்த 5 பேரும் தடை செய்யப்பட்ட ‘சிமி’ என்னும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள், பிரதமர் மோடியைக் கொலை செய்வது உட்பட பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள தஹ்ரீக்-கலிபா-இ- இஸ்லாம்’ என்னும் அமைப்பை உருவாக்கியவர்கள்; இந்த விஷயங்களை ஒப்புக் கொள்ளும் வாக்குமூலத்தை விகாருதீன் அகமதுவே போலீஸ் விசாரணையின்போது தந்திருக்கிறார் என்னும் போலீஸ் விளக்கம், மக்களின் ‘பொதுப் புத்தியில்’, இந்த ‘என்கவுன்டரை’ நியாயப்படுத்துவதற்காக ஊடகங் களாலும் பரப்பப்பட்டது. ஒருவர் மீது எத்தகைய குற்றம்சாட்டப்பட்டாலும், முறைப்படியான நீதி விசாரணை முடியும் வரை அவர் ‘நிரபராதி’ என்றே கருதப்பட வேண்டும் என்று கூறும் நமது சட்டத்துக்கு இவ்வளவுதான் மதிப்பு.

யாருக்கும் அக்கறை இல்லை!

20 என்னும் எண்ணிக்கை நமக்கு அதிர்ச்சியைத் தருகிறது என்றாலும், செம்மரக் ‘கடத்த’லில் ஈடுபட்ட தாகச் சொல்லப்படும் தமிழகத் தொழிலாளிகள் கொல்லப்படுவது இது முதல் தடவை அல்ல. ஆந்திர அரசாங்கத்தின் கணக்குப்படியே அந்த மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் ஆயிரக் கணக்கான தமிழ்த் தொழிலாளிகள் மாதக் கணக்கில் வாடிக் கொண்டிருக்கின்றனர். ஆந்திரத்தைச் சேர்ந்த இரு வனத் துறை அதிகாரிகள் செம்மரக் கடத்தல் மாஃபியாக்களால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். சித்தூரிலிருந்து ஏறத்தாழ 450 கி.மீ. தொலைவிலுள்ள விசாகப்பட்டினத்துக்குக் கடத்திச் செல்லப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஆந்திர அரசாங்கமே கூறுகிறது.

அரிய வகை மரங்கள் என்று கருதப்படும் செம்மரத்தை வெட்டி விற்பனை செய்வதற்கு அனுமதி அளித்தது மன்மோகன் சிங் அரசாங்கம். அந்த மரத்தை வெட்ட பசுமைத் தீர்ப்பாயம் விதித்த தடையை அகற்றியது ஹைதராபாத் உயர் நீதிமன்றம். கோடிக் கணக்கான ரூபாயை லஞ்சமாக ஈட்டித்தரும் செம்மரக் கடத்தல் வாணிபம் ஆந்திர அரசியல்வாதிகளைக் கவர்வதில் வியப்பில்லை. பழங்குடி மக்களின் நலன்களைப் பாதுகாக்கத் தமிழகத்தில் எந்த அரசாங்கத்துக்கும் அக்கறை இல்லாமல் போனதால், வனப் பகுதிகளில் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்த பழங்குடி இனத் தொழிலாளிகளைச் செம்மரக் கடத்தல் மாஃபியாக்களிடம் கூலி வேலை செய்வதற்கு அனுப்புபவர்கள் தமிழகத்தில் அரசியல் செல்வாக்குள்ள ‘கான்ட்ராக்டர்’கள்.

என்னவாயிற்று இடஒதுக்கீடு?

தமிழகத்திலுள்ள பழங்குடியினருக்கான 1% இட ஒதுக்கீட்டைக்கூட நிரப்ப முடியாத அளவுக்கு அவர் களிடையே படித்தவர்கள் இல்லை. 2006-ம் ஆண்டு இந்திய வன உரிமைகள் சட்டத்தின்படி தமிழகப் பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட பட்டாக்களின் எண்ணிக்கையை விரல் விட்டுக்கூட எண்ண முடியாது. தமிழ்நாடு அரசின் 10-வது ஐந்தாண்டுத் திட்டக் குழு, பழங்குடி மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை அவர்களிடமே திருப்பி ஒப்படைக்க ஒரு சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. அதை யாரும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. வன நிலங்களைத் தொழிற்சாலைகளுக்கோ, வேறு பயன்பாட்டுக்கோ ஒதுக்க வேண்டுமென்றால், வன உரிமைச் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும்; கிராம சபைகளின் ஒப்புதல் பெற வேண்டும். இந்த விதிமுறை களைத் தமிழக அரசாங்கம் மதிப்பதே இல்லை.

வனப் பாதுகாப்புச் சட்டங்களை மீறிய குற்றங்களைச் செய்தவர்கள், மரம் கடத்தியவர்கள் என்றெல்லாம் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் நூற்றுக் கணக்கான தமிழகப் பழங்குடி மக்கள் தமிழகச் சிறைகளில் வாடுகிறார்கள். தமிழகத்தில் சந்தன மரங்களும், சந்தன மரத் தேனும் நிரம்பியிருந்த ஜவ்வாது மலைப் பகுதியில் பெயருக்குக்கூட அந்த மரம் இல்லை. வனக் கல்லூரி வளாகத்திலிருந்தே சந்தன மரங்கள் வெட்டப்பட்ட செய்திகள் வந்துள்ளன. வீரப்பனைக் கொண்டு கடத்தப்பட்ட சந்தன மரங்களை எடுத்துச் சென்றவர்கள், விற்றவர்கள் ஒருவர்கூடச் சட்டத்தின் பிடிக்கு அகப்படவில்லை. மாறாக, வீரப்பனைத் தேடுதல் என்ற பெயரில் அப்பாவி கிராம மக்கள் அனுபவித்த கொடுமை சொல்லி மாளாது. சந்தன மரக் கடத்தலை எதிர்த்த வாச்சாத்திப் பழங்குடி மக்களின் அவலம் இன்றும் நீடிக்கிறது.

‘தண்ணீரைவிடக் கெட்டியானது ரத்தம்’ என்பார்கள். எனவேதான் தமிழக-ஆந்திர-அனைத்திந்திய- சர்வதேச மாஃபியாக்களும் அரசியல்வாதிகளும் அதிகாரிகள் வர்க்கத்தினரும் ஒன்றிணைந்துள்ளனர். ஆக, இதை வெறும் தெலுங்கர் - தமிழர் பிரச்சினையாக மட்டுமே பார்க்க முடியாது.

- எஸ்.வி. ராஜதுரை,
மார்க்ஸிய-பெரியாரிய அறிஞர், ‘எக்ஸிஸ்டென்ஷியலிசம்’, ‘அந்நியமாதல்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர், இவரது மொழிபெயர்ப்பில் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ நூல் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது.
தொடர்புக்கு: sagumano@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x