Last Updated : 03 Feb, 2015 11:11 AM

 

Published : 03 Feb 2015 11:11 AM
Last Updated : 03 Feb 2015 11:11 AM

இந்தியா - சீனா இடையே பிரிக்க முடியாத பிணைப்பு: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

இந்தியா சீனா இடையே பிரிக்கமுடியாத பிணைப்பு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

சீன சுற்றுலாப் பயணிகளை இந்தியாவுக்கு ஈர்க்கும் வகையில் ‘விசிட் இந்தியா இயர் 2015’ என்ற நிகழ்ச்சி பெய்ஜிங்கில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியின் வீடியோ உரை திரையிடப்பட்டது.

இதில் மோடி பேசியதாவது: ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியா சீனா இடையே உறவுப் பிணைப்பு உள்ளது. இந்த நூற்றாண்டில் இந்த உலகுக்கு நாம் மீண்டும் ஏதாவது கொடுத்தாக வேண்டும்.

இதற்கு நமது பார்வையை ஒருவர் மீது ஒருவர் திருப்புவதும், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதும் மிகவும் அவசியம்.

தற்போது பிரிக்கமுடியாத பிணைப்பு மூலம் நாம் இணைக்கப்பட்டுள்ளோம். இரு நாடுகளும் நெருங்கி வரும்போது, இருநாட்டு மக்களின் போக்குவரத்தும் அதிகரிக்கும்.

குஜராத் மாநிலத்தின் வத்நகருக்கு சீனப்பயணி யுவான் சுவாங் பயணம் செய்துள்ளார். இந்தப் பகுதியைச் சேர்ந்தவன் என்பதால் எனக்கு தனிப்பட்ட முறையில் சீனாவுடன் தொடர்பு உள்ளது. இவையெல்லாம் வெறும் வரலாறு மட்டுமல்ல. இரு நாடுகள் இடையிலான சிறந்த பிணைப்பையும் காட்டுகிறது.

நான் சீனா வந்தபோது, சிறப்பான அனுபவங்களை பெற்றேன். சீனா பற்றி நான் ஏராளமான புத்தகங்கள் படித்துள்ளேன். ஆனால் எனது அனுபவங்கள் தனித்தன்மை வாய்ந்தவையாக இருந்தன.

சீன அதிபர் ஜின்பிங் கடந்த ஆண்டு இந்தியா வந்தார். இந்த ஆண்டு நான் சீனாவுக்கு வருகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x