Published : 08 Feb 2015 11:15 AM
Last Updated : 08 Feb 2015 11:15 AM

பெண் மீது ஆசிட் வீசிய வழக்கில் 2 இளைஞர்கள் விடுதலை: ஆய்வாளருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம்

இளம்பெண் மீது ஆசிட் வீசியதாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞர்கள் இருவரையும் வழக்கிலிருந்து விடுவித்ததுடன், பொய்யாக வழக்கு பதிவு செய்ததாக ஆதம்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் தங்கேஸ்வரன் மகள் தீபா (20). இவரை, அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜன் காதலித்து வந்ததாகவும், ஆனால், தீபா சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த நாகராஜன், 2009, ஆகஸ்டில் தீபா மீது ஆசிட் வீசியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தீபாவின் தாய் அகல்யா ஆதம்பாக்கம் போலீஸில் புகார் கொடுத்தார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த தீபாவும் வாக்குமூலம் அளித்தார். அதன்பேரில், ஆதம்பாக்கம் போலீஸார் நாக ராஜனையும், அவருக்கு உடந்தை யாக இருந்ததாகக் கூறி கோபாலகிருஷ்ணன் என்பவரை யும் கைது செய்தனர்.

இந்த வழக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தி, குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி நாகராஜனையும், கோபாலகிருஷ்ணனையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

மேலும், பொய்யாக வழக்கு பதிவு செய்ததால் கோபால கிருஷ்ணனுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக, ஆதம்பாக்கம் காவல் ஆய்வாளர் பழனிவேல் அவரது ஊதியத்திலிருந்து ரூ. 5 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப் பளித்தார்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் ஆனூர் வெங்கடேசன் ஆஜரானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x