Published : 08 Feb 2015 11:41 AM
Last Updated : 08 Feb 2015 11:41 AM

பன்றி வளர்ப்பில் வருவாய் ஈட்டி ஆதரவற்ற முதியோருக்கு நேசக்கரம் நீட்டும் பாதிரியார்

திண்டுக்கல் அருகே பாதிரியார் ஒருவர் பன்றிகளை வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயில், இறக்கும் தறுவாயில் உள்ள ஆதரவற்ற முதியோர், மனநலன் பாதித்தவர்களை தேடிக் கண்டு பிடித்து குழந்தைகளைப்போல பரா மரித்து, அவர்கள் மரணமடையும் போது முறையாக நல்லடக்கம் செய்து வருகிறார்.

முதியோரும், மனநலன் பாதிக்கப் பட்டவர்களும் குழந்தைகளைப்போல பராமரிக்க, பாதுகாக்கப்பட வேண்டி யவர்கள். ஆனால், இவர்களால் இனி என்ன பயன் என உறவுகளாலேயே கைவிடப்படும் அவலம் உள்ளது.

பெற்ற பிள்ளைகள், வயதான பெற்றோரையே பாரமாக நினைக் கும் இந்தக் காலத்தில், திண்டுக்கல் அருகே மெட்டூர்கேட் கொடைரோடு என்னும் இடத்தில் கேரள கிறிஸ் தவப் பாதிரியார் ஆர்.வி.தாமஸ் என்பவர் சாலைகள், தெருவில் உணவு கிடைக்காமல் தவிக்கும் ஆதர வற்ற, இறக்கும் தறுவாயில் உள்ள முதியோர், மனநலன் பாதிக்கப் பட்டவர்களை மீட்டு, அவர்களை குளிப்பாட்டி, இறக்கும்வரை குழந்தைகளைப் போலப் பாதுகாத்து பராமரித்து இறந்தவுடன் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்கிறார்.

இதுவரை இவர் 1,400 பேரை மீட்டு பாதுகாத்து அவர்கள் இறந்தபின், அடக்கம் செய்து அரிதான சேவையை மேற்கொண்டுள்ளார்.

325 முதியவர்கள்

தற்போது தனது கருணை இல்லத்தில் 75 மனநலன் பாதிக்கப் பட்டவர்கள் உட்பட 325 முதியவர்களை பராமரித்து வருகிறார். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் எழுந்து நடக்க முடியாதவர்கள். தீவிர நோயால் இன்றோ, நாளையோ மரணத்தை எதிர்நோக்கி உள்ளனர். பாதிரியார் தாமஸும், அவரது இல்ல ஆண், பெண் ஊழியர்களும் அவர்களை குளிப்பாட்டி உடைகளை மாற்றுகின்றனர். இவர்களில் வாரம் 5 பேர் இயற்கை எய்துகின்றனர்.

இவர்களைப் பராமரிப்பதற்காக, தன்னுடைய கருணை இல்லத்தில் பாதிரியார் தாமஸ், பன்றிகளை வளர்க்கிறார். இந்தப் பன்றிகளை இறைச்சிக்காக விற்பதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டும், பொதுமக்கள் தங்கள் திருமண நாள், பிறந்த நாளில் வழங்கும் நன் கொடை, பொருளுதவியிலும் இவர், கைவிடப்பட்டவர்களை பராமரிக்கி றார். இவர்கள் இறந்தவுடன், உடல் களை தனது கருணை இல்லத்திலேயே அடக்கம் செய்கிறார்.

ஆத்மார்த்தமான சேவை

பாதிரியார் தாமஸ், லண்டனில் தேவாலயத்தில் பங்குத்தந்தையாக இருந்துவந்தார். ஆதரவற்றோருக் காக, தனது ஆன்மிகப் பணியை விட்டுவிட்டு வந்து, ஆத்மார்த்தமான இந்த சேவையில் ஈடுபட்டு வருகிறார்.

இதுகுறித்து பாதிரியார் ஆர்.வி. தாமஸ் ‘தி இந்து’விடம் கூறியது: ‘‘9 ஆண்டுகளுக்கு முன், ஒருமுறை மதுரை அண்ணா நகரில் ஒரு ஹோட்டல் முன் உடைந்துகிடந்த குப்பைத்தொட்டியில் எஞ்சிய உணவைத் தின்றுகொண்டிருந்த நாய்கள், பன்றிகளோடு போராடி ஒருவர் எச்சில் உணவை தின்று கொண் டிருந்தார். ஆதரவற்ற ஒருவர் ஒருவேளை உணவுக்குக்கூட சிரமப் படுவதை கண்கூடாகப் பார்த்த நான், உடனே அந்த நபரை வீட்டுக்கு அழைத்து வந்து குளிப்பாட்டி பராமரித்தேன். இவர் ஒருவரை மட்டும் பராமரித்தால் போதாது. இவரை போல ஆதரவற்றவர்களை முடிந்த வரை மீட்டு பராமரிக்கத் தொடங்கி னேன். இவர்களை பராமரிப்பதற்காக, என்னுடைய கருணை இல்லத்தில் 140 பன்றிகளை வளர்க்கிறேன். இவற்றை வளர்த்து விற்பதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டும், தெரிந்தவர்கள், தேடி வந்து உதவுபவர்கள் மூலமும் ஆதர வற்றோரை பாதுகாக்க முடிகிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x