Published : 17 Apr 2015 07:56 AM
Last Updated : 17 Apr 2015 07:56 AM

மொழி மாற்று தொடருக்கு எதிராக போராட்டம்: நடிகைகள் ராதிகா, நளினி மீது வழக்கு பதியக் கோரி மனு தாக்கல்

மொழி மாற்று தொலைக் காட்சித் தொடர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி, தனியார் தொலைக்காட்சி நிறுவ னங்களுக்கு மிரட்டல் விடுத்ததாக நடிகைகள் ராதிகா, நளினி, இயக்குநர் விக்கிரமன் ஆகியோர் மீது வழக்கு பதிய உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விருதுநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.கார்மேகம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

மொழி மாற்று சின்னத்திரை தொடர்களுக்கு எதிராக சென்னையில் ஏப்.15-ம் தேதி போராட்டம் நடத்திய சின்னத் திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராதிகா, சின்னத்திரை நடிகர்கள் சங்கத் தலைவர் நளினி, தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்கிரமன் ஆகியோர், மொழி மாற்று தொடர்களை ஒளிபரப்பும் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நேரில் சென்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

பிற மொழி தொடர்களை தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடுவதால், தமிழ் தொடர் தயாரிப்பு பாதிக்கப்பட்டு வருவதாக வேதனையடைந்து தமிழ் சின்னத் திரை இயக்குநர் பாலாஜி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி ராதிகா உள்ளிட்டவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட் டுள்ளனர்.

ஆந்திரத்தில் தமிழக கூலி தொழிலாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பாக பேசப்படும் இந்த நேரத்தை பயன்படுத்தி பிற மொழி தொடர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர். போராட்டம் நடத்தியவர்கள் ஆளும் கட்சியின் ஆதரவாளர்கள். தமிழ்நாடு அரசு கேபிள் கழகம் இப்போராட்டத்தை ஊக்குவிக்கிறது.

நடிகைகள் ராதிகா, நளினி, இயக்குநர் விக்கிரமன் ஆகியோர் மீது வழக்கு பதியவும், மொழி மாற்று தொடர்களை ஒளிபரப்பும் தனியார் தொலைக்காட்சி நிறுவ னத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் எனக் கூறப் பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன் நேற்று விசார ணைக்கு வந்தது. விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x