Published : 18 Feb 2015 12:52 PM
Last Updated : 18 Feb 2015 12:52 PM

இறக்கும் வன உயிரினங்களின் உடலில் விஷம் தடவி புதைப்பு: வேட்டை கும்பலைத் தடுக்க வனத்துறை நடவடிக்கை

தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வனப்பரப்பு அதிக அளவில் உள்ளது. இங்கெல்லாம் காட்டுப்பன்றி, மான், கடமான், வரையாடு உள்ளிட்ட பல வனவாழ் உயிரினங்கள் வசித்து வருகின்றன. இவை இரை அல்லது நீர்தேடி அல்லது வழி தவறி வனப்பகுதியை விட்டு ஊருக்குள் நுழையும்போது நாய்களால் கடித்து கொல்லப்படுவதுண்டு. வேட்டைக்காரர்களால் கொல்லப் படுவதும் உண்டு.

அதேபோல வாகனங்களில் அடிபட்டும், நோய் தாக்கியும் இறந்து விடுகின்றன. இப்படி இறக்கும் உயிரினங்களில் இறைச்சிக்கு உகந்ததாகக் கருதப்படும் உயிரினங்களின் உடலை புதைத்த பிறகும் மாமிச பிரியர்கள் சிலர் தோண்டி எடுப்பதாக கூறப்படுகிறது. இதனால், உயிரினங்களின் உடல்களை காக்கும் வகையில் வனத்துறையினர் அவற்றின் உடலில் விஷம் தடவி மண்ணுக்குள் புதைக்கும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையைச் சேர்ந்த சிலர் கூறியதாவது:

தேசிய விலங்கான புலி இறந்தால் அதன் உடலை எரித்து அடக்கம் செய்வர். யானைகள் இறக்கும்போது பள்ளம் தோண்டி புதைப்பது, எரிப்பது என இருவித நடைமுறைகளும் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், மான் வகைகள், வரையாடு, காட்டுப்பன்றி போன்றவை மாமிசத் துக்காக விரும்பப்படும் உயிரினங் கள். பல்வேறு காரணங்களால் இறக்கும் இதுபோன்ற உயிரினங்களை முன்பெல்லாம் வனப்பகுதியில் அல்லது வனத்துறை அலுவலக வளாகத்தில் சாதாரண முறையில் அடக்கம் செய்வோம்.

இதனை அறிந்த சிலர் இரவில் அந்த உடல்களை இறைச்சிக்காக தோண்டியெடுக்கும் சம்பவங்கள் பரவலாக நடந்து வந்தது. இதைத் தடுக்க விஷத்தை உடலில் தடவி அடக்கும் செய்யும் நடைமுறை தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகி றது.

பிரேத ஆய்வு செய்ய உடலை அறுத்த பிறகு உடல் முழுக்க விஷத்தை தடவி மண்ணுக்குள் புதைக்கப்படுகிறது. இறந்த உயிரினத்தின் உடல் மீது விஷத்தை தடவுவது வேதனை அளித்தாலும், வேட்டை கும்பலிடம் இருந்து காக்க இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x