Published : 16 Feb 2015 09:06 AM
Last Updated : 16 Feb 2015 09:06 AM

எது நல்ல அரசியல் கலாச்சாரம்?

டெல்லி காட்சிகள் ஜனநாயகத்துக்கு வலு சேர்க்கின்றன. டெல்லி தேர்தல் ஆஆக - பாஜக இடையிலான போட்டி என்பதைத் தாண்டி மோடிக்கும் அர்விந்துக்கும் இடையேயான போர்போல உருவாக்கம் பெற்றது. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியானதும் காட்சிகள் அப்படியே மாறிவிட்டன.

தேர்தல் ஆணைய அறிவிப்புகள் வெளியானபோதே பிரதமர் மோடி, அர்விந்த் கேஜ்ரிவாலைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பாஜக தலைவர்கள் பலரும் அர்விந்துக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். முதலில், பாஜக மூத்த தலை வரும் அமைச்சருமான வெங்கய்ய நாயுடுவை அர்விந்த் சந்தித்தார். தொடர்ந்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். அடுத்து, பிரதமர் மோடியை சந்தித்தார். எல்லோரையுமே பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைத்தார். வேறு சில அலுவல்கள் இருப்பதால், தம்மால் விழாவில் பங்கேற்க முடியாது என்று தெரிவித்தாலும் வாழ்த்து தெரிவித்து, அர்விந்த் அரசுக்குத் தங்கள் அரசு உரிய ஒத்துழைப்பைத் தரும் என்று எல்லோருமே தெரிவித்தனர்.

இதெல்லாம் ஆரோக்கியமான அரசியல் கலாச்சாரத்துக்கான அடை யாளம். டெல்லியில் எப்போதுமே இந்தக் கலாச்சாரம் இருக்கிறது. அது மேலும் அப்படியே தொடர்வது நல்ல விஷயம். டெல்லியில் கோலோச்ச வேண்டும் எனும் ஆசை தமிழ்நாட்டில் எல்லாக் கட்சியினருக்கும் இருக்கிறது. ஆனால், இப்படியான நல்ல விஷயங்களெல்லாம் அவர்கள் கண்களில் படுவதில்லை; அல்லது காரிய மறதி அவர்களைப் பீடித்துக்கொள்கிறது.

நிற்க. பிரதமர் மோடியுடனான சந்திப்பில், “டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனும் ஒரு கோரிக்கையை முன்வைத்திருக்கிறார் அர்விந்த். முக்கியமான, நியாயமான கோரிக்கை இது. டெல்லி மாநில அரசு என்பது இப்போது பெயரளவிலான அரசாகத்தான் இருக்கிறது; நில அதிகாரம், நிதி அதிகாரம், காவல் துறை அதிகாரம் யாவும் மத்திய அரசிடம் இருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். டெல்லி என்பது வெறும் நிர்வாகத் தலைநகரமாக இருந்த காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் இவையெல்லாம். ஒவ்வொரு நாளும் பல்வேறு மாநிலங் களிலிருந்தும் வருபவர்களால் நிரம்பி இன்றைக்கு டெல்லியின் பரப்பு நீண்டு விரிந்து படர்ந்து பரவிக்கொண்டிருக்கிறது. தலைநகரின் பாது காப்பு நீங்கலாக, ஏனைய அதிகாரங்களை இன்னமும் மத்திய அரசே வைத்திருப்பதில் நியாயம் இல்லை.

எல்லாக் கட்சிகளுமே இதை உணர்ந்திருக்கின்றன. ஆஆக மட்டும் அல்லாமல், பாஜகவும் காங்கிரஸும்கூடத் தம்முடைய தேர்தல் அறிக்கையில் இதுகுறித்து குறிப்பிட்டிருக்கின்றன. ஆனால், நடை முறைப்படுத்த யாருக்கும் மனம் இல்லை. மோடி இதுகுறித்து எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை. பிரதமர் அலுவலகம் வெளி யிட்டிருக்கும் செய்திக்குறிப்பு, “அர்விந்த்தின் கோரிக்கை பரிசீலிக்கப் படும்” என்று மையமாகத் தெரிவித்தாலும், பாஜக வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பு, “இது பல தசாப்தங்களாக நிலுவையில் இருக்கும் கோரிக்கை” என்று இழுக்கிறது. ஒருவேளை மாநில அந்தஸ்து என்ற அங்கீகாரத்தை வாங்கித்தந்த பெருமை ஆஆகவுக்குப் போய்விடக் கூடும் என்ற அரசியல் அச்சமாகக்கூட இருக்கலாம். அப்படியொரு எண்ணம் இருந்தால் அது அர்த்தமற்றது.

ஆஆக மட்டும் டெல்லி மக்களுக்குக் கடமைப்பட்டதல்ல; பாஜகவுக்கும் அந்தக் கடமை இருக்கிறது. மக்களவைத் தேர்தலில் டெல்லியின் 7 தொகுதிகளிலும் பாஜகவைத் தேர்ந்தெடுத்தவர்கள் டெல்லி மக்கள் என்பதை பாஜக மறந்துவிடக் கூடாது. தவிர, ஆரோக்கிய மான அரசியல் கலாச்சாரம் வெறும் வார்த்தைகளோடு முடிந்துவிடக் கூடாது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x